Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 10 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்

ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் யாரவது உறவுக்காரங்க நம்ம வீட்டுக்கு வந்தால், ஆமா உன் பையன் எந்த கிளாஸ் படிக்கிறான் என்று கேட்பார்கள். இப்பெல்லாம் பைய்யன எந்த ஸ்கூல்ல சேர்த்திருக்கே? என்றே பெரும்பாலும் கேட்கிறார்களல்லவா?

நாமும் கெத்தா அந்த ஊரிலேயே அதிகமா செலவு வைக்கின்ற ஒரு பள்ளியின் பெயரை சொல்லுகிறோம். கூடவே, அவனுக்கு லீவ்வே எடுக்க முடியாது. டெய்லி ஏதாச்சும் பிராஜெக்ட் கொடுத்துட்றாங்க..  ஹும்ம் எங்கங்க நகர முடியுது?? இதோ இது போன வாரம் பெஸ்ட் டிராயிங்காக ஸ்கூல்ல கொடுத்தாங்க… இதோ இந்த மெடல் டெய்லி அட்டனன்ஸ்காக கொடுத்தாங்க.. ஹும்ம் இங்க பார்த்திங்களா இது போன மாசம் ஹஸ்ட் ஸ்பீச்காக வந்த பிரபலம் கையால வாங்குன ஸ்பெசல் கப்புங்க…


இப்படி பையன் என்னெல்லாம் ஸ்கூல்ல இருந்து "வாங்கி(!!!?)" வந்தானோ அதெல்லாம் காமிச்சு பெருமை பேசிக்கொறோம் அல்லவா??


ஒரு வேலை சாப்பாடாச்சும் பையன் சாப்பிடுவானே என்று சத்துணவு சாப்பாட்டுக்காக அன்று பள்ளிக்கு பெற்றவர்கள் அனுப்பி வைத்தார்கள். இன்றைய நிலை என்ன??


LKG படிக்கிற குழந்தைக்கு எதுக்கு ஏரோபிளைன் மாடல செஞ்சு வர. சொல்லி பிராஜெக்ட் கொடுக்கறாங்க? அந்த குழந்தையால் அதை செய்ய முடியும் அல்லது அதன் திறனை வளர்த்துவதா முதல் நோக்கம்?? இல்லை எப்படியும் நீங்க தான் அந்த புராஜெக்ட்டை செய்து தரப்போறீங்க அல்லது கடைல வாங்கியாவது கொடுப்பீர்கள் என்று நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். 


இங்கே பள்ளி நிர்வாகத்தின் வாடிக்கையாளர் நீங்கள். உங்களுக்குள் தற்பெருமையை தூண்டி விட்டாலே தவிர அவர்களின் வண்டி ஓடாது. 


இது ஒரு தொழில் தத்துவமே. நம்முடைய வாடிக்கையாளர் யார்? அவர்கள் நம்மை தேடி வருவதன் நோக்கம் என்ன என்பதை சரியாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அறத்திற்கு மாறான செயல் எதுவுமில்லை. மக்களின் மனநிலையும் இதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. இது காலச்சக்கரத்தின் கட்டாய மாற்றமே…


மார்க்கெட்டை பொறுத்தவகையில் வாடிக்கையாளர்களின் மனநிலை ஒரே இடத்தில் ஒரே தேவையில் நிற்காது. அது ஒரு ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஓடிக்கொண்டே இருக்கும். அதை இழுத்து பிடித்து ஓரிடத்தில் நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்டால் ஒரு தொழில்முனைவோனாக தோற்றுவிடுவீர்கள். அவர்களின் "ஈகோ" பாய்ண்ட் எது என்பதை கண்டுபிடித்து அதை சரியாக அடியுங்கள். அவ்வப்போது அந்த ஈகோவிற்கு தீனி கொடுத்துக்கொண்டே இருங்கள்.


ரோலக்ஸ், ரோல்ஸ்ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், அடிடாஸ், ஆர்ரோவ், பாவ்ல் & செர்க், கேரன் பாய்வ்ர், பார்கெர், பிளாக்பெர்ரி, ப்ளண்டர்ஸ் ப்ரைட், ராயல் சேலஞ்ச், ப்ளாக் லேபில், ரோட்டரி கிளப், இன்ஸ்டாக்ராம் இதெல்லாம் என்ன? வெறும் பிராண்டுகள் என்று அர்த்தபடுத்திவிட்டு கடந்துவிட முடியாது.


இதெல்லாம் பெருமைகள். இந்த பிரேண்ட்கள் வைத்திருப்பவர் சமூகத்தில் பணக்காரர்களாக இருப்பார்கள் என்ற தோற்றத்தை பல ஆண்டுகளாக பதிய வைத்திருக்கிறது. இத்தகைய நிறுவனங்கள் உண்மையில் பொருட்களை தயாரிப்பதில்லை. மாறாக, வாடிக்கையாளர்களின் பெருமையை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. 


அப்ப வசதி படைத்தவர்கள் வாங்கும்படியாக பொருட்களை தயாரிக்க சொல்கிறீர்களா சார்? இதுதானே உங்கள் கேள்வி?


குறிக்க, பெருமை என்பது வெறும் வசதியில் மட்டும் வந்துவிடாது. அது ஒரு கெளரவம். அது ஒரு மகிழ்ச்சி, அது ஒரு தன்னல உணர்வு, அது ஒரு புகழ்ச்சி


வாடிக்கையாளர் தனது ஆழ்மனதில் அதை வாங்குவதால் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்கான உணர்வை தூண்ட வேண்டும்.


இந்தியாவில் டாடா குழுமம் கொரானா நோய் தொற்று காலத்தில் 1500 கோடியை நிவாரண நிதியாக எடுத்து கொடுத்தது. அதே போல சக்தி மசலா 5 கோடி ரூபாயை அள்ளி கொடுத்தது. அத்தகைய சூழ்நிலையில் மக்களின் மனநிலையில் அந்த பிராண்டுகளை வாங்கும் போது ஒரு திருத்தி உண்டாகிறது. ஒரு சமூக அக்கறையுள்ள நிறுவனத்தின் பொருளை நான் வாங்குகிறேன் என்று. சக்தி மசால 10 ரூபாய் மசாலா  பொருட்களை பாக்கெட்டில் விற்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் பணக்காரர்களா?


எந்த தொலைக்காட்சியில் ரியாலிட்டு ஷோ ஒளிபரப்பினாலும் கட்டாயம் ஒரு மாற்று திறனாளியையோ அல்லது மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த ஒருவரையோ போட்டியாளர்களில் ஒருவராக திணித்து வைத்திருப்பார்கள். பார்வையாளர்களின் இரக்க குணத்தை தட்டி எழுப்பி அதன் மூலம் தங்கள் ஷோவிற்கான டி.ஆர்.பியை ஏற்றிக்கொள்வார்கள்.


இந்த அரசியல் தலைவர்களெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் சுகாதார பணியாளர்களை வரவழைத்து அவர்களின் கால்களை கழுவியும், தன் சொந்த அம்மாவை பார்க்க 20 கேமரா மேன்களை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்வதும், கடற்கரைகளில் சமாதி அமைக்க படாதபாடு படுவதும், ரிமோட் கண்ரோலை விசி உடைத்து வீடியோ எடுத்து ஒளிபரப்புவதும், நாம் உலகின் மூத்த குடிகள் என்று நரம்புகள் புடைக்க கையை உயர்த்தி பேசுவதும் எல்லாம் எதற்காக?? ஓட்டு வாங்கனும்னா அவர்களின் உள்ளுணர்வை டச் பன்னனும்ங்க…


தேவைகள் அல்லது கெளரவம் என்ற இந்த இரண்டு விதமான உளவியல் சிந்தனைகளின் வழிகளில் மட்டுமே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பொருள் அல்லது சேவைகளை வாங்குகிறார்கள்.


இதில் மூன்றாவதாக ஒரு உளவியல் சிந்தனையும் இருக்கிறது. அது "முதலீடு" என்ற மந்திரம்.


தொடர்ந்து வாசிப்போம் முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments