பணம் பணம் பணம் : 20

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலைதளம் மூலமா உங்களை 20 ஆவது நாளா  சந்திக்கிறேன். மக்களை ( எதிர்காலத்துல வாடிக்கையாளர்களா மாற கூடிய ) பொருளாதார அடிப்படையில எப்படி பல குழுக்களா பிரிச்சு பார்க்கிறது, அவர்களோட தேவைகள் மற்றும் அவர்களுக்கு  தேவைப்படக்கூடிய சேவைகளை 3 பிரிவுகளா பிரிக்கிறதுங்கறதுல ஆரம்பிச்சு பல விஷயங்களை சொல்லிக்கிட்டே வந்தேன். இடையில முதலீடு -முதலீட்டில் உள்ள  நிலைகள்/ வகைகள் பத்தி சொன்னேன்.விளம்பரம் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள்  பற்றியும் டச் பண்ணேன்.

இதையெல்லாம் ஒவ்வொன்னா சொல்லி உங்களை இந்த தொடரோட கட்டிப்போட்டிருக்கலாம்.ஆனால் இது எல்லாத்துக்கும் அடிப்படையான கவனித்தல் மற்றும் முடிவெடுத்தல் என்ற இரண்டு கலைகளை உங்களுக்கு கை வந்த கலையாக்கிரனுங்கற நெல்ல எண்ணத்தோட மன்னாடிகிட்டிருக்கேன்.

இந்த முயற்சிக்கு இன்னையோட மங்களம் பாடிட்டு மறுபடி பண வேட்டைக்கு அவசியம்  தேவையான  தனி தனி விஷயங்களை ஒவ்வொன்னா பார்ப்போம்.

கவுதம புத்தர்னதும் "உலக துன்பங்களுக்கு ஆசையே காரணம்"ங்கற பாய்ண்டுதான் நமக்கெல்லாம் ஸ்பார்க் ஆகும்.ஆனால் அவரோட "தம்ம பதா" இன்னம் கனமான விஷயங்களை சொல்லுது.

அதுல ரெண்டை மட்டும்  சொல்லி இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறேன்.

எச்சரிக்கை:
இதெல்லாம் பலகாலத்துக்கு மிந்தி தெலுங்கு மொழிபெயர்ப்புல படிச்சது.வரிக்கு வரியே அப்படியே இருக்கும்னு எதிர்பார்க்காதிங்க.ஆனால் அருத்தம் மட்டும் அஃதே.

"உனக்கு நீயே ஒளியாக இரு"   :

உலக வாழ்க்கையில வேணம்னா ஆரையோ ஒருத்தரை ஒளியா நம்பி பயணம் புறப்பட்டுரலாம்.வைகோ மாதிரி பல்பு வாங்கி அல்லாட வேண்டியிருக்கும் அவ்ளதான்.

ஆனால் பண வேட்டையில மட்டும் இந்த பிசினஸ் உதவாது. தேவையான தகவல்களை,விவரங்களை தருவிக்க அவிகளை இவிகளை உபயோகிச்சுக்கலாமே தவிர - நம்ம டேபிளுக்கு வந்த தகவல் ,விவரங்களை சரிபார்த்து  உள் வாங்கிக்க வேண்டியது மட்டும் நாமதேன்.

அதே போல கூட்டு முயற்சியில இறங்கும் போது  நாலு பேரு வந்து சேரலாம்.ஆனால் உங்களுக்கு உங்க முயற்சியில இருக்கிற பிடிப்பு அவிகளுக்கும் இருக்கும்ங்கற கியாரண்டி கிடையாது. அவிக உங்களோட தொடர்ந்து நடை போடுவாய்ங்கங்கறதுக்கும் கியாரண்டி கிடையாது.

எல்லாரும் கழண்டுகிட்ட பிறவு "யாரை நம்பி நான் பிறந்தேன்"ன்னு சோலோவா பாடறது சினிமால சிவாஜிக்கு கரீட்டா இருக்கலாம்.ஆனால் வாழ்க்கையில நமக்கு? அதுக்குள்ற கைப்பணம் மொத்தம் கரைஞ்சு போயிருக்கும்.

கைப்பணம் போயிருச்சுன்னா உங்க சோஷியல் ஸ்டேட்டஸ் மாறிரும். குடும்ப நிலவரம் மாறிரும்.பொஞ்சாதி,புள்ளைங்க பேச்சு நடவடிக்கை மாறிரும். உங்க பாடியில பயோ கெமிஸ்ட்ரியே மாறிரும். அட உங்க சிந்தனைப்போக்கே மாறிரும் .எல்லாம் செட் ரைட் ஆகி நீங்க இன்னொரு இன்னிங்சை துவக்கறதுக்கு ஒரு லாரியத்தனை அர்ப்பணிப்பு உணர்வு வேணம். இதெல்லாம் தேவையா?

 ஆக நமக்கு நாமே ஒளியா இருக்கனும். அதுக்கு நீங்க கவனிக்கிற கலையிலயும் -முடிவெடுக்கிற கலையிலயும் வல்லவர்களாகனும்.

 "எந்நிலையிலும் முட்டாளுடன் உறவு இல்லை" :

2003 ல் நடந்த சம்பவம் ஒன்னை இங்கே சொல்றேன். மேற்படி தம்மபதா மேட்டருக்கு  சிக்குன்னு பொருந்தும்.

ஒரு முன்னாள் கவுன்சிலரும் - ஒரு ஸ்க்ரீன் ப்ரிண்டரும் Glass mets.  முன்னவர் அந்த காலத்துல ஆல்க்கஹாலிக் இல்லை. பின்னவர் குடி நோயாளி . ரெண்டு பார்ட்டியும் லாலா போட்டுக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டிருந்தப்ப நம்மை பத்தி டாப்பிக் வந்திருக்கு. "அவனை பிடிச்சு ( நம்மை) எதுனா வித்யாசமா ப்ளான் பண்ணி பெருசா பைசா சம்பாதிக்கனும்யா" ன்னு முடிவு பண்ணியிருக்காய்ங்க.

அடுத்த வாரம் நம்ம லைனுக்கு வந்தாய்ங்க.நாம ரெண்டு பேரோட சோஷியல் ஸ்டேட்டஸ், பின்னணி, முன்னணி எல்லாத்தையும் அலசி ஒரு ஐடியா கொடுத்தம்.

அதாவது நகராட்சி ஏரியாவுல ரோட் சைட்ல வர்ர எல்லா விளக்கு கம்பத்துக்கும் விளம்பர பலகை அமைச்சுக்கறதுக்கு ஹோல் சேலா கமிஷ்னர் கிட்டே பர்மிஷன் வாங்கி ஃபிக்சடா ஆறு மாசத்துக்கு  டாக்ஸ் கட்டிர்ரது.  நெஜமாலுமே விளம்பர பலகைகள் அமைக்கிறது. எல்லாத்துலயும் .டிவில ஃப்ளாஷ் நியூஸ் மாதிரி  நம்ம ஏஜென்சியோட விளம்பரத்தை ஃபோன் நெம்பரோட வச்சுர்ரது.

மேலும் துடியான இளவட்டங்களை அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டு கான்வாஸ் பண்ணி கு.ப 6  மாச வாடகைக்கு பார்டிகளோட விளம்பரங்களை எழுதி வச்சு காசு பார்க்கிறது

இந்த ஐடியாவ சொன்னதும் கவுன்சிலர் பொட்டை கணக்கெல்லாம் போட்டு பார்த்து அவ்ள நிக்கும் இவ்ள நிக்கும்னு குதிச்சாரு.  நகராட்சியிலயும் ஏதோ பேசி வச்சுக்கிட்டு முதல் கட்டமா ஒரு 100 போர்டு ரெடி பண்ணாரு.ஸ்க்ரீன் ப்ரிண்டரோட கடையிலயே எல்லாம் தவம் கிடந்தது.

அதுக்குள்ள ஸ்க்ரீன் ப்ரிண்டர் வாடகை பாக்கின்னு கடை காலி பண்ணவேண்டியதாயிருச்சு. அடுத்து அமைஞ்சது சின்ன கடை . அதனால போர்டுகளை  எல்லாம்  கொண்டு போயி தன்னோட இன்னொரு நண்பரோட கடையில போட்டு வச்சாரு. தன் இன்னொரு நண்பருக்கு ஏதோ காசு தேவைன்னு அந்த நண்பர் கிட்டே வாங்கினாரு.ரெண்டு பேருமா குடிச்சு கூத்தடிச்சாய்ங்க. காசு கொடுத்த நண்பர் பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சாரு. நம்மாளு எதையும் கண்டுக்கறாப்ல இல்லை.

சில மாசம் பொறுத்து பார்த்துட்டு  தன் கஸ்டடியிலருந்த போர்டுகளையெல்லாம் கொண்டு போய் காயலான் கடைக்கு போட்டுட்டாரு.

இதே ஐடியாவை குடிப்பழக்கம் இல்லாத - இந்நாள் கவுன்சிலர் மற்றும் முன்னேற துடிக்கும் உத்தமமான  ஸ்க்ரீன் ப்ரிண்டர்ஸுக்கு கொடுத்திருந்தா  ஐடியாவும்  உருப்பட்டிருக்கும். நமக்கும் ஏதோ கிடைச்சிருக்கும். அதாங்க நம்ம ஐடியாவுக்கு ஒர்த் இருக்குங்கற தன்னம்பிக்கை.

ஆகவே பண வேட்டைக்கு புறப்படறவுக  "எந்நிலையிலும் முட்டாளுடன் உறவு இல்லை" ங்கற முடிவுக்கு வந்தே ஆகனும்.

இந்த அத்யாயத்தின் ஆரம்பத்துல சொன்னாப்ல பண வேட்டைக்கு உதவக்கூடிய பல்வேறு அம்சங்களை அடுத்தடுத்து தொடர்ந்து பார்க்கலாம்.
:


Comments