பதிவு எழுத 'மூடு' வேண்டுமா?


சமையல் அறை + அழகுக் குறிப்பு!

பதிவு எழுத 'மூடு' வேண்டுமா?

வேண்டும் – வேண்டாம் இரண்டு பதில்களையும் சொல்லலாம். சில நாட்கள் மிகவும் சுலபமாக எழுத்துக்கள் தாமாகவே வரும்; வளரும்; வடிவு பெறும். சில நாட்கள் என்ன செய்தாலும்........ஊஹூம்!


அப்போது என்ன செய்வது? அதையே ஒரு பதிவாகப் போட்டுவிடலாம். ‘என்ன எழுதுவது? எதை எழுதுவது?’ என்ற தலைப்பில்! அல்லது இதேபோல வேறு ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எழுதுங்கள்.

சிலருக்கு ஓட்டலில் ரூம் போட்டு எழுதினால் தான் வரும்; சிலருக்கு பூங்காவில் போய் உட்கார்ந்தால்தான்  கற்பனைச் சிறகடிக்கும்; இல்லையானால் சிறகு முறிந்துவிடும். இதைபோல நீங்கள் கேட்டது, படித்தது இதையெல்லாம் வைத்து ஒரு பதிவு தேற்றலாம். கொஞ்சம் கற்பனை சேர்த்தால் நகைச்சுவை பதிவு எழுதலாம்.

பதிவு எழுத மூடு இல்லாதபோது நீங்கள் முன்பு (மூடு இல்லாத போது)
எழுதிய, பாதியில் நிற்கும் பதிவுகளை பூர்த்தி செய்யலாம்.


எப்போதுமே ஒரே ரீதியில் எழுதிக் கொண்டே இருக்க முடியாது என்பது மிகவும் உண்மை. மலை ஏறுபவன் எத்தனை  நேரம் ஏறுவான்? சம பூமிக்கு வரத்தான் வேண்டும் இல்லையா? அதேபோலத்தான் எழுதுவதும்.

தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த நாள் எழுதப் போவதற்கு இன்றே முன்னுரை எழுதி வைத்துக் கொள்ளலாம். சிறுசிறு குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டால் அடுத்து அடுத்து எழுத உதவியாயிருக்கும்.

ஆனால் எழுத வேண்டும் என்ற அக்கினி குஞ்சு ஆறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எழுத வேண்டும் என்கிற உந்துதல் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

எப்போதோ நீங்கள் கேள்விப்பட்ட செய்தி, தினசரி செய்தித்தாளில் படித்த செய்தி மனதில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டு இருக்கும். அதை தட்டி எழுப்பி வார்த்தைகளில் கொட்டி விடலாம்.

சில தலைப்புகள் சாகா வரம் பெற்றவை. சா.வ.பெ. வரிசையில் முதல் இடம் அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு இவைகள் தான்.

சமையல் அறை அரசிகளான நமக்கு சமையலறைப் பொருட்களை வைத்துக்கொண்டு சமையலும் செய்ய வரும். அழகுக் குறிப்பும் சொல்ல வரும், இல்லையா?

உதாரணமாக, என் யோகா தோழி ஜ்யோதி ஒருநாள் வகுப்பில் சொன்னாள்: “இன்னிக்கிக் காலையில் ஓட்ஸ் இட்லி செய்தேன்......” எல்லோருக்கும் வியப்பு. ஓட்ஸ் இட்லியா, எப்படி செய்வது?

“ஓட்ஸ் கொஞ்சம் எடுத்து நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்றாக கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி விடுங்கள். ஓட்ஸ் இட்லி தயார்!”

வீட்டுக்கு வந்தவுடன் தோசை மாவுதான் இருந்தது. ஊற வைத்த ஓட்ஸ் கலந்து தோசையாக வார்த்தேன். நன்றாகவே இருந்தது. நாளை வகுப்பில் சொல்லி விட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே போனேன்.  அத்துடன் ஓட்ஸ் வைத்துச் செய்துகொள்ளும் ஒரு அழகுக் குறிப்பும் நினைவுக்கு வந்தது.

அடுப்படியில் நின்று கொண்டே ஓட்ஸ் தோசை செய்து மங்கிப் போன முகத்திற்கு ஊற வைத்த ஓட்சை தேய்த்துக் கொண்டால் (scrubber போல) இறந்துபோன செல்கள் உதிர்ந்து முகம் பொலிவுறும் என்பதுதான் அது.

இரண்டையும் சொன்னேன். அன்றைக்கு வகுப்பில் நான்தான் கதாநாயகி!

இதைப்போல நீங்களும் நிறைய எழுதலாம். ஒரு எச்சரிக்கை: ஓட்ஸ்ஸுக்குப் பதிலாக சீரகம் மிளகு என்று எழுதிவிடாதீர்கள் அழகுக் குறிப்பில்!

மீண்டும் நாளை.....!Comments

 1. அருமையா சொல்லிட்டீங்க அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. அம்மம்மா,,, அசத்தல் தான்,,,

  ReplyDelete
 3. நன்றி தனபாலன்!

  நன்றி தொழிற் களம் குழுவினருக்கு!

  ReplyDelete
 4. உண்மைதான். சில நேரங்களில் எழுதுவதற்கு தேவையான தலைப்பு கிடைத்தும், மூடு இல்லாததால் எழுதுவதை ஒத்தி வைத்த அனுபவம் எனக்கு பல நேரங்களில் உண்டு.

  ReplyDelete
 5. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. சிவலிங்கம்!

  ReplyDelete
 6. உங்கள் குறிப்புகளை பின்பற்றுகிறேன் ... பயனுள்ளதாக இருக்கிறது..

  ReplyDelete
 7. நன்றி செழியன்!

  ReplyDelete
 8. ஒரு புதுமையான பதிவு....!!!

  ReplyDelete
 9. நன்றி ஜெயராஜன்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்