சிவகாசியில் எதனால் வெடிக்கிறது?

சமீபமாக சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்து நடந்தது, இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம், ஆனால், குறைவாகத் தான் வெளிவந்தன இந்த எண்ணிக்கை. நிறைய கண்ணீர், காயம், சோகம்! இது புதிதல்ல சிவகாசியில்.

சரி, இந்த விபத்தைப் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. ஆனால், காரணங்கள் பற்றி. இது போல், உலகெங்கும் நடக்கும் எல்லா விபத்துக்களுக்கும், பின்னே இருக்கும் காரணங்கள் பற்றி.

ஒரு பாலம் கட்டுகிறார்கள், அது ஒரு வருடத்தில் இடிந்து விழுகிறது. இதற்குப் பொறுப்பு யார்? அதைக் வடிவமைத்த  பொறியாளரா? இல்லை, அந்தப் பொறியாளர் வேலை செய்யும் நிறுவனமா? யார் காரணம்?

விண்ணில் செலுத்த, ஒரு விண்கலம் தயார் செய்திருக்கிறார்கள், அது இங்கிருந்து செலுத்தி இரண்டு நிமிடம் கூட முழுவதாக முடியும்முன், வெடித்து சிதறுகிறது. இதற்கு யார் காரணம்?

இதோ பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்கள் காலம் காலமாக நடக்கின்றன. ஆனால், இன்னும் அதைத்  தவிர்க்க இயலவில்லை. என்ன காரணம்?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் தான். அது, பணம்!

பணத்தைத் தவிர வேறு சில காரணங்களும் சொல்லலாம்.

முதலாவதாக, பாலம் கட்டுவது பற்றி சொன்னேன் அல்லவா? அதற்குக் காரணம், நிறைய இருக்கலாம்,

 • வடிவமைத்ததில் கோளாறு இருக்கலாம். பாலம் போன்றவைகளை வடிவமைக்கும் பொழுது, இரண்டு வகையான விசைகளை (forces) முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று கிடைக்கூறு (horizontal component), செங்குத்துக் கூறு (vertical component). இது இரண்டில் ஏதாவது ஒன்றை சரியாக கவனத்தில் கொல்லாவிடினும், பாலம் எளிதாக இடிந்து விழுந்து விடும், எவ்வளவு விலை உயர்ந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி! இது அதை வடிவமைப்பவரின் கவனக் குறைவால் இருக்கலாம். 
 • பணம் என்று சொன்னேன் அல்லவா? அதை வடிவமைப்பவர் நேர்மையாக இருந்தாலும், அவர் வேலை செய்யும் நிறுவனம் அவருக்கு தேவையான அளவு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் அந்தப் பாலத்தைக் கட்ட. இல்லை என்றால், கட்டுமானப் பொருள்களின் தரம் குறையலாம். விளைவு, பாலம் எளிதில் இடிந்து விழும். அல்லது பணம் கொடுத்தான் அதை சரியாகச் செலவு செய்யாமல், தான் சுருட்டிவிட்டாரே ஆனால் அவ்வளவு தான். 
விண்கலம் சொன்னேன் அல்லவா? இதிலும் இதே இரண்டு பிரச்சனைகள் தான். வடிவமைப்பில் கோளாறு இருக்கலாம். அல்லது போதிய அளவு பண ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், தரம் குறைவால் இருக்கலாம்.
ஆனால், இந்த பட்டாசுத் தொழிற்சாலை விபரத்தில், பணம் தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். நிறைய உற்பத்தியைப் பெருக்க, அளவுக்கு அதிகமாய் ஆட்கள் வைத்து வேலை செய்ய வைப்பதால் தான் பெரும்பாலும் நடக்கிறது?! 

ஆக, எல்லா விபத்துக்களுக்கும் பின் பணம் தானா என்றால். ஆம் என்றாலும். இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது.

பொறுப்பேற்றுக் கொள்ள மறுப்பது (refusing to be responsible) 
 • பாலம் கட்டி அது நன்றாக சிறப்பாக அமைந்து விட்டது என்றால், அதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் நிறுவனங்களும், வடிவமைத்தவர்களும், இடிந்து விழுந்த பிறகு முன் வருவதில்லை, அவர்களது பிழையை ஒப்புக் கொள்ள. ( அட, நீயென்ன, யாராவது தப்புக்கு நான் தான் காரணம்னு வருவாங்கலானு கேக்கறீங்களா?) தவறுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் நேர்மையாக. வேண்டுமென்று தவறு செய்யவில்லை என்றால், ஒப்புக் கொண்டால், மன்னிப்புக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது தானே? தண்டனை கிடைத்தாலும் பெற்றுக் கொள்வதும் நியாயம் தானே?
 • ஒரு குழு விண்கலத்தை வடிமைக்கிறது என்றால், அதில் ஒவ்வொரு பகுதியையும் ஒருவர் வடிவமைப்பர். இதில், நிறைய கட்டங்களாக வடிவமைப்பு நடக்கும். வடிவமைப்பு ஒரு குழு செய்தால், ஒவ்வொரு பகுதியையும் உருவாக்குவது வெவ்வேறு குழுக்களாக இருக்கும். பகுதிகளை இணைப்பது இன்னொறு குழுவாக இருக்கும். சோதித்துப் பார்ப்பது இன்னொரு குழுவாக இருக்கும். இப்படி ஒவ்வொரு குழுவின் பணியும் முடிந்தவுடன், அந்தக் குழு உறுப்பினர்கள் அடுத்து நடக்கும் வடிவமைப்புகளையும் சோதனைகளையும் பற்றி அக்கறை கொள்வதில்லை. இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் தங்களது பணிகளையும் தாண்டி, சற்று அக்கறையோடு ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பொழுது  "பிழைகள்" ஏற்படுவதைத் தவிர்க்கலாம் தானே? ஆனால், யாரும் அப்படி அக்கறையோடு இருப்பதில்லை. (இது விண்கலம் என்று மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு தொழில் நுட்பச் சாதனமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.)
நிறைய மக்களை பாதிக்கும், நிறைய மக்கள் பயன்படுத்தும் பொருட்களை வடிவமைக்கும் அனைத்து வடிவமைப்பாளர்களுக்கும், "சமூக நலம்" குறித்து அக்கறை வேண்டும்.

அதீத கவனத்தோடு செயல்பட வேண்டும்!

முன்பு நடந்த விபத்துக்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பிழைகள் இனி நடக்காமல் சரி செய்து கொள்ள வேண்டும். 

விபத்துக்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது. ஆனால், குறைக்கலாம்!

பணம்! பணம்! பணம்! இது, அதை, அனுமதிக்குமா? 

---

Comments

 1. பகுத்தறிவு பெற்ற மக்களால் தான் மாற்றம் காண முடியும்,,,

  தொடருங்கள் சகோதரி,,,

  ReplyDelete
 2. ஆம், முடிந்த அளவு நமக்குத் தெரிந்த பாதுகாப்பு வழிமுறைகளை பிறருக்குச் சொல்லித் தரவும் வேண்டும்.

  நன்றி...

  ReplyDelete
 3. நேற்று மெப்கோ கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த போது, சம்பவம் நடந்த இடம் கண்டேன், வேதனை, அதிகம் பேர் இறந்தாக கேள்வி பட்டேன், உண்மை பெரிய அளவில் மறைக்கப்பட்டதாக உணர்ந்தேன். கிரனைட் கல் விசாரணை போலே முதல்வர் நேரடியாக கையாண்டால் விடிவு பிறக்கலாம். நல்ல பதிவு சகோதரி

  ReplyDelete
 4. ஆம் நிறைய மறைக்கப்பட்டுவிட்டன. நன்றி.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்