Ads Top

திருட்டு விசிடிக்கு ஆதரவு. திருந்தும்வரை....

இன்றைக்கு சினிமாக்காரர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனையே, படம் எடுப்பதைவிட எப்படி பாதுகாப்பாக எடுப்பது என்பதுதான். படம் வெளியாகும் முன்னரே யூ டியூப் போன்ற இணையதளங்களில் சில படங்கள் வந்துவிடுகின்றன. படம் வெளிவந்த முதல்நாளே திருட்டு விசிடிக்கள் வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் வந்து வீட்டுக்கு வீடு ஆக்கிரமிப்பு செய்கின்றது. இப்பொழுதெல்லாம் ஒரு படம் 25 நாட்கள் தியேட்டரில் ஓடினாலே அது மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்படுகிறது. திருட்டு விசிடியை ஒழிப்பதற்காக சட்டங்கள் போட்டும், தனியார் அதிரடிப்படைகள் அமைத்தும், அதை சிறிதளவு கூட ஒழிக்க முடியவில்லை. என்ன காரணம்?

இந்த திருட்டு விசிடியை ஒழிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று  சற்று சிந்தித்துப்பார்த்தால், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு பெருகிவருவதுதான் என்பதை அறிய முடிகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர் தியேட்டருக்கு சென்று ஒரு படம் பார்க்க வேண்டுமென்றால், தியேட்டருக்கு செல்லும் ஆட்டோ செலவு, தியேட்டர் டிக்கட் செலவு, திண்பண்டங்கள் செலவு எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் குறைந்தது ரூ.1000/- செலவாகிறது. ஒரு நடுத்தர வருமான குடும்பத்திற்கு இது தாங்குமா? அதைவிட ரூ.,50 செலவழித்து ஒரு திருட்டு விசிடி வாங்கி ஜாலியாக வீட்டிலிருந்தே அந்த சினிமாவை பார்த்துவிடலாம் என மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள்.  அல்லது ஏதாவது இணையதளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து ஒரு பைசா செலவில்லாமல் ஒரு குடும்பமே ஒரு திரைப்படத்தை பார்த்துவிடுகிறது. இதை எவ்வாறு தடுப்பது?

தியேட்டரில் கட்டணத்தை இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என்று மாற்றிப்பாருங்கள், கூட்டம் எவ்வளவு வருகிறது என்பதை கண்கூடாய் அறியலாம். ஏன் தியேட்டர் கட்டணம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு நான்கு படம் ஹிட்டாகிவிட்டால், அந்த படத்தில் நடிக்கும் நடிகனின் சம்பளம் கோடிகளில் எகிறுகிறது. அந்த நடிகரே கேட்காவிட்டாலும், தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கோடிகளை கொட்டி அந்த நடிகனின் கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர்.  ஒரு படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 75 சதவிகித தொகை அந்த படத்தில் நடிக்கும் நடிகன் ,நடிகை,  இயக்குனர், இசையமைப்பாளர் அவர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. மீதி 25 சதவிகிதம் தான் படத்தின் மொத்த செலவு. படத்தின் பட்ஜெட் உயருவதால்தான் விநியோகிஸ்தர்களுக்கும், தியேட்டர்களுக்கும் அதிக விலைக்கு படம் விற்பனையாகிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்தால்தான், அவர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியும்,. எனவே தவறு நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதில்தான் ஆரம்பிக்கிறது.

இதுபோக தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை வேறு உண்டு. தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்காமல் உருதிலா பெயர் வைப்பார்கள்? இதற்கு போய் வரிச்சலுகையா? என்ன ஒரு பைத்தியக்காரத்தன திட்டம். அதுவும் அந்த வரிச்சலுகையால் படம் பார்க்கும் பாமரன் பயன் அடைகின்றானா? இல்லை கோடிகளை கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் லாபம். தமிழில் பெயர் வைத்த எந்த ஒரு ஜவுளிக்கடைக்கோ, அல்லது நகைக்கடைக்கோ வரிச்சலுகை என்ற நடைமுறை இருக்கின்றதா? பின் ஏன் சினிமாக்காரர்களுக்கு மட்டும் இந்த சலுகை? அவர்கள் தமிழில் பெயர் வைத்தால் என்ன? அல்லது பெயரே வைக்காவிட்டால் அரசுக்கு என்ன லாப நஷ்டம்? 

நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைந்தால் மட்டுமே படத்தின் பட்ஜெட் குறையும், தியேட்டரில் கட்டணம் குறையும். அதன்பின் தானாகவே திருட்டு விசிடி ஒழிந்துவிடும். அதை சட்டம் போட்டு யாரும் தடுக்க வேண்டாம். யாருக்கும் திருட்டு விசிடியில் படம் பார்க்க வேண்டும் என்ற வேண்டுதல் இல்லை. தியேட்டருக்கு போனால், ஒரு நாள் வருமானம் செலவாகிறதே, அதுவும் குடும்பத்தோடு போனால், ஒரு வார வருமானம் போகிறதே என்பதற்காகதான் பொதுமக்கள் திருட்டு விசிடியை நாடுகிறார்கள். அதை தடுப்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. 

எனவே அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்து, நடிகர், நடிகைகளின் சம்பளத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். தயாரிப்பாளர்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இல்லையென்றால் அரசே எல்லா தியேட்டர்களையும் அரசுடைமை ஆக்கி, நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, வருகின்ற மொத்த வசூலில் தியேட்டர்களின்  நிர்வாக செலவு போக மீதியை படத்தயாரிப்பாளர்களிடம் கொடுத்துவிடலாம். அதன்பின் அவர்கள் அந்த படத்தின் வசூலை பொருத்து நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து கொள்ளலாம். கஷ்டப்பட்டு படித்து, பட்டம் வாங்கி ஒரு வேலைக்கு சென்று தன் வாழ்நாளில் சம்பாதிக்கும் ஒரு பட்டதாரியின் வருமானத்தை, ஒரு நடிகர் ஒரே படத்தில் சம்பாதிக்கும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நிலை மாறும்வரை திருட்டு விசிடிக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை தடுக்க எதனாலும் முடியாது.

1 comment:

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.