Ads Top

என்ன நடக்கின்றது கூடங்குளத்தில்?
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டம், கலவரமாக மாறி, தடியடி கண்ணீர்புகை மற்றும் ஒருவரின் மரணம் என அல்லோகலப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? போராட்டக்காரர்கள் உண்மையில் விபரம் தெரிந்துதான் போராடுகிறார்களா? அல்லது யாராவது தூண்டி விடுகிறார்களா? ஒன்றுமே புரியவில்லை....

கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் அமைப்பது என 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் அவர்களின் முயற்சியால் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் சோவியத் ரஷ்யாவில் நடந்த உள்நாட்டு குழப்பங்களால், இத்திட்டம் ஆரம்பிப்பதில் கால தாமதம் ஆனது. ரஷ்யா துண்டு துண்டாக ஆன பின்னர், மீண்டும் அமைதி திரும்பியவுடன், 1991 ஆம் ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்த மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அமெரிக்காவின் எதிர்ப்பாலும், அப்போதைய நரசிம்மராவ் ஆட்சியின் முயற்சியின்மையாலும், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  பின்னர் 2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமர் ஆனவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டப்பட்டது. 1992 ஆம் ஆண்டு ரூ.13,615 கோடி மதிப்பீட்டில் ரஷ்யாவின் உதவியுடன் இத்திட்டம் செயல்பட தொடங்கியது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 1992 ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவருடைய ஆட்சிக்கு, 8 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியும், 5 மக்களைவை உறுப்பினர்களைக் கொண்ட மதிமுகவும் ஆதரவு கொடுத்தன. மேலும் இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் பங்குபெற்று, அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். அப்போது யாரும் இந்த திட்டம் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆட்சியில் பங்கு, அமைச்சர் பதவியின் ஆசை போன்றவைக்காக சுயநலமாக இருந்தனர்.

மேலும் உலகில் எங்கு அணு உலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதை சுற்றியுள்ள பகுதியினரின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அணு உலையின் மொத்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை ஒதுக்குவார்கள். இந்த கூடங்குளம் திட்டத்திலும் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை சமாளிப்பதற்காக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு, அது நல்லபடியாக பட்டுவாடாவும் செய்யப்பட்டது. எனவே இந்த திட்டம் ஆரம்பிக்கும்போது பெயரளவிற்கு சிறிய போராட்டங்கள் மட்டும் ஆரம்பித்துவிட்டு, பின்னர் அப்படியே விட்டுவிட்டனர். தற்போது இரண்டு வருட காலமாக அப்படி எதுவும் தொகைகள் வழங்கப்படவில்லை போலும். அல்லது அந்த தொகையை விட அதிக பணம், வெளிநாட்டில் இருந்து கிடைக்கிறதோ என்னமோ தெரியவில்லை, எதிர்ப்பு போராட்டம் வலுவாக இருக்கின்றது.

இந்த திட்டம் ஆரம்பிக்க்கும்போது அமைதியாக இருந்த வைகோவும், ராமதாஸும், திருமாவளவனும், இப்போது ஏன் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆரம்ப காலத்திலேயே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசில் இருந்து விலகி, அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?  மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் பகுதியில் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக அப்பாவிகளின் நிலம் கையகப்படுத்தட்டதாக எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சாலை ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டாரே மம்தா பானர்ஜி. அது உண்மையான போராட்டம்., அதை விட்டுவிட்டு, ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழியும் வரை சும்மா இருந்துவிட்டு, நீதிமன்றமே அணு உலை பாதுகாப்பானதுதான்., எனவே எரிபொருளை நிரப்பலாம் என்று தீர்ப்பு கொடுத்தபோதும், அதற்கு எதிராக போராடுவது எந்த விதத்தில் நியாயம். போராட்டத்தை அப்பாவி மக்களை வைத்து தூண்டிவிட்டு, போராட்டத்தின் தலைவர் மட்டும் ஓடி ஒளிந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து, நாடகம் நடத்துகிறார் என்பதை அப்பாவி மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? 

இன்று காலை கோயம்பேடு அருகில் திருமாவளவன் கூடங்குளத்தில் தடியடி நடத்தியதற்காக சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். கூடங்குளத்தில் தடியடி நடந்ததற்கு கோயம்பேட்டில் ஏன் மறியல் செய்கிறார். கூடங்குளத்திற்கே நேரடியாக சென்று மறியல் செய்யவேண்டியது தானே? அதை விட்டுவிட்டு சென்னையின் மிகவும் பரபரபான இடத்தில் மறியல் செய்து, காலை வேளையில் பள்ளி, மற்றும் அலுவலகம் செல்பவர்களை மறித்து, எதை சாதிக்கப்போகின்றார் திருமாவளவன் என்றே தெரியவில்லை. 

எனவே மக்கள், போலி அரசியல்வாதிகளை இனம் கண்டுகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் புகட்ட முடியும்.


No comments:

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.