Ads Top

மின்வெட்டு இல்லா தமிழகமாக மாற்ற என்ன வழி?

இன்றைக்கு தமிழ்நாட்டில் நாம் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மின்வெட்டு. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் தடைபடும் என்ற நிலை மாறி, ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் இருக்கும் என்ற அவலநிலை வருவதற்கு யார் காரணம்? ஆளும் கட்சி எதிர்கட்சியையும், எதிர்கட்சி ஆளுங்கட்சியையும் மாறிமாறி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண யாரும் முன்வரவில்லை. ஏன் இந்த அவல நிலை. 

தமிழ்நாட்டில் அனல்மின்சாரம்,அணுமின்சாரம்,காற்றாலை மின்சாரம் போன்ற பலவழிகளில் மின்சாரம் உற்பத்தி ஆகிக்கொண்டிருந்தும், ஏனிந்த நிலை? மின்வெட்டை சரிசெய்ய என்ன செய்யலாம்? கொஞ்சம் யோசிப்போமா?

கடந்த 15 வருடங்களாக மின்சார உற்பத்தி செய்யும் புதிய திட்டங்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் தொழிற்சாலைகள் மிகவும் பெருகியுள்ளன. அதிலும் பன்னாட்டு கம்பெனிகள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை அதிகாரத்தோடு பெற்று தங்கள் நிறுவனங்களை திறம்பட நடத்திவருகின்றது. அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கிய நம் அரசியல்வாதிகளால் அவர்களின் செயல்களை தடுக்க முடிவதில்லை. சாதாரண குடிமகனுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறு தொழில்களுக்கும் செல்ல வேண்டிய மின்சாரம், வெளிநாட்டு நிறுவங்களுக்கு தடையில்லாமல் செல்கிறது. ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பதற்கு முன், அந்த தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை எவ்வாறு கொடுக்க முடியும் என்ற முன்யோசனை இல்லாமல், லஞ்சப்பணத்திற்காக அனுமதி கொடுத்துவிட்டு, பொதுமக்களை வாட்டி வதைப்பது எந்த விதத்தில் நியாயம்.

தமிழ்நாட்டின் பல நகரங்களிலும், கிராமங்களிலும், ஒரு நாளை 12 முதல் 14 மணிநேரம் மின்வெட்டு கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சென்னையில் தி.நகரில் உள்ள கடைகளைப் பார்த்தால் பகல் போல் மின்விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருக்கின்றது. தி.நகரில் இருக்கும் கடைகளுக்கு கொடுக்கும் மின்சாரத்தை நிறுத்தினால் தமிழ்நாட்டின் ஒரு நகரத்திற்கே மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் கொடுக்கலாம், ஆடம்பர அலங்கார விளக்குகள்,ஜொலிக்கும் விளம்பர போர்டுகள் பத்து மாடி கட்டிடம் முழுவதும் ஏ.சி செய்யப்பட்ட வியாபார நிறுவங்கள் இதற்கெல்லாம் தங்குதடையின்றி மின்சாரம் வரும்போது, தமிழ்நாட்டின் கடைகோடி கிராமங்களுக்கு ஏன் 12 மணிநேர மின்வெட்டு?

நேற்று புதியதாக ஒரு அறிவிப்பு அரசிடம் இருந்து வந்துள்ளது. அதாவது ஸ்டார் அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் இனி மாலை 6 மணிக்கு மேல் மின்சாரம் கிடையாது. அவர்களே ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து சமாளித்துக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே நல்ல திட்டம். இதே போன்ற திட்டத்தை தி.நகர் கடைகள் போன்ற அதிக அளவு மின்சாரத்தை செலவழிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மின்வெட்டை ஓரளவிற்காவது குறைக்க முடியும். 

தற்போது நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவை விட செலவாகும் மின்சாரம் மிக மிக அதிகம். அதற்கு சரியான தொலைநோக்கு மின்சார திட்டங்கள் இல்லாததே காரணம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அனல்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. அணுமின்சாரம் உற்பத்தி செய்வதிலும் சிக்கல் மேல் சிக்கல். உதாரணம் கூடங்குளம். மேலும், நீர்மின்சாரம் பற்றி சொல்லவே தேவையில்லை. நமது அணைகளில் தண்ணீரே இல்லாத போது, மின்சாரத்திற்கு எங்கே போவது. நமக்கு இருக்கும் ஒரே வழி, சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுதான். பல நாடுகளில் இப்பொது சூரிய சக்திமூலம் உற்பத்தி மின்சாரத்தை வைத்துதான், தங்களது தேவைகளை தன்னிறைவு செய்து வருகிறார்கள். நம் நாட்டிலும் குஜராத் போன்ற மாநிலங்களில் சூரிய மின்சாரத்தை பயன்படுத்துவதால்தான், மின்வெட்டு என்றால் என்ன என்றே தெரியாமல் அந்த மாநில மக்கள் வாழ்கிறார்கள். எனவே அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் சேமிப்பை எல்லா கட்டிடங்களுக்கும் கட்டாயப்படுத்தி செயல்படுத்தியது போல, சூரிய மின்சாரத்தை எல்லா கட்டிடங்களுக்கும் கட்டாயப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்., 

மின்சார பற்றாக்குறையால், தொழில்கள் முடங்கும், உற்பத்தி பெருமளவில் குறையும், வேலையில்லா திண்டட்டம் பெருகும், கொலை,கொள்ளை வழிப்பறி முதலியவை சர்வசாதாரணமாக நடக்கும். நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையே ஏற்படும். எனவே அரசு இவ்விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, மின்வெட்டு இல்லா தமிழகத்தை மாற்ற சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 comments:

 1. உண்மைதான் சகோ...

  சிந்திக்க வேண்டிய விசயம்...

  மாற்றுவழியை நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டும்...

  உங்கள் வரவு நல்வரவாகுக...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உங்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 3. சிந்திக்க வைக்கும் வழிகள்.... நன்றி...

  ReplyDelete
 4. பல புதிய தகவலை வழங்கும் அமுத சுரபி இத்தளம்.

  ReplyDelete
 5. நீங்கள் என்னை போலவே சிந்திக்கறிர்கள்,
  சிந்தனைக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.