வாசிக்கும் பழக்கத்தை நேசிப்போம்.

இந்த பரபரப்பான 21 ஆம் நூற்றாண்டு காலத்தில், நம்மிடையே எத்தனையோ புதுப்புது பழக்கங்கள் தோன்றியுள்ளன. அதில் பல, நமது நேரத்தை வீணடிப்பதாகவும், சில நமக்கு பயனுள்ளவையாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த ஒரு பழக்கம்தான் புத்தகம் படிப்பது. புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது மனதிற்கு சுகம் தரக்கூடிய ஒரு அற்புதமான அனுபவம். அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

புத்தகம் படிப்பதற்கு பதில் இப்பொழுதெல்லாம் இணையத்தில் நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறோமே என்று சிலர் கூறுகிறார்கள். இணையத்தில் உலாவும் பலர், எனக்கு தெரிந்து ஃபேஸ்புக், டுவிட்டர் இவற்றில்தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுகிறார்கள். புத்தகம் படிப்பதற்காக இணையத்திற்கு செல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.  புத்தகம் படிப்பது, நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது ஒருகாலம். சிறுவயது முதலே கதை புத்தகங்கள், கொஞ்சம் வளர்ந்தவுடன் நாவல்,இலக்கியம், கட்டுரைகள், விஞ்ஞானம் பின்பு வயதான காலத்தில் ஆன்மீகம் போன்ற புத்தகங்கள் படிப்பதில் இருக்கும் ஒரு நிம்மதியை இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் இழந்து கொண்டிருக்கின்றனர். 


இருபது வருடங்களுக்கு முன் பாலகுமாரன், சுஜாதா நாவல்களை படிக்காதவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. இவர்கள் எழுதும் தொடர் நாவல்களை படித்துவிட்டு, நண்பர்களிடம் விவாதிப்பது என்பது விவரிக்கவே முடியாத ஒரு இனிமையான அனுபவம். இப்பொழுதுள்ள எழுத்தாளர்கள் இவர்களைப் போல் இல்லை என்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும், படிக்கும் பழக்கத்தை நாம் அறவே மறந்தது என்பது நம்முடைய பெரும் இழப்பாகவே கருத முடிகிறது.

காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரையும்,  7 மணி முதல் 11 மணிவரை  தொலைக்காட்சி தொடர்களில் மூழ்குதல்,  சனிக்கிழமை இரவு பார்ட்டிகளுக்கு செல்லுதல், பீச், பார்க், சினிமா போன்ற பல பழக்கங்கள் நம்மிடையே மறையாத போது, எப்படி வாசிக்கும் வழக்கத்தை மட்டும் மறந்தோம் என்று தெரியவில்லை. புத்தகக் கண்காட்சி நடக்கும்போது நிறைய பேர் வந்து ஆர்வமாக புத்தகங்களை வாங்கிச் சென்றதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வாங்கிச் சென்ற பலர் முதல் பக்கத்தைக் கூட பல நாட்களாக படிக்காமல் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்பதை சில நேரங்களில் கேள்விப்பட்டவுடன் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. ஏன் இந்த நிலைமை?

புத்தகம் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு மீண்டும் தொடங்குவது?  புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா என சில பேர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொல்லும் முதல் காரணம், எங்கே சார் அதுக்கெல்லாம் நேரம் இருக்கிறது என்பது தான்? நேரத்தை நாம்தான் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.  பஸ்ஸிலோ, இரயிலோ வேலைக்கு செல்பவர்கள் பயணத்தின்போது படிக்கலாம், ஒரு முக்கியமானவரை சந்திக்க செல்வோம், அவர் வருவதற்கு சில நேரங்கள் ஆகும், காத்திருங்கள் என்று சொல்வார்கள், அந்த நேரத்தை படிப்பதற்கு பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் படிக்கலாம். நாம் எங்கு சென்றாலும், நமது கைப்பையில் ஒரு புத்தகத்தையும் கையோடு எடுத்து சென்றால், எங்கே நேரம் கிடைக்கிறதோ, அந்த நேரத்தை புத்தகம் படிப்பதற்கு பயன்படுத்தலாம். 

"புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் முக்கியம். சிறந்த ஆசிரியர்களின் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பெற்றோர், ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்காததை புத்தகங்கள் சொல்லித்தரும். நண்பர்கள் செய்யாத உதவிகளை கூட ஒரு நல்ல புத்தகத்தால் செய்ய முடியும். 

கடந்த 5 ஆண்டுகளில் பல நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது. நூலகங்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. அரசு நிதியில் அனைத்து புத்தகங்களும் வாங்கப்பட்டு, அனைத்து நூலகங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாளாவது நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே போதும், புத்தகம் படிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும். 


வாசிக்கும் பழக்கத்திற்கு வயது வித்தியாசமே கிடையாது. 5 வயது மாணவர்கள் முதல், 50 வயது முதியவர்கள் வரை எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்.  கோவில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்ற ஒரு நிலை வர வேண்டும். நம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நேரடி ஒளிபரப்பில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் யார் என்றுதான் கேள்வி கேட்கிறார்களே தவிர, ஒரு நிகழ்ச்சியில் கூட உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்? பிடித்த புத்தகம் எது? என்று தப்பித்தவறி கேட்கிறார்களா? படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூட சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை மட்டும் படித்துவிட்டு, உள்ளே உள்ள பல நல்ல விஷயங்களை படிக்காமல்  விட்டுவிடுகின்றனர். இதுபோன்ற ஒரு நிலை இனியும் தொடர வேண்டாம்.

புதிய திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சி, பாடல் வெளியீடு நிகழ்ச்சிக்கு வரும் நமது திரையுலக பிரபலங்கள் யாராவது புதிய புத்தகங்கள் வெளியீட்டுக்கு வருகிறார்களா? சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளருக்கு விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால், அந்த விழாவே பரபரப்படைந்தது. யார் இந்த ராமகிருஷ்ணன் என்று பல பேர் கேட்டார்கள். அதன்பிறகுதான் அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றும் பல நூல்களும், பல திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார் என்ற விஷயம் பலருக்கு தெரியும். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் கலந்துகொண்டால், எழுத்தும் எழுத்தாளர்களும் பிரபலம் அடைவார்கள். அதிலிருந்து படிக்கும் பழக்கம் நம்முடைய இளையதலைமுறையினருக்கு கிடைக்கும்.

 நுண்ணிய அறிவை வளர்த்துக்கொள்ள பள்ளி பாடபுத்தக அறிவு மட்டும் போதாது; அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும். நல்ல புத்தகமே நல்ல நண்பர்கள்; பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும் போது புத்தகங்களை வழங்க வேண்டும். வாசிப்புத்திறனை அதிகப்படுத்தினால், எதிர்காலம் சிறப்பாக அமையும். தூக்கு மேடைக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் வரை பகத்சிங் புத்தகங்கள் படித்துக் கொண்டு இருந்தாராம். எனவே புத்தகம் படிக்கும் பழக்கத்தை நம் இறுதி மூச்சு வரை நிறுத்தாமல் இருந்தால், நம் வாழ்க்கை ஒரு அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

Comments

 1. நல்ல பல கருத்துக்கள்...

  வாழ்வின் கடைசி வரை வருவது...
  நிம்மதியை தருவது... நல்ல நல்ல புத்தகமே...

  ReplyDelete
 2. வாசிக்கும் பழக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள் எல்லாமே அருமை.

  குழந்தைப்பருவம் முதலே புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், ஒரு நல்ல தலைமுறை உருவாகும்.

  குழந்தைகளுக்கு இந்த பழக்கம் வளர முதலில் பெற்றோர்கள் அவர்களுக்குப் படித்துக் காண்பிக்கவேண்டும். மெள்ள மெள்ள அவர்களையே படிக்கச் சொல்ல வேண்டும்.

  பெற்றோர்கள் புத்தகத்துடன் உட்காட்ந்தால் குழந்தைகளும் அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுவார்கள்.

  நல்லதொரு கட்டுரையைப் படித்த திருப்தி!


  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. உண்மைதான் சகோ...

  என் நெருங்கிய தோழிகள், நான் படிக்கும் புத்தகங்களே...

  ReplyDelete
 4. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.சி. என். அண்ணாதுரை அவர்கள் தன் மரணப்படுக்கையிலிருந்தபோது “ நான் மரணிப்பதையிட்டல்ல Marie Corelli என்பவரால் எழுதப்பட்ட The Master Christian என்கிற அற்புதமான நாவலைப்படித்துக்கொண்டிருக்கிறேன், அதை முடிப்பதற்குள் மரணம் வந்துவிடுமோ என்பதுதான் கவலையாக இருக்கிறது என்றாராம்.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்