நாமாக நாம்.....!


என்ன நண்பர்களே இன்று பதிவு எழுத மூட் வந்துவிட்டதா? நல்லது, நல்லது. வாருங்கள் பதிவுகள் எழுத இன்னும் சில தலைப்புகளைப் பார்க்கலாம்.
'ஆஹா  பல்பு எரியுது.....'!


சா.வ.பெ. தலைப்புகளில் இன்னொன்றும் முட்டி மோதிக் கொண்டு முன்னால் வரும்: அதுதான் ‘வீட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் அல்லது கை வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் அல்லது.....அப்பா... மூச்சு முட்டுது... இல்லையா? இதைபோல பல பெயர்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தாலும் அந்த பிரம்மத்தைப் போல இரண்டாவது இல்லாத ஒன்றே ஒன்று இந்தத் தலைப்பு!

‘ஜலதோஷம் வரும்போல இருக்கா? கொதிக்கும் நீரில் சில மிளகுகளைப் போட்டு அந்த தண்ணீரை அடிக்கடி குடிக்கவும். ஜலதோஷம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்’ – அல்லது ‘ஜலதோஷம் மட்டுமல்ல மற்ற தோஷங்களும் (தொண்டைக் கட்டு, தொண்டை எரிச்சல்) மறைந்துவிடும்’  

இதிலும் மிக முக்கியம் அடைப்புக்குறிக்குள் இருப்பது. நீங்கள் வெறுமனே மற்ற எல்லா தோஷங்களும் மறைந்துவிடும் என்று எழுதினால் ‘சனி தோஷம், செவ்வாய் தோஷம் போகுமா’? என்று உங்களுக்கு ரசிகர் கடிதம் வரும். சில எடக்குமடக்குப் பேர்வழிகள் ‘சந்தோஷம்’? என்று கேட்டு உங்களை மடக்கி விட்டதாக நினைத்து ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளுவார்கள். எச்சரிக்கை அவசியம்.

இன்னொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டும்: வைத்தியக் குறிப்புகள் எழுதும்போது ‘சாதாரண உடல்நலம் உள்ளவர்கள் இவற்றைப் பின்பற்றலாம். கூடுதல் தொந்திரவுகள் – சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் - உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடவும் என்று எழுதுவது ரொம்பவும் அவசியம்.

‘சூட்டு இருமல் அல்லது வறண்ட இருமலுக்கு ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிபோட்டு அத்துடன் ஒரு சிறிய எலுமிச்சங்காய் அளவு வெல்லம் சேர்த்து ஒரு தம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து குடிக்கவும்’ என்று எழுதினால் சர்க்கரை நோய்க்காரர் ‘உங்கள் குறிப்பினால் எனக்கு சர்க்கரை அதிகமாகிப் போய் நேற்று இரவு என்னை எறும்புகள் தூக்கிப் போய்விட்டன...’ என்று நீதிமன்றத்திற்கு இழுத்து விடுவார். ஜாக்கிரதை!

பொதுவாக, உங்களுக்கு எந்த விஷயத்தைப்பற்றி நன்கு தெரியுமோ அதைப்பற்றி எழுதுங்கள்.

இயல்பாக எழுதுங்கள். தமிழில் எழுதுகிறேன் என்று பிறருக்குப் புரியாத, அல்லது வழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வட்டார மொழியில் எழுதலாம். பிறருக்குப் புரியுமோ என்ற சந்தேகம் வந்தால் – அடைப்புக்குறிக்குள் பொருளை எழுதிவிடுங்கள்.

நம்முடைய மேதா விலாசத்தைக் காண்பித்துக் கொள்ளாமல், படிக்கிறவரின் நிலைக்கு நம்மை  எளிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒரு காரணத்திற்காகவே எனக்கு மறைந்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்களை மிகவும் பிடிக்கும். 

உங்கள் எழுத்துக்கள் பழகியபின் அவர்களை உங்கள் உயரத்திற்கு கூட்டிச் செல்லலாம். மிகவும் வரவேற்பை பெறும் பதிவுகள் இந்த வரிசையைச் சேர்ந்தவையே.

உங்கள் அனுபவங்களிலிருந்து, உங்கள் நோக்கிலிருந்து எழுதுவது நல்லது.

ஒரு பொதுக்கூட்டம். பேச்சாளர் எழுந்தார். ‘பெரியோர்களே! தாய்மார்களே!... அன்று பெரியார் சொன்னார் ‘............’, நேற்று அண்ணா சொன்னார் ‘.........’,

கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்றார்:’ அவங்க அன்னைக்கு, நேத்திக்கு  சொன்னதெல்லாம் எங்களுக்குத் தெரியுமுங்கோ....நீங்க இன்னிக்கு என்ன சொல்லவறீங்க, அதை மொதல்ல சொல்லிப் போடுங்க.....கடைசி பேருந்துக்கு நேரமாச்சு!’ என்றாராம்!

பதிவுகளிலும் வாசகர்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். உங்கள்  கருத்துக்கள் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பது மிக முக்கியம் – சிலசமயம் இதை எழுதலாமோ கூடாதோ என்று நினைத்து எழுதுவது மிகுந்த வரவேற்பைப் பெறும்! மொத்தத்தில் உங்கள் எழுத்துக்களில் இருக்கும் உண்மை மற்றவர்களைக் கவரும்.

சாதாரணமான, இயல்பான ஒன்றை பலரும் விரும்பிப் படிப்பார்கள். உங்கள் அனுபவத்திலிருந்து பிறர் கற்றுக் கொள்ளுவார்கள்.

வாசகர்கள் வருவார்கள்; போவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல் எழுதுங்கள். எல்லோரையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது என்பது பதிவு உலகத்திற்கும் பொருந்தும். வாசகர்களைக் கவர என்ற நினைப்பு வந்தால் எழுதுவதை ஒத்திப் போடுங்கள். உங்களுக்காக, உங்கள் மனத் திருப்திக்காக எழுதுங்கள்.  

சிலசமயம் மிகுந்த கஷ்டப்பட்டு ஒரு பதிவு எழுதி இருப்போம். ஒரு பின்னூட்டம் கூட வராது. ‘வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்....’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த பதிவு எழுத ஆரம்பித்து விட வேண்டும்.

மொத்தத்தில் ‘நானே நானா...யாரோ தானா...’ என்றில்லாமல் ‘நாம் நாமாக....’ எழுதினால் வெற்றி நிச்சயம்.

பின் குறிப்பு:
பதிவர் திருவிழாவில் ‘வெறும் வாசகியாக இருந்தது போதும். வலைபதிவு ஆரம்பித்துவிடு’ என்று என்று எல்லா பதிவர்களாலும் அறிவுறுத்தப்பட்டு, இப்போது ‘நதிக்கரையில்’ என்ற வலைத்தளம் ஆரம்பித்துள்ள சமீராவிற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

Comments

 1. /// ‘நாம் நாமாக....’ எழுதினால் வெற்றி நிச்சயம்... ///

  நன்றி அம்மா...

  ReplyDelete
 2. உண்மையாகவா?? உங்கள் பதிவில் மூங்கில் புல் கதையை சொல்ல நினைத்தீர்களா? :)

  ReplyDelete
 3. //சாதாரணமான, இயல்பான ஒன்றை பலரும் விரும்பிப் படிப்பார்கள்.//
  சரியாக சொன்னீர்கள் அம்மா ஆனால் Hits reaches the attractive posts rather than best posts... தங்கள் கருத்து என்ன??

  ReplyDelete
 4. நன்றி தனபாலன் முதல் கருத்துரை கொடுத்ததற்கு!

  ReplyDelete
 5. ஆமாம் விஜயன்! எனக்கு மிகவும் பிடித்த என் மாணவர்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் கதை.

  உங்கள் மூலம் இந்தக் கதை பலருக்கும் போய் சேர்ந்தது மகிழ்ச்சி!

  ReplyDelete
 6. attractive என்று எதை சொல்லுகிறீர்கள்? நம் எழுத்து படிப்பவர்களின் உள்ளத்தில் ஒரு சிறு விழிப்பையாவது ஏற்படுத்த வேண்டும். அலங்காரமான சொற்களோ, வண்ண வண்ண படங்களோ செய்யாததை நம் எழுத்துக்கள் செய்யும்.

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு...

  வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 8. நல்ல பதிவு அம்மா.. எழுதுவதை விட அது சரியான நபருக்கு சென்று அடையவேண்டியது முக்கியம் என்பதை அழகாக சொல்லிவிடீர்கள்...இது மருத்துவத்திற்கு!!
  எதை செத்தாலும் நம் மன திருப்திக்காக, நாம் நாமாக இருக்குமாறு பதிவினை அமைக்க சொல்லியது அருமையான கருத்து.. சில நேரங்களில் நானும் இப்படிதான் யோசிப்பேன், நான் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்கும் படி அமையவேண்டும் என!! ஆனால் மன நிறைவுக்கு முன் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லியது சிறப்பு!!

  நன்றி அம்மா!

  ReplyDelete
 9. என்னை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி அம்மா

  ReplyDelete
 10. நன்றி தொழிற்களம் குழுவினருக்கு!

  ReplyDelete
 11. சமீரா,
  நீ உன் தளத்தில் எனக்குக் கொடுத்த மரியாதைக்கு ஒரு சின்ன கைம்மாறு, இது!

  ReplyDelete
 12. அன்பு சமீரா,
  கருத்துரைக்கு நன்றி!
  எழுத்துப்பிழைகளை சரி செய்து விட்டுப் போடவும்.
  செய்தாலும் என்பது 'செத்தாலும்' என்று வந்திருக்கிறது.

  ReplyDelete
 13. மன திருப்திக்காக எழுத வேண்டும், மற்றவற்றுக்காக அல்ல ..தேவை தான் அம்மா , நன்றி

  ReplyDelete
 14. நன்றி செழியன்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்