ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவு!


தலைப்பு எங்கே........?


‘நாமாக நாம்’ இருந்து யோசித்தால் எழுத விஷயம்  நிறையக் கிடைக்கும். சில சமயங்களில் நம் பதிவுகளிலிருந்தே புது புது விஷயங்கள் கிடைக்கலாம்.

தினமும் என் பதிவுகளை வாசிக்க வருபவர்கள் எதைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்பேன். பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘உடல் மெலிய’ ‘இரண்டு மாதத்தில் உடல் இளைக்க’, ‘உடனடியாக இளைக்க’ என்று தேடிக் கொண்டு வந்திருப்பார்கள். அது எப்படி ‘உடல் மெலிய’ என்று என் வலைதளத்திற்கு வருகிறார்கள் என்பது பெரிய புதிர்!  நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்கு எப்படித்  தெரியும் என்பது அதைவிடப் புரியாத புதிர்!

அதேபோல அழகுக் குறிப்புகளுக்காகவும் என் வலைதளத்திற்கு வருவார்கள். ‘உடல் மெலிய’ குறிப்புகள் கொடுக்க நான் கொஞ்சம் (‘கொஞ்சம் அல்ல; நிறைய....!’- இது என் மனசாட்சி) யோசிப்பேன். அழகுக் குறிப்பு கொடுக்க யோசிக்கவே மாட்டேன். அழகுக் குறிப்பு கொடுக்க அழகாக இருக்க வேண்டும் என்று இல்லையே!

‘உடல் மெலிய’ குறிப்பு கொடுக்க முடியாத குறையை ‘புகைப்படத்தில் ஸ்லிம் ஆகத் தெரிய’ குறிப்புகள் கொடுத்துப் போக்கிக் கொண்டேன்!

ஒரு வாசகி என்னுடைய ‘முகத்தின் அழகு மூக்குத்தியிலே’ படித்துவிட்டு மூக்குத்தி பற்றிய உங்கள் சொந்தக் கதையை எழுதுங்களேன் என்று கருத்துரை இட்டு இருக்கிறார். எழுதிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு விரைவில் எதிர்பாருங்கள் என்று பதிலும் எழுதி விட்டேன். மனதில் இப்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஏகத்துக்கு யோசனைகள்!

‘மூக்குத்தியும் நானும்’, ‘நானும் என் மூக்குத்தியும்’, ‘நானும் என் வைர மூக்குத்தியும்’(!!), நானும் என் 8 கல் வைர பேசரியும்’ (உனக்கே இது கொஞ்சம் ‘ஓவர்’ஆகத் தெரியல?’ – மறுபடியும் மனசாட்சி!)
அடடா! எத்தனை அருமையான ‘பளபள’, ‘ஜிலுஜிலு’ தலைப்புகள்!

நிறையபேர் என்னைக் கேட்கும் கேள்வி இது:
பதிவு எழுதுவதால் என்ன பயன்? எனக்கு வியப்பாக இருக்கும். என்ன கேள்வி இது? படிப்பதனால் என்ன பயன்? படிப்பதுதானே? அதுபோலத்தான் இதுவும். என்ன பயன்? எழுதுவதுதான்! படிப்பதும் படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் தரும் இன்பம் வேறு எதில் கிடைக்கும்?

சில சமயம் தனிமையில் இதைப்பற்றி யோசிப்பதும் உண்டு.  ‘பதிவர்’ என்ற அடையாளம் கிடைக்கிறது. எழுத்தாளர் என்றால் எதில் எழுதுகிறீர்கள் என்பார்கள். ‘ஓ!, நான் அந்தப் புத்தகம் படிப்பதில்லை’ என்று பதில் வரும். பதிவர் என்றால் இந்தக் கேள்வியே வராது. நம் எழுத்துக்கள் அச்சில் வருமா, வராதா என்ற கவலை இல்லை; நாமே அச்சேற்றி விடலாம். இதைவிடப் பயன் வேறு என்ன வேண்டும்?

அடுத்து என்ன எழுதுவது என்று மனதில் சதா ஒரு சிந்தனை, அதற்கான தேடல்கள், ஆயத்தங்கள்  இவை நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த ஒரு பலன் போதாதா?

திரைப்படத்துக்கும் மேடை நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுதான்  பதிவர் என்பதற்கும் எழுத்தாளர் என்பதற்கும்  என்று கூடச் சொல்லலாம். திரைப்படம் வெளிவந்த பிறகே விமரிசனம். மேடை நாடகங்கள்  அரங்கேறும்போதே கைத்தட்டல் அல்லது அழுகின தக்காளிகள் – இரண்டுமே பறக்கும்!

பத்திரிகை வெளிவந்தபின் தான் நம் எழுத்து வெளிவந்திருக்கிறதா என்றே தெரியும். வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டவுடன் பின்னூட்டம் வந்துவிடும் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லையா?

முகம் தெரியாத பலரின் நட்பு கிடைக்கும். எந்தவித பாசாங்குகளும் இல்லாத, எழுத்துக்களை மட்டுமே அடையாளமாகக் கொண்ட நட்பு! பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் இடலாம். இல்லையென்றால் சும்மா இருந்துவிடலாம்! எவ்வளவு சௌகரியம்! சிலசமயங்களில் நம் கருத்துக்களையும் நாசூக்காகத் தெரிவிக்கலாம். யாரும் யாருக்கும் எந்தவிதத்திலும் கட்டுப் பட்டவர்கள் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட, பிறர் எழுதும் எழுத்துக்களிலிருந்து நாம் கற்பது இருக்கிறதே, அதை எதனுடனும் ஒப்பிட முடியாது.

படிப்போம், எழுதுவோம் கற்போம்!

Comments

 1. நம் எழுத்துக்கள் அச்சில் வருமா, வராதா என்ற கவலை இல்லை; நாமே அச்சேற்றி விடலாம். இதைவிடப் பயன் "வேறு என்ன வேண்டும்?"

  நான் இப்படி தான் என் பதிவினை பார்த்து நானே மகிழ்ச்சி அடைவேன், பெற்ற குழந்தையை ரசிக்கும் தாய் போலே.... நன்றி மா...

  ReplyDelete
 2. உருக்கமான பதிவு...

  இந்த சுவையை அறிந்து கொண்டவர்கள் நிச்சயம் பகிர்தலை நிறுத்திக்கொள்ளமாட்டார்கள்...

  வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 3. அன்பு செழியன்,
  சும்மாவா சொன்னார்கள், 'காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 4. நன்றி தொழிற்களம் குழுவினருக்கு!

  ReplyDelete
 5. மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள்... நன்றி அம்மா...

  ReplyDelete
 6. பதிவருக்கும்..எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசத்தை அழகா சொன்னீங்க!

  எழுத்துக்களை புத்தகம் எனும் அரியணையில் ஏற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.... ஆனால் பதிவுலகத்தை பொறுத்தவரை ஒரு ஜிமெயில் ID இருந்தால் போதுமானது எழுத்தை அரியணையில் ஏற்றிவிடலாம்!

  பதிவின் தரத்தை பொறுத்து தாமதமானாலும் நிச்சயம் அங்கீகரிக்கப்படுவோம் என்பது நிச்சயம்!

  ரேங்க்.., அங்கீகாரம் என... எல்லாவற்றையும் விட ஒரு பதிவை எழுதும் போது நாமும் நிறைய விசயங்களை புதிதாக தெரிந்துகொள்கிறோம் என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை!

  எனது ஒவ்வொரு பதிவின் மூலம் நீங்கள் பயனடைகிறார்களோ இல்லையோ அந்த பதிவை எழுதுவதற்காக நான் எடுத்துக்கொள்ளும் முயற்ச்சியில் எண்ணற்ற பல புதிய விசயங்களை என்னால் தெரிந்துகொள்ளமுடிகிறது! இதைத்தவிர பதிவு எழுதுவதால் வேறு என்ன நன்மை வேண்டும்?

  ReplyDelete
 7. வாங்க தனபாலன்!
  தனபாலன் வீட்டில் மின்சார வெட்டு இல்லாமல் இருக்க வேண்டுமே என்று பதிவை வெளியிட்டதில் இருந்து கடவுளை பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன்.
  கைமேல் பலன்!
  நன்றி தனபாலன்!

  ReplyDelete
 8. அன்பு வரலாற்று சுவடுகள்!

  மிகவும் உண்மை! படிக்கிறவர்களைவிட, எழுத்தாளன் பெறும் நன்மை அதிகம்!

  உங்கள் அங்கிகாரம் எனது பதிவுக்குக் கிடைத்தபின் வேறு என்ன வேண்டும்?

  அப்படியே என் தளத்திற்கும் வந்து உங்கள் சுவடுகளைப் பதித்துவிட்டு வாருங்கள், ப்ளீஸ்!

  நன்றியுடன்,
  ரஞ்ஜனி

  ReplyDelete
 9. படிப்போம், எழுதுவோம் கற்போம் நன்றி அம்மா நல்ல பதிவு..

  ReplyDelete
 10. படிப்போம், எழுதுவோம் கற்போம்!

  படிக்கும் பொழுது கற்கத்தான் செய்கிறோம். ஆனால், நாம் படித்ததிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கி அதை வார்த்தைகளில் கோர்த்துத் தனிப் பதிவாக அல்லது கட்டுரையாக எழுதும் பொழுது நாம் அறிந்த கருத்து மேலும் விசாலப்பட எழுத்து உதவுகிறது. பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் பொழுது அவை நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து எழுதுவதில் ஒரு தேக்கம் இருக்கும். பதிவுகளில் உடனே நம் எண்ணங்களை அடுத்தவருக்குத் தெரியப்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பு எளிதாகக் கிட்டி விடுகிறது.

  நல்ல அலசல்.

  ReplyDelete
 11. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி 'பதஞ்சலி' ராஜா!

  ReplyDelete
 12. நல்ல கருத்துரையை வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள், வெங்கட் ஸ்ரீனிவாசன்!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்