படித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1)


  ‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.


 தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது.

  பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.

  சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின.

  பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

  கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின.

  இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.

  கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.

மேலும் இருக்கிறது  அடுத்த பதிவிற்காக காத்திருங்கள் .......

(இறைஅன்பு அவர்கள் இந்த ஒரு பதிவோடு நிறுத்திவிட்டார் அவர் வலைப் பூவில் , ஆதலால்,  அதனை நான் பிரதி எடுத்து மறு பதிவிட்டுளேன் பலருக்கும் பயன் படும் என்ற நோக்கில்)

                                                                                             நன்றி 

Comments

 1. இறையன்பின் எழுத்துக்களை நேசிப்பவர்களில் நானும் ஒருவன்.நல்ல பகிர்வு நன்பரே...படித்ததை பகிர்ந்து கொணடமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. பலரும் அறிந்து கொள்வார்கள்... தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 3. போராடி கிடைக்கும் வெற்றியே நிரந்தரமான வெற்றி...

  அதுவே வாழ்கையில் நமக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கும்...

  உங்கள் பகிர்தலும் பாராட்டுக்குரியதே..

  தொடருங்கள் சகோ...

  ReplyDelete
 4. நன்றி விஜயன் அவர்களே நானும் தான், தனபாலன் அண்ணா, தொழிற் களமே, நன்றி

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்