காந்தியின் அசைக்க முடியாத அஹிம்சை கொள்கை.


காந்தி தாத்தா என்று நாம் எல்லோரும் அழைக்கக்கூடிய மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி அவரை பற்றி சிறிது நினைவு கொள்வோம்.


உலகத்தில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை சில குறிப்பிட்ட சிறுபான்மை இனங்களின் மீது தொடர் தாக்குதல்கள், வன்முறைகள் முதலிய நடந்துகொண்டேதான் இருக்கின்றது. ஆனால் இந்த தாக்குதல்களை கண்டு பயந்து ஒதுங்காமலும், அதே நேரத்தில் பதிலடி கொடுப்பதாக நினைத்து கொண்டு வன்முறையில் இறங்காமலும், அஹிம்சை என்ற ஒரே ஆயுதத்தை கொண்டு அடக்குமுறையை வெற்றி கொண்ட ஒரே உத்தமர்  மகாத்மா காந்தி ஒருவர்தான். அவருக்கு முன்பும், அவருக்கும் பின்பும் இந்த அஹிம்சை ஆயுதத்தை இன்றுவரை யாரும் மிகச்சரியாக கையாண்டு வெற்றி பெற்றதாக தெரியவில்லை.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் மீதும் கறுப்பர்கள் மீதும் அடக்குமுறை,இனவெறி தாக்குதல் நடந்தபோது முதன்முதலாக அஹிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்தினார் காந்தி. இந்த போராட்டம் வெள்ளையர்களை ஆச்சரியப்படுத்தியது. அடித்தாலும் அடி வாங்குகிறார்கள், தண்டனை கொடுத்தாலும் வாங்கி கொள்கிறார்கள், ஆனாலும் கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்களே...இது என்ன புதுமையான போராட்டம் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

கொள்கைகள் நல்லவைகளாக இருந்தாலும் அந்த கொள்கைகளை அடையும் வழி வன்முறை வழியாக இருந்தால் அவை வெற்றி பெறாது என்பதற்கு  சுபாஷ் சந்திர போஸ் முதல் விடுதலைப்புலிகள் வரை பல உதாரணங்கள் உண்டு. ஆனால் அஹிம்சை போராட்டம் தோல்வி அடையாது என்பதை பல உண்ணாவிரத போராட்டங்கள் மூலம் நாம் உணர்ந்து இருக்கின்றோம். இந்த அஹிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்தியவர் நம்முடைய மகாத்மா என்கிறபோது நமக்கு பெருமைதான்.

மகாத்மா தன்னுடைய அஹிம்சா ஆயுதத்தை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை. சுதந்திரத்திற்கு பின் நடந்த மதக்கலவரத்தை அடக்கவும் பயன்படுத்தினார். இந்து முஸ்லீம் இரு மதத்தினருக்கிடையே நடந்த மிகப்பெரிய வன்முறையை தன்னுடைய உயிரைக் கொடுத்து நிறுத்தியதாகத்தான் வரலாறு இன்றுவரை அவரை நினைவு கொள்கிறது. இந்து, முஸ்லீம் மதக்கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, வன்முறையாளர்கள் திடீரென சமாதானத்தை மேற்கொண்டது அவரின் அதிர்ச்சியான மரண செய்தியை கேட்டபிறகுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு போராட்டத்தை ஆரம்பித்து வன்முறை மூலம் வெற்றி அல்லது தோல்வி அடைவது என்பது பண்டைய மன்னர் காலத்து போர்கள் முதல் தற்போது நடந்து வரும் இனப்போராட்டங்கள் வரை நாம் அறிவோம். ஆனால் இவ்வகை போராட்டங்களில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தவன் மீண்டும் ஒரு கட்டத்தில் எழுச்சியடைந்து வெற்றி பெற்றவனை அழிக்க நினைப்பான் அல்லது அழித்துவிடுவான். எனவே வன்முறை மூலம் கிடைத்த வெற்றி நீடிக்காது. நீடித்தாலும் நிம்மதியை கொடுக்காது. எனவே போராட்டம் என்பது வெற்றி பெறுவது மட்டுமல்ல, எதிரியின் மனதை திருத்துவதும் கூட என்பதை அறிந்துதான் காந்தி அவர்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். நம்மை அடிமைப்படுத்தியிருந்தாலும், இங்கிலாந்து நாடு இன்றுவரை நமக்கு நட்பு நாடாகவே இருப்பதற்கு காந்தியின் அஹிம்சை போராட்டமே காரணம். நம்மில் இருந்து பிரிந்தாலும், இன்று வரை நமக்கு எதிரியாக பாகிஸ்தான் இருப்பதற்கு காந்திக்கு பின்வந்த தலைவர்கள் அஹிம்சையை கடைபிடிக்காததே காரணம்.

நேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அதற்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் காந்தி அதை மெய்ப்பித்து காண்பித்தார். உப்பு சத்தியாகிரகத்தை முதலில் ஏளனம் செய்த வெள்ளையர்கள், அந்த சத்தியாகிரகத்தால் ஏற்பட்ட மக்களின் எழுச்சியைக் கண்டு உண்மையில் நடுங்கிப் போனார்கள்.


மகாத்மா காந்தியின் கொள்கைகள் இன்றளவும் உலகத்தலைவர்கள் இடையே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது நாம் உணர முடிகிறது. சென்ற ஆண்டு எகிப்து நாட்டு தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எல்ப்ரெடி என்பவர் "எகிப்தில் அதிபர் முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வர மகாத்மாகாந்தியின் சட்ட மறுப்பு இயக்க கொள்கை உதவி புரிந்தது" எனகூறியதிலிருந்து நாம் அறிய முடிகிறது. மேலும் மியான்மர் நாட்டின் புரட்சித்தலைவி என்று அழைக்கப்படும் ஆங் சாங் சூயி தனது போராட்டத்திற்கு காந்தியின் அஹிம்சா கொள்கைகள் பெரிதும் உதவியதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்ததை நாம் நினைவு கொள்வோம்.

நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு மட்டுமின்றி அஹிம்சை என்பது வீட்டிலும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய வழிகாட்டுதல். வீட்டிலும் பல பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அஹிம்சை துணைநிற்கும். எனவே நம் நினைவில் அஹிம்சையை என்றும் நினைவுறுத்தி காந்தியின் கொள்கைக்கு உயிர் கொடுப்போம்.,

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்