விரதமே உயிர் காக்கும் விருந்து.


நம் அரசியல்வாதிகளும், சில போராட்டக்காரர்களும் எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பல நாட்கள் பட்டினி கிடந்து, உண்ணாவிரதம் இருந்து, உயிர் நீத்த தலைவர்களும் இருக்கின்றார்கள், சில மணி நேரங்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருந்துவிட்டு, உண்ணாவிரதம் வெற்றி என்று முழக்கமிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கின்றார்கள்.  உண்ணாவிரதத்தால் அவர்களின் போராட்டத்திற்கு பயன் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக அவர்களின் உடல்நலத்துக்கு பயன் உண்டு. நம் முன்னோர்களும் விரதம் குறித்த மகிமைகளை பல பாடல்களில் நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. 

விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரே பொருளுடையன. எல்லாச் சமயங்களிலும் விரதங்கள் கைக்கொள்ளப்படுகின்றன. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும். இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன

இந்த விரதங்களையெல்லாம் ஒருவர் கட்டாயம் கைக்கொள்ள வேண்டுமென்ற நியதியும் கிடையாது. அவரவர் பக்தி, பலம், வசதி, விருப்பம், பொருள், இடம், காலம், பருவம் முதலியன நோக்கி மேற்கொள்ள வேண்டும்.
விரதங்களை அனுஷ்டிப்பதால் தேகசுத்தி, நோயின்மை, தீர்க்காயுள், மனத்தூய்மை பாவ நீக்கம், நினைத்த காரிய சித்தி, மன அமைதி, மகிழ்ச்சி, இறை பக்தி ஆகிய எண்ணிறைந்த நன்மைகள் உண்டாகுமென சைவ சமய சிந்தாமணி மூலம் அறிய முடிகிறது

சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள் இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். 

மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது. விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

வாரம் ஒருமுறை விரதம் இருப்பதால், வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.


 உணவை உண்ணாமல் இருப்பது மட்டுமே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து, எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.


 விரதத்தின் இன்னொரு வகை மவுன விரதம். மவுனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மவுன விரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மவுனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மவுனம். தக்‌ஷணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மவுனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மவுனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

எனவே உடலும், உள்ளமும் தூய்மையாகவும், கூர்மையாகவும் இருக்க வாரம் ஒருமுறை நாம் எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க பழக வேண்டும். வாரம் ஒருமுறை விரதம் இருக்க முடியாதவர்கள், முதலில் மாதம் ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருந்துவிட்டு பின் வாரம் ஒரு முறை என பழகிக்கொள்ளலாம்.
 

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்