மழை தருவது சந்தோஷமா? ஜலதோஷமா?
தற்போது சென்னையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், கனமழை பெய்து வருகின்றது. இம்மாதிரியான நேரங்களில் தவிர்க்க வேண்டிய சில அம்சங்களையும், உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம்.,

வெயிலோ, மழையோ, குளிரோ, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, நமது உடல் மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. அதேபோல, அந்தந்த தட்பவெப்பத்திற்கேற்ப, வைரஸ், பாக்டீரியாக்களால் நோய்களும் அதிகமாக பரவ ஆரம்பிக்கும்.
  

மழைக்காலம், பனிக்காலம் என்றாலே அதிக சளி, மூச்சுதிணறல், இருமல் தொந்தரவு பரவலாக இருக்கும். நோயாளிகள் இதிலிருந்து தங்களை தற்காத்து கொள்வது அவசியம்.ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது, மழையில் நனையக் கூடாது. மழையில் நனைந்தால் இருமல், சளி, தலைவலி, காய்ச்சல், மூச்சு முட்டல் ஏற்படும். இருதய நோயாளிகள் மழை, அதிக குளிரில் செல்லக்கூடாது. அதிக குளிர், ரத்தத் தமனிகளை சுருங்கவைப்பதால், ஆபத்தில் முடியலாம். மாரடைப்பு மற்றும் வால்வு கோளாறு உள்ளவர்களுக்கு அடிக்கடி சளிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், மூளை தொடர்பான நோய்கள் இருந்தால், நோயை கூடுதலாக்கி விடும்

1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்: கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம். ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.

2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்: மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும். எனவே தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.

3. சுகாதாரம் தேவை: மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும். ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலச வேண்டும்.

மேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும். மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்: குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது. மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.


கோடை காலமோ குளிர்காலமோ மேக் அப் போடுவது சிலரது வாடிக்கை. சீசனுக்கு ஏற்ப மேக் அப் போட்டால் மட்டுமே அழகு அதிகரிக்கும். இல்லை எனில் முகத்தின் இயற்கையான அழகே மாறிவிடும். மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும் பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம்.

இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின், தண்­ணீரால் கழுவ வேண்டும்.

மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி ஏற்படும். இதனை தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி சுடவேண்டும். அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்


இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும்.
நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

மழை என்பதே எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம். நாம் சிறிது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு மழையை வரவேற்றால் மழை நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இல்லையேல் ஜலதோஷத்தைக் கொடுக்கும்.

Comments

  1. இன்றைய நிலைமைக்கு பலருக்கும் பயன் தரும் யோசனைகள்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. அவசியமான பதிவுதான் .....

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்