படித்ததில் பிடித்தது...


அன்பும்      கருணையும்

~ Her Favorite Place ~ படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் இப்படைப்பு, வேதாத்திரி மகரிஷி அவரிகளின் படைப்பில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி...

  இயற்கையை  ஆராய்ந்து  பார்த்தால்  அன்பும்  கருணையும்தான்  எங்கும் எதிலும்  அமைந்திருக்கக்  காணலாம்.அன்பு  என்பது  எந்த  ஒன்றையும்   உடலாலோ  மனதாலும்  தன்னோடு   இணைத்துப்   பிடித்துக்  கொண்டிருப்பது. 
அப்படி   இணைந்துள்ள  மற்றொன்றுக்குத்   தனது  ஆற்றலைத்   தொடர்ந்து  அளித்து   அதனைக்   காத்து   வருவது   கருணை.

      ஒரு  முட்டையைப்  பாருங்கள்.  அதிலுள்ள  அனைத்துப்  பொருட்களையும்
ஒன்றிணைத்து   அதன்  ஓடு   பிடித்துக்   கொண்டிருக்கிறது.  இது  அன்பு.  அவ்வாறு   பிடித்துக்  கொண்டு  குஞ்சு  வளர்வதற்கு   தேவையான   இராசாயன   நீரை  அது  பாய்ச்சிக்  கொண்டே   இருக்கிறது.  அதுதான்  கருணை.

       உயிரினங்களில்   ஒரு  குழந்தையைப்   பெற்ற  தாய்  அதனை  எப்போதும் தன்னோடு   இணைத்துப்  பிடித்துக்  கொண்டோ,  அது  பிரிந்து  போய்விடாமல்
கண்காணித்துக்  கொண்டோ  இருக்கிறாள்,  இது  அன்பு. அதே  காலத்தில்  அந்தக்  குழந்தை  வளர்வதற்கும்,  வாழ்வதற்கும்  தேவையான  பால்,  உணவு  இவைகளை  அது  வளர்ச்சி  பெறும்   வரையில்  ஊட்டிக்  கொண்டே   இருக்கிறாள்,  இது  தான்  கருணை.

      இவ்வாறு  இயற்கையின்  திருவிளையாடல்களால்   தோன்றி  இயங்கிக்  கொண்டிருக்கும்  அனைத்திலும்   மறுக்கவோ, மாற்றவோ  முடியாத  நியதியாக   அமைந்திருக்கும்   அன்பையும்,  கருணையையும்  அந்தத்  தோற்றங்களில்  ஒன்றான  மனிதனானவன்  உணர்ந்து  தன்  வாழ்விலும்  செயல்களிலும்   பின்பற்றி  வாழ்வதே  இறை  வழிபாடு  ஆகும்.  அன்பும்  கருணையும்  என்ற  உயர்ந்த  ஒழுக்கம்தான்  எல்லாப்  பொருட்களையும்,  உயிர்களையும்,  மனிதர்களையும்  வழி  நடத்திக்  கொண்டிருக்கின்றது.

இதனை  உணர்ந்து  நடந்து  கொள்வதற்கு  வாய்ப்பான  ஆறாவது  அறிவு  மனிதனுக்கு  அமைந்திருக்கின்றது.  இந்தப்  பெருநிதியை  மனிதன்  அறிந்து   கொள்ளாமலோ,  அலட்சியப்படுத்தியோ, உணர்ச்சிவயப்பட்டோ,  வாழ  முற்பட்டால்  கயிறு  அறுந்த  காற்றாடியைப்  போல், நெறி  பிறழ்ந்த  வாழ்வு  வாழ்ந்து  மனிதன்  துன்பங்களை  ஏற்க  வேண்டிவரும்.  எனவே, அன்பும், கருணையும்  மனித  வாழ்வுக்கு  இன்ப  ஊற்றுக்கள்  என  உணர்ந்து  விழிப்புடன்  வாழ்ந்தால்,  இன்முகமும்  இனிய   சொல்லும்  உதவும்  கரங்களும்  துணை   நிற்க   வெற்றி   வாழ்வு   உருவாகும்.

      ''அன்பும்  கருணையுமாய்  அகன்ற   நிலையிலுள்ளாய்
                என்மனதை  விரித்து   இணைத்துக்  கொண்டாய்  உன்னுள்ளே
       கன்ம   வினைகளெல்லாம்   கழிந்தன  உணர்கின்றேன்
                 உன்னையறிந்து உய்ய உலகோர்க்குத்  தொண்டு செய்வேன்''
        
வேதாத்திரி     மகரிஷி அவரிகளின் படைப்பிலிருந்து.....
     இக்கவிதை    ஒவ்வொருவருடைய   உள்ளத்திலும்   ஒலித்துக்  கொண்டேயிருக்க  வேண்டும்.                                                                     

நன்றி ...

அழகுநிலா...

Comments

  1. நல்ல பகிர்வு... அவரின் பல படைப்புகளில் சிறந்த பகுதியை தேர்ந்தெடுத்து பதிவாகிப் பலரும் அறிய பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... இது போல் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்