இசை நிகழ்ச்சியை புறக்கணிக்கும் சீமானுக்கு சில கேள்விகள்.

 


இசைஞானி இளையராஜா அவர்களின் மாபெரும் இசை நிகழ்ச்சி டொரண்டோ நகரில் நவம்பர் 3 ஆம் தேதி நடக்க விருப்பதும், அதற்கான பிரஸ் மீட் சென்ற வாரம் நடந்ததும் நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கு சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தினரும் இன்னும் ஒரு சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். அதுகுறித்து சீமான் அவர்களின் விளக்கவுரையை முதலில் பார்த்து விட்டு பின் அவரிடம் கேட்க வேண்டிய சில நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கின்றோம். இந்த நியாயமான கேள்விகளுக்கான பதில்களை செந்தமிழன் சீமான் அவர்கள் நமக்கு அளிப்பார் என நம்புகிறோம்.
செந்தமிழன் சீமான் அவர்கள் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து கொண்டு ஒரு மிகப்பெரிய இயக்கத்தை நடத்தி ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின்  மனதை கவர்ந்தவர் என்பதை நாம் அறிவோம். அவருடைய அயராத உழைப்பிற்கும், அர்ப்பணிப்பு கொள்கைக்கும் உலகத்தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் என்பதை நாம் எள்ளளவும் மறுக்கவில்லை. நாளை தமீழீழம் கிடைத்தால், அதில் பெரும்பங்கு சீமானுடைய முயற்சி என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஒரு உண்மையாகும். அப்படிப்பட்ட மதிப்பிற்குரிய சீமான் அவர்கள், இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு சரிதானா என்று தமிழர்களாகிய நாம் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
1. இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக வீட்டையும், நிறுவனத்தையும் அடகு வைத்து நடத்தவிருப்பதாக திரு செல்வமணி கூறியதாக கூறும் சீமான் அவர்கள, அந்த கூற்றின் உண்மைத்தன்மையை அறியாமல் பேசலாமா? டொரண்டோவில் வாழும் தமிழர்கள் யாரும் வீட்டையும், நிறுவனத்தையும் அடகு வைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தும் அளவிற்கு பொருளாதாரத்தில் தாழ்ந்து போகவில்லை.  ஒரு செய்தியை பற்றி பேசும்போது அதன் உண்மைத்தன்மையை எப்பொழுதும் ஆராய்ந்து பேசும் சீமான் அவர்கள், இவ்விஷயத்தில் ஏன் அதை செய்யவில்லை?
2. இசைஞானியின் இசை நிகழ்ச்சிக்கு தாம் ஒரு போதும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்றும், நவம்பர் 3ஆம் நாள் இந்த இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்றும் கூறும் செந்தமிழன் சீமான் அவர்கள், ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும். நவம்பர் 3 ஆம் நாள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஆறு மாதங்களுக்கு முன்பே டொரண்டோவில் உள்ள முக்கிய அனைத்து ஊடகங்கள் ஒன்றுகூடி ஒருமித்த கருத்தில் முடிவு செய்தபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத இவர், வெகுசிலரும், செல்வமணியும் எதிர்ப்பு தெரிவித்த பின் எங்கே தானும் இந்த நிகழ்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், தம்மை தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள், தம்மை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்களா? என்ற நெருக்கதலுக்கு ஆளாகி, திடீரென நேற்று எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு செய்தது ஏன்? ஆறுமாதங்களுக்கு முன்பே இந்நிகழ்ச்சியை வேறு தினத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் அதுகுறித்து டொரண்டோ ஊடகவியலார்கள் சிந்தித்து இருப்பார்களே? அதை விட்டுவிட்டு நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாட்டையும் முடித்துவிட்டு, பிரஸ்மீட்டையும் முடித்துவிட்டு, நிகழ்ச்சிகான டிக்கெட் அனைத்து விற்பனை செய்தபின்னர், நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என உறுதியாக தெரிந்த பின்னர், எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு அறிக்கையை சீமான் அவர்கள் செய்யலாமா?
3.மேலும் சீமான் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் யூதர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். ஒரு யூதன் இன்னொரு யூதனை சந்திக்கும்போது மீண்டும் இஸ்ரேலில் சந்திப்போம் என்று கூறுவாராம். உண்மைதான். யூதர்களிடத்தில் உள்ள இனப்பற்று நம் தமிழர்களிடையே இருக்கின்றதா என்று சீமான் அவர்கள் தன்னுடைய மனசாட்சியை தொட்டு பேசட்டும். ஒரு யூதன் ஒரு பொருளை வாங்கச் செல்லும்போது, மற்ற இனத்தவர்கள் கூறும் விலையை விட ஒரு யூதன் அதிக விலை கூறினாலும், அவன் யூதனிடத்தில்தான் அந்த பொருளை வாங்குவான். அந்த மனப்பான்மை நம் தமிழர்களிடையே இருக்கின்றதா? அவனிடத்தில் ஒரே இலட்சியம்,ஒரே கொள்கை, ஒரே இயக்கம் மட்டும்தான் இருந்தது. அதனால் அவன் இலட்சியத்தை அடைந்தான். நம்முடைய தமிழர்கள் ஒரே லட்சியத்தை கொண்டிருந்தாலும், பல்வேறு இயக்கங்கள்,அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் மூலம் தனித்தனி போராட்டங்கள், தனித்தனி கூட்டங்கள் மூலம் நம்முடைய லட்சியத்தை நோக்கி நாம் ஆமைநடை போட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒரே லட்சியம் உள்ள ஒரு இனத்திற்கு இத்தனை அமைப்புகள்,இயக்கங்கள் தேவையா என்பதை சீமான் அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே சீமான் அவர்கள், யூதனின் போராட்டத்தையும் தமிழனின் போராட்டத்தையும் ஒப்பிடலாமா? 
4.நம்முடைய எதிரிகளின் சூழ்ச்சியால்தான்  நவம்பர் 3ஆம் தேதி நிகழ்ச்சி நடக்கின்றது என்றும், இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றால், அடுத்தது நவம்பர் 10, நவம்பர் 17, 24,26 போன்ற தேதிகளிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவைத்து ஒட்டுமொத்தமாக மாவீரன் வாரத்தையே மறக்கடிக்கச் செய்வார்கள் நமது எதிரிகள் என்று சீமான் அவர்கள் கூறுகிறார். இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. மாவீரன் வாரமாக கருதப்படும் நவம்பர் 21 முதல் 27 வரையிலான நாட்களில் இதுவரை கனடாவிலும், டொரண்டோவிலும் அல்லது தமிழர்கள் வாழும் வேறு பகுதிகளிலும் மாவீரன் நிகழ்ச்சியை மறக்கடிக்கூடிய எந்தவொரு நிகழ்ச்சியும் இதுவரை நடக்கவில்லை. இனிமேலும் நடக்க எந்த தமிழனும் அனுமதிக்க மாட்டான். இது சீமான் அவர்களுக்கும் தெரிந்தும் இப்படியொரு சந்தேகத்திற்கிடமான கேள்வியை கேட்டு தமிழர்களின் மனதை குழப்புவது நியாயம்தானா?

5. டொரண்டோவில் வாழும் முப்பதாயிரம் தமிழர்கள் ஒருமித்த கருத்தோடு இணைந்து நடத்தும் ஒரு விழாவிற்கு தெரிவிக்கும் சீமான் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களையும் சாடியுள்ளார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை எதிர்க்கின்றோம் என்ற காரணத்தை வைத்து கொண்டு அவர் ஒட்டு மொத்த கனடிய தமிழ் ஊடகங்களையும் தமிழ் இன துரோகிகள் போல் குற்றம் சாட்டுவது சரிதானா? இவ்வாறு கனடிய தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான் அவர்களின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு கனடிய ஊடகங்களின் ஆதரவை எப்படி பெறுவார்?

6. இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடக்க வைத்து மாவீரர் நிகழ்ச்சியை மறக்கடிக்க எதிரிகள் செய்யும் சதி என்ற குற்றச்சாட்டை சீமான் அவர்கள் எழுப்பியுள்ளார். உண்மையில் எதிரிகளின் நோக்கம் தமிழ் மக்களின் அமைப்புகளை பிரித்து தனித்தனியாக செயல்பட வைத்து அவர்களுக்குள் ஒரு கருத்து வேறுபாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்த நிகழ்ச்சியை எதிர்த்து, போராட்டம் நடத்தி வெற்றிகரமாக ஒருவேளை சீமானின் இயக்கம் நிறுத்திவிட்டால், அது சீமான் அவர்களின் வெற்றி அல்ல, நமது எதிரிகளின் வெற்றிதான் என்பதை அவர் உணர்வாரா? தெரிந்தோ தெரியாமலோ எதிரிகளின் சூழ்ச்சிக்கு அவர்தான் பலியாகிக் கொண்டிருக்கின்றார் என்பது அவருக்கு புரிகிறதா?

7. டொரண்டோவில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியை facebook மற்றும் Twitter போன்ற சமூக இணையதளங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மிகச்சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு குழுவிற்கு சீமான் போன்ற பெரிய இயக்கத்தை நடத்துபவர் ஆதரவு கொடுப்பதால், பெரும்பாலான தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதை அவர் எண்ணிப் பார்ப்பாரா?

8. நவம்பர் 3 ஆம் நாள் களிப்பான இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு அடுத்த பத்து நாட்களில் எப்படி ஒரு சோகமான மாவீரர் தினத்திற்கு தமிழன் தயாராவான் என்று கூறுகிறார் சீமான். ஆனாலும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியை மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். நவம்பர் 26,27 தேதிகளில் சோகமான ஒரு மாவீரர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் களிப்பான இசை நிகழ்ச்சிக்கு தமிழன் தயாராவான் என்று எப்படி நம்புகிறார்?

9. உங்கள் கோரிக்கையை சரியான நேரத்தில் வைத்திருக்கலாம் ! நிகழ்ச்சி கான அறிவிப்பு வந்து 6 மாதங்கள் ஆகிறது ! இப்படி ஒரு காலதாமதமாக கோரிக்கையை  வைத்து  இளையராஜா வை சங்கடத்தில் ஆழ்த்துவது நியாயமா? அவரது இசை கேளிக்கூத்தோ கொண்டாட்டமோ அல்ல, உண்ர்வுபூர்வமானது ! காயம்பட்ட நெஞ்சங்களுக்கு மருந்து போல் ஆறுதலளிப்பது ! ஒரு நிகழ்வை ரத்து செய்து, பல உள்ளங்களை நோக செய்து தான் நீங்கள் தமிழ் உண்ர்வுள்ளவர் என்று காட்ட வேண்டுமா ? 
10. தமிழர்களின் லட்சியமான தனி ஈழம் அடையும் வரை நவம்பர் மாதம் மட்டுமல்ல, எந்த ஒரு மாதத்திலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறினால் அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.  ஆனால் இதற்கு முன்பு நவம்பர் மாதம் எத்தனையோ அவருடைய திரையுலகினர் நடத்திய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இனியும் நிறைய நடக்கவுள்ளன. அவற்றையெல்லாம் இதுவரை எதிர்க்காத, எதிர்க்க மனம் இல்லாத சீமான் அவர்கள் இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதன் மர்மம் என்ன?

11. இந்த நிகழ்ச்சி ஒன்றும் நடிகர்களும், நடிகைகளும் அரைகுறை உடையுடன் வந்து ஆடும் குத்துப்பாட்டு நிகழ்ச்சி அல்ல. உணர்வு பூர்வமாகவும், இதய பூர்வமாகவும் இசைஞானி அவர்கள் பாடக்கூடிய ஒரு உன்னத நிகழ்ச்சி. அவருடைய இசை புண்பட்டு, ரணங்களாகி உள்ள நமது தமிழ் நெஞ்சங்களுக்கு இடக்கூடிய அருமருந்து. எனவே அவருடைய மனதையும் புண்ணாக்கி, கனடிய தமிழர்களின் மனங்களையும் புண்ணாக்கும் ஒரு எதிர்ப்பு தேவைதானா?


12. மாவீரரின் நவம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ஒரேநாளில் மிக பிரமாண்டமாக நடக்கவிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவை, மாவீரர் மாதம் என்ற காரணத்தை சொல்லி நிறுத்த சீமான் முயல்வாரா? அல்லது நவம்பர் மாதம் 13 ஆம் உலகதமிழர்கள் எல்லோரும் விரும்பி, புத்தாடை அணிந்து கொண்டாடும் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டாம் என அறிக்கை விடுவாரா?  இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நவம்பர் மாதத்தில் இதுவரை கொண்டாடியிருக்கின்றோம், இனிமேலும் கொண்டாடிக்கொண்டுதான் இருப்போம். அவற்றையெல்லாம் எதிர்க்காத சீமான் அவர்கள் இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிட்டு எதிர்க்கும் நிஜமான காரணத்தை கூறுவாரா?

13. இந்த இசை நிகழ்ச்சியில் சீமான் அவர்களும் பங்கு பெற்று,  நிகழ்ச்சியின் இறுதியில் மாவீரர் தினத்தை கனடாவில் எவ்வாறு நடத்தலாம் என்ற ஒரு கருத்தை அவர் கூற முன்வந்தால், அவருக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிகழ்ச்சியில் ஒதுக்குவதற்கு விழாக்குழுவினர் தயாராக இருக்கும்போது அதை ஏற்க மறுப்பது ஏன்?

இந்த இசை நிகழ்ச்சிக்கு சீமான் போன்ற தமிழ் உணர்வு உள்ளவர்களும் கலந்து கொண்டு, இசை ராஜாவை மட்டுமல்ல கனடாவின் மொத்த தமிழர்களின் மனதிலும் சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே டொரண்டோ வாழும் முப்பதாயிரம் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு. எனவே சீமான் அவர்கள் மனம் மாறி இளையராஜாவே அசந்து போகும் அளவிற்கு தன்னுடைய ஆதரவு கரத்தை நிச்சயம் சீமான் நீட்டுவார் என்று நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Comments

 1. படம் போடறதுக்குள்ளேயே பிரச்சினையா...? படம் ஓடூமா...இல்லையா...? ராஜாவுக்கே இப்படி ஒரு நிலையென்றால்....என்ன கொடுமை தமிழா...இதுதான் நமக்கு நாமே திட்டமோ...?இசைக்கு இனம் உண்டோ...

  ReplyDelete
 2. சீமான் என்ற தனி மனிதனை விடித்து அவர் ஆதரிக்கின்ற கருத்துக்களுக்கு முடிந்தால் மறுப்பு தெரிவியுங்கள் . இல்லையெனில் தயவு செய்து இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே !

  ReplyDelete
 3. சீமான் என்ற தனி மனிதனை விடித்து அவர் ஆதரிக்கின்ற கருத்துக்களுக்கு முடிந்தால் மறுப்பு தெரிவியுங்கள் . இல்லையெனில் தயவு செய்து இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே !

  ReplyDelete
 4. மனதை மகிழ்விக்கும் இசைக்கு இப்படி ஒரு தடையா?தமிழுக்கு எவ்வளவு கொடுமை ?

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்