சைவ உணவின் சத்திய உண்மைகள்.

 


மேலே உள்ள படத்தை இரண்டு நிமிடங்கள் சற்று உற்றுப்பாருங்கள். என்ன தோன்றுகின்றது என்பதை மனதில் வைத்துக் கொண்டு கீழே படியுங்கள்.

ஒரு ஊரில் ஆறு நண்பர்கள் காட்டு வழியே பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு செல்லும்போது பாதை மாறி எங்கெங்கோ சென்று சுற்றி அலைந்தார்கள். ஆறு பேருக்கும் பயங்கரமாக பசி எடுத்தது. சாப்பிட ஏதாவது தென்படுகிறதா என்று அந்த காட்டில் சுற்றி அலைந்தார்கள். அப்போது ஒரு மரத்தில் நிறைய பழங்கள் இருப்பதை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர். 

ஆறாவது மனிதன் "இந்த மரத்தை முழுவதும் வெட்டி, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் பறித்து நாம் ஊர் போய் சேரும்வரை பாதுகாத்து வைத்துக் கொள்வோம் என்றான். 
ஐந்தாவது மனிதன், "ஏன் மரம் முழுவதையும் வெட்ட வேண்டும். மரத்தின் பெரிய கிளைகளை மட்டும் வெட்டி, பழங்களை பறித்து உண்ணலாம் என்று கூறினான்.
நான்காவது மனிதன், " ஏன் பெரிய கிளைகளை வெட்ட வேண்டும். மரத்தின் சிறிய கிளைகளை மட்டும் வெட்டி, பழங்களை சேகரிக்கலாம் என்று கூறினான்.
மூன்றாவது மனிதன், "ஏன் கிளைகளை வெட்ட வேண்டும். பழங்களை மட்டும் பறித்து, உண்ணலாம் என்று கூறினான்.,

இரண்டாவது மனிதன், ஏன் எல்லா பழங்களையும் பறிக்க வேண்டும். தற்போது தேவையானதை மட்டும் பறித்து உண்டுவிட்டு, பின் வேறு இடத்திற்கு சென்று வேறு உணவை தேடிக்கொள்ளலாம்" என்று கூறினான்.

முதலாவது மனிதன், " கீழேயே நிறைய பழங்கள் விழுந்து உள்ளன. அவற்றை முதலில் உண்ணுவோம். பிறகு தேவைப்பட்டால், பழங்களை பறித்துக் கொள்ளலாம் என்று கூறினான்.

காட்டில் உள்ள ஆறு பேர்களுக்கும் பசி ஒரெ மாதிரிதான் உள்ளது. ஆனால் அவர்களின் எண்ணங்களில்தான் எவ்வளவு வித்தியாசம்.  பின்னர் அவர்கள் ஊருக்கு வந்ததும், அவர்களைப் பற்றிய செய்திகளை சேகரித்தபோது, மரத்தையும் கிளையையும் வெட்ட வேண்டும் என்று கூறிய மூவரும் அசைவ உணவை உண்டு, வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் என்றும், பழங்களை மட்டும் பறித்து உண்ணலாம் என்று கூறிய மூவரும் சைவ உணவை சாப்பிட்டு, அமைதியான வாழ்க்கையை நடத்துபவர்கள் என்றும் தெரிய வந்ததாம்.  சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வருபவர்களின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், அசைவ உணவை கலந்து சாப்பிடுபவர்களின் எண்ணங்களுக்கு நிறைய வித்தியாசங்கள் இருந்ததை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர் நமது விஞ்ஞானிகள்.

 சமீபத்தில் நடத்திய ஆய்வுகளிலிருந்து மாமிச உணவில் புரதமும், அமினோ அமிலங்களும் அதிகம் இருந்தாலும், அதனால் உடலுக்குத் தீமைகளும் அதிகம்  விளைகின்றன என்று கண்டறியப் பட்டது. நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உடல் நலமும் அமைகிறது. இரைப் பையில் ஜீரண நீர் சரியாக சுரக்க இந்தப் புரதமும், அதை ஜீரணிக்கும் சத்துக்களும் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. மாமிச உணவு சிறுகுடலில் தங்கி சரியாக ஜீரண மாகாமல் ஜீரண நீர் அதிகம் சுரக்க வேண்டியிருப்பதால் குடல் பகுதியை அந்த அமிலங்கள் பெரி தும் பாதிக் கின்றன. மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. கலோரிச் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவு களும் அதனால் நிறைய ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

பொதுவாக உணவுமுறையைப் பொருத்தவரை சைவ உணவுவகைகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு தாவரவகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்தல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாவர வகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடல் குண்டாக இருப்பதால் பல்வேறு வகை நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, சில வகை கேன்சர் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிகம். சில நேரங்களில் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாலோ அல்லது காய்கறிகளை அதிகம் உண்பதாலோ உடல் எடை தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. கொழுப்புச் சத்து குறைவாக எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை குறைந்து காணப்படலாம். அதற்கேற்ப உடல் எடையை சீரான அளவில் வைக்கத் தேவையான ஆகாரங்களை எடுத்துக் கொள்தல் அவசியமாகிறது. 

சைவ உணவு முறைகளைக் கொண்டிருப்போர் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும். புரோட்டீன், விட்டமின் டி மற்றும் பி 12, கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக்களை உடலுக்கு போதுமான அளவில் வேறு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் அசைவ உணவுகளில் இருக்கும் அளவிலான சத்துக்களை சமன்படுத்தலாம். சைவத்திலேயே விதவிதமான உணவுகளை சாப்பிடுவதுடன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். பால் பொருட்களைப் பொருத்தவரை குறைவான கொழும்பு கொண்டவையாக இருக்கட்டும்.

உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் திறன்  காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்த செய்வதோடு எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சிவிடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்தப் பிரச்சினை இல்லை.
 
பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகை 39 வயது முதல் 60 வயது வரை உள்ள 6000 சைவ உணவுக்காரர்களையும், 5000 அசைவ உணவுக்காரர்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்தது. சைவ உணவுக்காரர்கள், 40க்கும் குறைவாகவே புற்றுநோயால் இறக்கும் அபாயம் இருந்தது. மற்ற வியாதிகளால் இறக்கும் அபாயம் 20 தான் இருந்தது.  ஆனால் அசைவ உணவுக்காரர்கள் உடலில் இறப்பு அபாயம் அதிகம் இருந்தது. கொலாஸ்டிரல், புற்றுநோய் அறிகுறிகள் அதிகமாக காணப்பட்டன.


அசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் "உலக சைவ உணவாளர் தினம்" ( World Vegetarian Day) ஆக உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இந்த சைவ நாள் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் அனைத்து உயிர்கள் மீதும் அன்பை தெரிவிக்க வேண்டும் என்பதனால் தான். அதாவது எந்த உயிரையும் கொன்று சாப்பிடக்கூடாது என்பது தான். மேலும் ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. இருப்பினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் சார்ந்து வாழ்வது ஏன்?

அண்மைக்காலமாக மேலை நாடுகளில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருவது கண்கூடு. சைவ உணவின்  சிறப்பை உணர்ந்துதானோ, வள்ளுவரும் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் புலாலைத் தள்ளும்படி வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். ‘கொல்லான், புலால் மறுத்தானை  கைகூப்பி எல்லா உயிரும் தொழும்’ என்று அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.வடலூரில் வாழ்ந்த வள்ளலாரும் சைவ உணவின் சிறப்பினை தமது திருவருட்பா பாடல்களில் அற்புதமாக கூறியிருக்கின்றார். 

எனவே சைவ உணவை உண்டு, நோயில்லா மகத்தான வாழ்வை பெற்று அனைவரும் நலமுடன் வாழ்வோம்.

Comments