தமிழ்த்தென்றல்-மனதிலுறுதி வேண்டும்

தமிழ்த்தென்றல்----மனதிலுறுதி வேண்டும். அனைவருக்கும்தமிழ்த் தென்றலின இனிய  வணக்கம்.

      காலை நேரம். செய்தித்தாளைப் பார்த்துக் கொண்டிருந்த என் பார்வை சற்று விலகியது. சாரை சாரையாய், வேகவேகமாய் எறும்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்தேன். கறுப்பு நிறம், சின்ன உடம்பு. இவர்களுக்குப் பெயர் பிள்ளையார் எறும்புகளாம். காரணம் யாரையும் கடிக்காது, துன்புறுத்தாது. காரணப்பெயர் மிகப் பொருத்தம் தான். இந்த எறும்புகள் அது வழியில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தன. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஆர்வம் அதிகமாயிற்று


இந்த காலை வேளையில் இவை எங்கு போகின்றன? எதை சாதிக்க இந்த வேகம்? சண்டை இல்லை. அடிதடி இல்லை. ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லும் இந்த கலையைக் கற்றுக் கொடுத்தது யார்?. வழியில் ஒரு சிறு கல். முதலில் சென்ற எறும்பின் வேகம் சிறிது குறைந்தது. ஆர்வம் மேலிட அவை என்ன செய்கின்றன எனப் பார்த்தேன். சற்று நின்று நிதானித்த எறும்பு மெதுவாக அந்த கல்லைச் சுற்றிச் சென்றது. பின்னால் வந்த எறும்புகள் பின் தொடர்ந்தன.

    வீட்டின் ஒரு மூலையில் சிறிது அரிசி சிந்திக் கிடக்க, அதை நோக்கி எறும்புகள் ஊர்வதை கவனித்தேன். அவை ஆளுக்கொரு அரிசியை சிரமப்பட்டு இழுத்து வந்தன. அரிசியை ஓரிடத்தில் பத்திரப் படுத்துவதும் மீண்டும் சென்று அரிசியை எடுத்து வருவதுமாய் அவை காலையிலேயே சுறுசுறுப்பாகி விட்டதை உணர்ந்தேன். அவற்றின் முயற்சியில் இருந்த வேகம், விவேகம் என்னை திகைக்க வைத்தது; சிந்திக்க வைத்தது.

‘’முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்’’

என்ற குறளுக்கு விளக்கம் சொல்லிச் சென்றன அந்த எறும்புகள். பள்ளி செல்லாமல், பாடம் படிக்காமல் எவ்வளவு அழகாய் நமக்கு பாடம் சொல்லித் தருகின்றன. வழியில் வரும் சிறு தடைக்கல்லையும் படிக்கல்லாய் மாற்றும் விந்தைதான் என்ன? நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சிறுசிறு பிரச்சனைகளுக்கும், தோல்விகளுக்கும் துவண்டுவிடும் நாம் எங்கே?
‘’வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும், பெரும் மன
உறுதியையும் நீ கொண்டிருக்க வேண்டும்.
கடுமையாக உழை; உனது குறிக்கோளை நீ அடைவாய்.
நம்பிக்கையை இழந்து விடாதே;
பாதை கத்தி முனையில் நடப்பதைப்போல் மிகவும் கடினமானதுதான்
எனினும் எழுந்திரு; விழித்துக்கொள்; மனம் தளராதே.’’

என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவை என்பது புரிந்தது.

நம்பிக்கை…..நாம் எதை இழந்தாலும் இழக்கக் கூடாத ஒன்று. அந்த எறும்பிடம் இருக்கும் உறுதியும், நம்பிக்கையும், உழைக்கும் ஆற்றலும் நம்மிடம் இல்லையா? நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?
''மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்''

என்று பாரதி சொல்லியது நமக்காகத் தானே? முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவுமே இல்லை. அசாத்தியமானதை சாத்தியமாக்குவதே மனித முயற்சி தானே? திகைத்துப்போய் நின்ற என் காதை வருடிச் சென்றது காலைத்தென்றல். சுய நினைவிற்கு வந்த நான் காலை நேரத்தில் எறும்புகளிடம் பாடம் கற்ற திருப்தியுடன் எனது வேலையில் சுறுசுறுப்பானேன்.
அப்ப நீங்க?......

தமிழ்த்தென்றல் தொடர்ந்து வீசும்.......
காற்று வாங்க நீங்களும் வாங்க...

 
அன்புடன்
நாஞ்சில் மதி

Comments

  1. நம்மால் முடியாதது எதுவும் இல்லை நம்பிக்கை இருந்தால் வானம் கூட தொட்டு தூரம்தான்.உங்களின் பதிவும் படமும் அருமை

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு... எறும்புகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன... நன்றி...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்