ஏழைகளின் டானிக் முருங்கைக்கீரை.முருங்கைக்கீரை என்றவுடன் நம் எல்லோருக்கும் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகம் வரும். ஆனால் முருங்கைக்கீரையில், மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத அற்புதமான வைட்டமின்,இரும்பு சத்துக்கள் இருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். பெரும்பாலும் இது இலவசமாகவே கிடைப்பதால், இதனை பலர் அலட்சியப்படுத்துகிறார்கள். இதில் உள்ள பயன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் மிகவும் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.

 

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.  

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையையும் அகற்றும். 

தலை முடி நன்கு வளர தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்க்கீறை சூப் செய்யும் முறையை தற்போது பார்ப்போமா?

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

தினமும் இந்த முருங்கைக்கீரை சூப் பருகினால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கைக்கீரையை இனியும் நாம் உதாசீனப்படுத்தாமல், தினமும் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடுவோம்.

Comments

 1. முருங்கைக்கீரையில் இத்தனை மருத்துவ குணங்களா!உங்கள் தகவலுக்கு நன்றி......

  ReplyDelete
 2. தலைமுடி இப்படி வளருமா !!!!!!!!!.............:)
  அருமையான தகவல் மிக்க நன்றி மேலும் தொடர
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. நல்ல பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி......  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 4. நல்ல பயனுள்ள பதிவு

  ReplyDelete
 5. நல்ல பயனுள்ள பகிர்வு ! நன்றி !

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்