Ads Top

வாழ்க்கை வாழ்வதற்கே...

வாழ்க்கை வாழ்வதற்கே...

தினமும் காலையில் செய்தித்தாளில் கணவன் தூக்கில் தொங்கினார், மனைவி தீக்குளித்தார், குடும்பத்துடன் விஷ ம்   குடித்து தற்கொலை என்னும் செய்திகளைப் படிக்கும் போது முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக நம் மனம் ஒரு நிமிடம் துடிப்பது உண்மை.
                         ''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' 
                                                           
என்றார் ஔவையார். கிடைத்தற்கு அரிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள், உயிரினங்கள் அனைத்திலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்,  பகுத்தறிவு என்னும் ஆராய்ந்து அறியும் குணத்தைப் பெற்றவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்போது அதனை எதிர்கொள்ளாமல் தற்கொலை செய்வது ஏன்?

        எத்தனையோ கனவுகளுடனும் ,ஆசைகளுடனும்  குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். குழந்தைகளின் வரவையும்,அவர்களின் கொஞ்சு மொழியையும் தவளும் நடையையும், சேட்டைகளையும் ரசிக்கிறோம். அந்த பிஞ்சுகளுக்கு நஞ்சு கொடுக்க மனம் எப்படித் துணிகிறது?

        பொதுவாக தற்கொலைகளுக்கு கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் நெறி தவறுவது, கடன்தொல்லை, காதல் தோல்வி  போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

                       ''தீதும் நன்றும் பிறர்தர வாரா''

 என்று நம் முன்னோர்கள் மிக அழகாகச் சொன்னார்கள். விட்டுக்கொடுத்தலும் ஒருவர் மீது ஒருவர் ஆளுமையில்லாத அன்பு இல்லாமல் போனதும், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவசரப்படுதலுமே வாழ்க்கையில் நெறி தவறத் தூண்டுகோல்களாகின்றன.

        தன் வருமான நிலையறிந்து குடும்பம் நடத்தும்  போதும், சேமிக்கும் பழக்கம் இருக்கும் போதும் வாழ்க்கை குதூகலிக்கிறது. கணவன் மனைவிக்கிடையே அன்பு  உள்ளவரை வறுமை சுமையாகத் தெரியாது.எப்போது நம் வீட்டை  மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோமோ அப்போது ஒரு பெருமூச்சு வருகிறது. அதனைத் தொடர்ந்து புயல் வீசுகிறது முடிவு...நாம் தினமும் படிக்கும் செய்திகளாகின்றன. 

'' வாழ நினைத்தால்  வாழலாம். வழியா இல்லை பூமியில்'' எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.  உழைத்து வாழ ஆயிரம் வழிகள் இருக்கும் போது தற்கொலைதான் பிரச்சனைகளுக்குத் தீர்வா?

 அழகான ,அமைதியான வாழ்க்கைக்குத் தேவை அன்பும் தன்னம்பிக்கையும் தான். சிறு எறும்பு எத்தனை சுறுசுறுப்பாய் அதற்கான உணவை சேமிக்கிறது?.  ஆயிரம் மலர்களில் தேன் எடுத்து தேனீக்கள் ஒரு தேனடையைக் கட்டவில்லையா?  கோழியும் குருவியும் தன் குஞ்சுகளுக்காக இரை தேடவில்லையா? பருந்திடம் போராடவில்லையா?.

            போராட்டம்தான் வாழ்க்கை என்றாலும்  போராடும் மன தைரியத்தை இழக்கலாமா?தன்னம்பிக்கையையும் ,தைரியத்தையும் கைவிடலாமா?. தன்னை நம்பி வந்தவர்களை தவிக்க விடலாமா?.வேண்டாம் இந்த விபரீத முடிவு.    
                         
 ''வாழ்க்கை வாழ்வதற்கே
 வாழ்வது ஒரு முறை
 வாழ்த்தட்டும்  தலைமுறை''.

நாஞ்சில் மதி.


3 comments:

 1. தன்னம்பிக்கை பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 2. அனைவரும் அறிய வேண்டுய கருத்து !
  எல்லாமே கலந்து வந்தாதான் வாழ்க்கை .
  இன்பம் மட்டும் னா எப்படி ?
  "வாழ்க்கை வாழ்வதற்கே"
  எனக்கு பிடித்த வரிகள் .
  இந்த வரிகளால்தான் இந்த பதிவையே முழுமையாய் படித்தேன் .
  உண்மை
  வாழ்க்கை வாழ்வதற்கே !!

  ReplyDelete
 3. தோல்விகள் தொடர்ந்து வருவது வெற்றியின் சுவையை உணர்த்தவே... என்பதை மிக அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.. தொடரவும். நன்றி.

  ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.