சட்டை மேலே எவ்ளோ பாக்கெட்! (pocket)உங்களுடைய சட்டையில் எத்தனை "பாக்கெட்டுகள்" உள்ளன? இரண்டு? மூன்று? நான்கு? என்னடா இது, ஒரு சட்டையில் சாதரணமாக ஒரே ஒரு பாக்கெட் தானே இருக்கும்? நான்கு ஐந்து என்று கேட்கிறேன் என்று பார்க்கிறீர்களா?

இப்போதெல்லாம், இளைஞர்கள் போடும் சட்டையில் அத்தனை "பாக்கெட்டுகள்" இருக்கத் தான் செய்கின்றன! நாகரிக வளர்ச்சி!

சரி, அதனால் என்ன வந்தது என்கிறீர்களா? சட்டையில் அத்தனை பாக்கெட் இருந்தால் பரவாயில்லை. அந்த பாக்கெட் எல்லாவற்றிலும் வைக்க, "பாக்கெட் மனி" (pocket money) வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டால்???

ஆம், இன்றெல்லாம் நிறைய பெற்றோர்கள் இப்படித் தான் புலம்புகிறார்கள். நேற்று விஜய் டி.வி. யில் "நீயா - நானா" நிகழ்ச்சி பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எப்படிப் புலம்புகிறார்கள் என்று.

இன்று  கல்லூரி செல்லும் மாணவர்கள்  சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பிக்கும் முன்னரே, அதிகம் செலவு செய்யப் பழகிவிடுகிறார்கள்.

அப்படி என்ன செலவு?
 • செல்போன் ரீசார்ஜ்
 • நண்பர்களுக்குப் பிறந்தநாள் பரிசு
 • வெளியில் சென்று சாப்பிடுவதற்கு...
இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஒரு பெண், நேற்று அந்த நிகழ்ச்சியில் சொல்கிறார், பதினைந்தாயிரம் வேண்டுமாம் ஒரு மாதம் செலவு செய்ய!!!

எனக்குத் தான் ஒரே வருத்தமாகிவிட்டது, ஏன் என்கிறீர்களா? 

இப்படி செலவு செய்கிறார்களே என்றில்லை. நான் ஒரு நாள் கூட இப்படி செலவு செய்ததே இல்லையே என்று தான் :( :(

எனக்கு என் வீட்டில் மாதம் முன்னூறு ரூபாய் தருவார்கள். அது முழுக்க, கல்லூரியில்  " notes xerox"   எடுக்கவே சரியாகிப் போகும்! 

ஆனாலும், இதனால் எனக்கு என்றுமே வருத்தமாய் இருந்ததில்லை. செலவுக்கு என்று எனக்கு தேவைப்பட்டதும் இல்லை! எது வேண்டும் என்றாலும் வீட்டில் சொன்னால் வாங்கித் தந்துவிடுவார்கள்! பிறகு எதற்கு காசு?

அட, வீட்டில் இருக்கும் பெண் நான், எனக்கு சரி. கல்லூரி விடுதியில் இருப்பவர்களுக்கு? அவர்களுக்கும் என்ன செலவு இருக்கும்? 

புத்தகம் வாங்க? படிப்பு சார்ந்த செலவுகளுக்கு என்றுமே பெற்றோர் மறுப்புச் சொல்லப் போவதில்லை.

அவர்களுக்கும் அளவாகப் பணம் கொடுத்தால் போதும் தானே?

--------------

வீண் செலவுகள்!

வீணாகச் செய்யும் செலவுகளுக்குத் தானே மறுப்புத் தெரிவிப்பார்கள்?

என்னம்மா நீ, தோழர்களுக்கு பிறந்த நாள் பரிசு வாங்கிக் கொடுப்பது வீண் செலவா? என்று நீங்கள் கேட்கலாம். 

ஆம், வீண் செலவு தான்! 

ஏன், என்கிறீர்களா? சொல்கிறேன்.

நான் இதுவரை என் தோழிகளுக்கு பரிசு கொடுப்பதென்றால், இருபது ரூபாய், முப்பது ரூபாய், இப்படித் தான் கொடுத்திருக்கிறேன்.

அதனால், என் தோழிகள் என்னோடு பேசாமல் போய்விட்டார்களா? இல்லை, என்னை மட்டமாக நினைத்துவிட்டார்களா?

என் பரிசோடு சேர்த்து, என் அன்பு இருக்குமே, அது தானே பெரிது? விலை மதிப்பற்றது? 
இதை ஏன் இவர்கள் (அதிக விலைக்கு பரிசு கொடுப்பவர்கள்) எல்லாம் உணரவில்லை. கொடுக்கும் பரிசால், "நான் பெரியவன்" என்று பெருமை தேடும் இவர்கள், பரிசு கொடுக்காமல் இருக்கலாம் அல்லவா?

விலை உயர்ந்த பரிசால் தான் என் தோழி மகிழ்ச்சி அடைவாள் என்றால், அவள் உண்மையாகவே என் அன்பை விரும்புபவளாய் இருக்க முடியாது தானே?

ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டையில் எழுதிக் கொடுத்தால் போதுமே, அது பொக்கிஷமாய் இருக்குமே!

இன்றெல்லாம், அன்பின் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதா என்ன? :( :( 

-------------

நேற்று அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கிய போது நினைத்தேன், 

"நம்ம தான் ஏமாந்துட்டோமோ, நம்ம அப்பா நமக்கு காசே குடுக்குறது இல்ல, நாமளும் கேக்குறது இல்லையே...", என்று.

நிகழ்ச்சி முடிவில் நினைத்தேன்,

"அடடே, நம்ம அப்பா நம்மள எவ்வளவு நல்லா வளத்திருக்காங்க...", என்று.

-------------

நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு "அளவுக்கு அதிகமாய்" செலவு செய்யப் பணம் தருகிறீர்களா? 

இனி அந்தத் தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்.

"எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்தப் பணம், வியர்வை சிந்தி வந்ததாகத் தானே இருக்கும்???"

இதை ஏன் உணருவதில்லை பிள்ளைகள்?

இதோ எனக்கு ஒரு குட்டித் தம்பி இருக்கிறான். அவன் செலவு செய்ய வேண்டும், நிறைய செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பான், ஆனால், நான் அப்படி நினைத்தது கூட இல்லை. 

காரணம்? இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம், அவன் மட்டும் ஏன் அப்படி?

காரணம் உள்ளது, சிறுவயதில் நான் படித்த பள்ளியில், பெரும்பாலும் ஏழ்மையான வீட்டுப் பிள்ளைகள் தான் படிப்பார்கள். அங்கு நான் தான் கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளை போல இருப்பேன்.

என் தோழிகள் யாரும் அதிகம் செலவு செய்யமாட்டார்கள். அதனால், எனக்கும் ஒரு நாளும் வீட்டில் பணம் கேட்க வேண்டும் என்று தோன்றியது கூட இல்லை.

ஆனால் என் தம்பியோ, பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் படிக்கிறான். சிறுவயது முதலே! நான், பெரிய வகுப்புகள் மட்டும் தான் அங்கு படித்தேன்.

அங்கிருக்கும் பிள்ளைகள், தாராளமாக செலவு செய்வார்கள். இதோ, என் தம்பி இருக்கிறானே, அவன் தான் அங்கு ஏழ்மையான வீட்டுப் பிள்ளை போல. 

அவனுக்கு அவர்கள் செலவு செய்வதைப் பார்த்துவிட்டு, நாமும் அது போல் செய்தால் என்ன, என்று ஆசை வருகிறது. 

நான் சிறுவயது முதலே, மிகவும் கஷ்டப்படுபவர்களைப் பார்த்து வளர்ந்ததால், என்னை இந்தப் பள்ளியில் சேர்த்த போதும், அதிகம் செலவு செய்யத் தோன்றியதில்லை.

ஆக, இந்த செலவு செய்யும் பழக்கங்களுக்கு காரணம், நாம் வளரும் சூழல். சிறுவயதில் என்ன பார்க்கிறோமோ, எதை உணர்கிறோமோ, அது தான் காரணமாக இருக்கிறது.

எல்லாப் பெற்றோருமே, ஒரே போல, அதிகம் செலவு செய்யப் பணம் தராமல் பார்த்துக் கொண்டால், நலமாக இருக்கும் தானே?

சிறுவயதிலேயே அதிகம் செலவு செய்து பழகுவது, பின்னால், வரவுக்கு மீறி செலவு செய்ய வைத்துவிடும் தானே???

----------------------

பிறகு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்கு ஒரு ஆலோசனை:

எனக்கு ஒரு தோழி இருக்கிறாள், நன்றாக படம் வரைய, கைவினைப் பொருள்கள் செய்ய  வரும் அவளுக்கு, அவள் எங்கள் தோழிகளில் யாருக்காவது பிறந்தநாள் என்றால், அவள் கையாலேயே ஏதாவது செய்து தருவாள்.

அதைப் பார்க்கும் போது, அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். அவள் கொடுக்கும் பரிசுகளில், அன்பும் கலந்திருப்பதாலோ என்னவோ, அவை அத்தனை அழகானதாகத் தோன்றும். எத்தனை விலை கொடுத்து வாங்கிய பரிசுகளுக்கு மத்தியில் இருந்தாலும், அவள் பரிசு மட்டும் தனியாகத் தெரியும்!

இதோ அந்தத் தோழியின் கைவண்ணங்களை நீங்கள் "இங்கே" காணலாம்!

உங்களுக்கு நன்றாகப் பாட வருமா? உங்கள் தோழிக்காக பிறந்த நாள் பாடினால் கூட, அதுவும் அன்பு தானே? அதை விட சிறந்த பரிசு வேண்டுமா?

உங்களுக்கு கவிதை எழுத வருமா? ஒரு கவிதை, உங்கள் அன்பானவருக்காக, அதை விட உயரிய பரிசும் வேண்டுமா?

இப்படி செய்வதால், உங்கள் திறமையும் மெருகேறும், பரிசும் அன்பானதாய், இதயத்திற்கு நெருக்கமானதாய் அமையும்.

சட்டை மேலே எவ்ளோ பாக்கெட் இருந்தாலும், ஒரு பாக்கெட்டில் மட்டும் பணம் இருக்கட்டும், தொலைந்து போகாமல் பத்திரமாய் இருக்கும்! என்றும் என்றென்றும்!

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? நான் சொல்வது சரியா? 
------------------------------------------------------------------------Comments

 1. உங்கள் கருத்துக்கு நன்றி.கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பது கடினம் ஆனால் செலவு செய்வது எளிது. பெற்றோர்கள் கஷ்டப்படுவது எங்கே புரியப்போகிறது இன்றைய இளைஞர்களுக்கு

  ReplyDelete
 2. எல்லோருக்கும் நன்றி :)

  ReplyDelete
 3. நல்ல கருத்துள்ள பதிவு,
  //சிறுவயதில் நான் படித்த பள்ளியில், பெரும்பாலும் ஏழ்மையான வீட்டுப் பிள்ளைகள் தான் படிப்பார்கள். அங்கு நான் தான் கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளை போல இருப்பேன்.

  என் தோழிகள் யாரும் அதிகம் செலவு செய்யமாட்டார்கள். அதனால், எனக்கும் ஒரு நாளும் வீட்டில் பணம் கேட்க வேண்டும் என்று தோன்றியது கூட இல்லை.//
  இதை பற்றி நன்கு சிந்தித்துள்ளீர்கள்

  ReplyDelete
 4. உங்கள் தோழியின் கைவண்ணங்களும் அருமை, என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்

  ReplyDelete
 5. உண்மை தான், தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப் படும் பாளையங் கோட்டையில் வசிக்கும் நான் நன்றாக உணர்ந்து இருக்கிறேன், நல்ல பதிவு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லியதாக குறிப்பிட்டு இருந்தீர்கள், அந்த பதிவில் உங்கள் கருத்துரை பதிவாக வில்லை, ஆனாலும் தெரிவித்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. மிக்க நன்றி, @Kathir Rath

  ReplyDelete
 7. நன்றி @செழியன் . வரவில்லையோ? :( மன்னிக்கவும்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்