கொடிநாள் - டிசம்பர் 7

இன்று டிசம்பர் ஏழு, செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி, சகாயமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவ மாணவியர் கலந்துக்கொண்டனர். சகாயமாதா பள்ளி மாணவர்கள் வாத்தியம் முழங்க ஊர்வலம் சென்றது தனி அழகுதான்.

கொடிநாளை குறித்து எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கொடிநாள் என்பது இந்தியமக்களின் நலன் கருதி ஆயுதம் தாங்கி காவல் புரியும் முப்படை வீரர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் நாள்.

சுதந்திர இந்தியாவில், 1949 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 28 ஆம் தேதி, இந்திய தற்காப்பு பிரிவின் கீழ் , ஒரு கமிட்டி அமையப்பெற்றது. அக்கமிட்டியின் கொள்கைப்படி, நாட்டிற்கு சேவை புரியும் முப்படை வீரர்களுக்கு , அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பொருட்டும், அவர்களின் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் பொருட்டும், ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி , பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இக்கொடிநாள் கொண்டாடப்படுகிறது.

கொடியின் வரலாற்றை நினைவில் நிறுத்தவும், முக்கியமாக நாட்டின் எல்லையை காக்கும் படை வீரர்களின் குடும்பங்களை, பாதுகாப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும், என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தவுமே, அவர்களிடம் இருந்து நிதி திரட்டும் முறை உருவாக்கப்பட்டது.

இந்நிதியில் இருந்து வரும் பணத்தை, போர்க்கள புனர்வாழ்விற்கும், படைவீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், ஓய்வுபெற்ற வீரர்களின் ஊதியத்திற்கும், உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடெங்கும் திரட்டப்படும் நிதியை, நிர்வகிக்கும் பொறுப்பு KSB(Kendriya Sainik Board) ஐ சார்ந்ததாகும். பல தொண்டு நிறுவனங்களும் , பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கொடி நாளுக்கென பொதுமக்களிடம் நிதி வசூலிக்கப்படுகிறது. முப்படை வீரர்களுக்கு உதவும் பொருட்டு தாராளத்துவமாகவே நிதி வழங்கி தவறாமல் கொடியையும் பெற்றுக்கொள்வோம்.

கொடி என்றதும் நம் நினைவுகளில் நீங்காமல் இடம் பெறுபவர் திருப்பூர் குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. உங்கள் செய்திக்கு நன்றி......

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்