முதலாளி எவ்வழியோ, தொழிலாளி அவ்வழியே!!!?

இது எவ்வளவு தூரம் உண்மை? முதலாளி எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் தொழிலாளிகளும் இருப்பார்களா? அது எப்படி. இருவரும் வெவ்வேறு சிந்தனைகளை உடையவர்களாகத் தானே இருக்க முடியும்?

அப்படியா? சரி, இதோ பார்த்துவிடலாம், முதலாளி தொழிலாளி இவர்களுக்கு நடுவே இருக்கும் இணைப்பு குறித்து.

மரியாதை!
கைக்குக் கீழே துண்டை வைத்துக் கொண்டு, இரண்டு அடி குட்டை ஆகி தான் முன்பெல்லாம் தனக்கு வேலை தரும் முதலாளியிடம் வேலை செய்பவர்கள் பேசுவார்களாம், என் அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்.

இன்று அப்படி பெரும்பாலான இடங்களில் இல்லை. ஆனாலும், கிராமங்களுக்குச் சென்றால், இதைப் பார்க்கலாம். ஏன், நானே (நான் கிராமத்தில் இல்லை) பார்த்திருக்கிறேன், நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.

இது கூட சரி என்று வைத்துக் கொள்வோமே. ஆனால், இன்றும் பார்க்க முடிகிறது, துணை துவைப்போர், வீட்டில் வேலை செய்வோர், துப்புரவு வேலை செய்வோர் இவர்கள் எல்லாம் கை கட்டி, குனிந்து தான் நிற்கிறார்கள்.

இது ஏன்? அப்படித் தான் இருக்க வேண்டுமா? அப்படி இருந்தால் தான் பிழைப்பு நடத்த முடியுமா? என் அம்மாவிடம் கேட்டேன் நான், ஏன் இப்படி என்று. அது முன்பிலிருந்தே அப்படித் தான் என்றார்.

இன்றும் பார்க்க முடிகிறது என்னால், வீட்டில் வேலை செய்யும் பெண்ணை, அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்கள் கூட, "ஏ, இங்க வா, போ" என்று அழைப்பதை! என்னதான் வீட்டில் வேலை பார்த்தாலும், பெரியவர் இல்லையா? மரியாதை கொடுக்க வேண்டாமா அவருக்கும்? இதை பெரியவர்களும் கண்டிப்பது இல்லை! அவர்களே மரியாதை கொடுப்பதில்லை என்றபோது பிள்ளைகளை எப்படி அவர்கள் கண்டிப்பார்கள்? சொல்லிப் புரியவைப்பார்கள்.

உங்கள் அடுக்குமாடி குடியிருப்பின், காவல் காரர், முதியவர், அவரிடம் சற்று மரியாதையாக, உங்கள் வீட்டுக் குப்பைகளை எல்லாம் சேகரிக்க வரும் நபரிடம் சற்று கனிவாக, உங்கள் வீதியைக் கூட்டும் பெரியம்மாவிடம் பாசமாக, வார்த்தைகள் உதிர்த்ததுண்டா?

இவர்கள் எல்லோரும் உங்களோடு வயது குறைந்தவர் என்றால் விடுங்கள், மூத்தவர் என்றால், "வாங்க, போங்க" என்று மரியாதையாக பேசுவதுண்டா? இல்லை என்றால், இனி சற்று யோசித்துப் பாருங்களேன்.

சரி, முதலாளி, தொழிலாளி என்று தொடங்கி நாம் எங்கோ சென்றுவிட்டோம்.
வண்டியை மீண்டும் சரியான பாதையில் விடுவோமே?

முதலாளி எப்படியோ தொழிலாளியும் அப்படியே? - இது எவ்வளவு உண்மை?

என்ன வேலைகள் செய்யலாம்?
முதலாளி தான் ஒரு தொழிலை தொடங்குபவர். முதலீடு போடுபவர். தொழிலாளிக்கு வேலை கொடுப்பவர். இவர் சொல்வதை தான், தொழிலாளி செய்ய வேண்டும்? இவர் சொல்லும் வேலைகள் எல்லாவற்றையும் தொழிலாளி செய்ய வேண்டும்?

இப்படி அவசியம் இல்லை. முதலாளி சொல்லும் எல்லாவற்றையும் தொழிலாளி செய்யத் தேவை இல்லை.

"ஏ, ரெண்டு டீ வாங்கிட்டு வா...", இப்படி சொல்ல எந்த முதலாளிக்கும் உரிமையோ, அதிகாரமோ கிடையாது, அந்தத் தொழிலாளி பிரத்தியேகமாக தேநீர் வாங்கும் பணிக்காக நியமிக்கப்படாத வரையில்.

இப்படி சொன்னால், அதை செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

எந்த வேலைக்காக ஒருவர் நியமிக்கப்படுகிறாரோ, அந்த வேலைக்கு மட்டுமே அவரை உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், இன்று நிறைய இடங்களில் இப்படி நடப்பதில்லை.

இப்படி வேறு வேலைகள், தொழிலாளிக்குப் பிடிக்காத வேலைகளை முதலாளி செய்யச் சொன்னால், தொழிலாளிக்கு வெறுப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இவர்கள் வழி ஒரே வழி!
பிரபலமான திரைப்பட வசனம் ஒன்று இருக்கிறது, "என் வழி தனி வழி" என்று, ஆனால், அந்த வசனத்தை கனவிலும் நினைக்காதீர்கள்!

முதலாளியும் தொழிலாளியும் ஒரே வழியில் செல்ல வேண்டும்!

ஒரு முதலாளி இருந்தாராம், தினமும் தொழிற்சாலைக்கு காலையில் பதினொரு மணிக்கு தான் வருவாராம். அவர் தொழில் மிகவும் சிறப்பாக தான் நடந்து கொண்டிருக்கிறது.

இவர் தாமதமாக வருகிறாரே என்று, தொழிலாளர்களும் தாமதமாக வந்தால், வேலை எப்படி நடக்கும்?

அதனால் தான், முதலாளி எப்போதும் சரியாக இருக்க வேண்டும்.

சரி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் சரியாக தான் எல்லாம் செய்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்,

ஆங்கிலத்தில் "SWOT analysis" என்பார்கள்.

S - Strength (பலம்)
W - Weakness (பலவீனம்)
O - Opportunities (வாய்ப்புகள்)
T - Threats ( அச்சுறுத்தல்கள்)

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், உங்களது பலம், பலவீனம் இப்படி மேலே குறிப்பிட்டுள்ள நான்கையும் பட்டியலிடுங்கள்.

குறிப்பு: 

பலம், பலவீனம் - இது இரண்டும் உங்களுக்கே தெரிந்திருக்கும். அது தவிர, உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உங்கள் மனைவி, அப்பா, அம்மா, தங்கை, நண்பர்கள், இவர்களிடமும் கேட்டு எழுதிக் கொள்ளுங்கள். பலவீனத்திலும், பலத்திலும், நீங்கள் எப்படி தொழிலாளிகளிடம், உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

வாய்ப்புகள் - இது உங்கள் தொழிலில், உங்கள் துறையில் நீங்கள் முன்னேற என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பது. இவற்றை நீங்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றால், தேடுங்கள், செய்தித்தாள், இணையம், உங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படி சேகரித்துக் குறிப்பெடுங்கள்.
அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு, நான் மாணவி, நான் வாய்ப்புகள் பற்றி எழுத வேண்டும் என்றால், நிறைய கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், படிக்கும் போதே பகுதி நேரமாக துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் - இது எல்லாம் எனக்கு வைப்பாக இருக்கும்.

இது போல, தொழில் செய்வோர் என்றால், தொழில் சார்ந்த கருத்தரங்கங்கள் போன்றவை வாய்ப்பாக இருக்கும்.

அச்சுறுத்தல்கள் - இது உங்கள் தொழிலில் போட்டியாக, அல்லது உங்களை கீழே தள்ளக் காத்துக்கொண்டிருக்கும், பொறாமை கொண்ட வேறு நிறுவனமாக இருக்கலாம்.

மேலும் உங்களுள்ளே உங்களுக்கு எதிரி இருக்கலாம்! உங்கள் நிறுவனத்துக்குள் எதிரி, வீட்டுக்குள் எதிரி என்றில்லை!

நீங்களே எதிரியாக, பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம். அதாவது உங்களிடம் இருக்கும் பழக்கங்கள் - மது அருந்துவது, புகை பிடிப்பது, சோம்பேறியாக இருப்பது! இது போல, இருக்கும் அச்சுறுத்தல்களையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!


                                             சரி, எழுதியாயிற்று, அடுத்து என்ன? காற்றில் பறக்க விட்டுவிட்டு படுத்து உறங்க வேண்டியது தான்! அப்படி தான், இதை எழுதும் பெரும்பாலானோர், அதற்க்கு மேல் முயற்சி எடுப்பதில்லை!

எழுதியதில் இருக்கும், பலம் மற்றும் வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். பலவீனம் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைக்க வேண்டும்!

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு, இதை மீண்டும் எழுதுங்கள்! இந்த முறை பலவீனமும், அச்சுறுத்தலும் குறையும் படி பார்த்து உழைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!

உங்கள் வழி நல்ல வழியாக அமையும், வெற்றிகள் குவியும்! வாழ்த்துக்கள்!


======================================================================
கண்மணி அன்போடு!
Comments

 1. தெளிவான அலசல், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. தொழிற் களம் விழாவிற்கு வருவீர்களா ? அழைப்பிதழ் பார்த்தீர்களா

  ReplyDelete
 3. மிக மிக சரியாக சொன்னிங்க.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 4. அன்புள்ள கண்மணி,
  SWOT analysis மிக தெளிவு. இதை வெறும் முதலாளி மட்டுமோ அல்லது தொழிலாளி மட்டுமோ இல்லாமல் நாம் எல்லோருமே நம் பலங்களையும் பலவீனங்களையும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

  அருமையான பதிவுக்கும், பகிர்வுக்கும் பாராட்டுக்கள் கண்மணி!

  ReplyDelete
 5. பல தொழில்கள் நலிந்து போய்விட்டது ,காலம் மாறி விட்டது.இன்று வேலைக்கு ஆள் கிடைப்பது கடினம் மேலும் அவர்கள் தேவை எல்லாம் கவனிப்பதாக இருந்தால் மட்டுமே வருவார்கள் .விவசாயத்தை விட்டு விட்டார்கள் .

  ReplyDelete
 6. @ செழியன்: ம்ம் விழாவிற்கு வருகிறேன்

  ReplyDelete
 7. @தமிழ் காமெடி உலகம்:

  மிக்க நன்றி :)

  ReplyDelete
 8. மிக்க நன்றி ரஞ்சனி அம்மா. ஆம், எல்லோருமே செய்யல்லாம், நல்லது.

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்