பழமொழியும் அதன் உண்மையான அர்த்தமும்


                          
              நம் முன்னோர்கள் நமக்காக சொல்லிச்சென்ற பழமொழிகள் ஏராளம். ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தம், நம்மில் பலருக்கு இன்று தெரிவதில்லை.அவற்றில் சிலவற்றின் உண்மையான அர்த்தத்தை இங்கு காண்போம்.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து
            வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில், வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க, ஒரு போதும்  வாய்ப்பில்லை.. காரணம், பழமொழியின் உள் அர்த்தம் வேறு. உணவு உண்ணும் சொல்லான பந்தியில் உண்ணும் போது வலது கை முந்திச் செல்கிறது. போர் தொடுக்கும் போது, வில்லில் இருந்து அம்பு எய்தும் போது,கை பிந்திச் செல்கிறது. அதாவது ‘பந்திக்கு முந்தும் கை; படைக்கு பிந்தும் கை’ என்று இருக்க வேண்டிய பழமொழி, ‘பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’ என்று மாறி விட்டது.
குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்
        நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இருந்து பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன, குருவிக்கு தக்கன ராமேஸ்வரம். குருவிக்கும், ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்மந்தம். ‘குறி வைக்கத் தப்பாது ராமசரம்’ என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு ( ராமசரம் ) குறி வைத்துவிட்டால், தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். நாளடைவில், பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று மாறிப்போனது.
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
             சட்டியில் சாதம் இருந்தால் தான்,நாம் எடுக்கும் போது அகப்பையில் வரும், என்று நாம் அர்த்தம் கொள்ளும் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம், சஷ்டியில் நாம் விரதம் இருந்தால், கண்டிப்பாக அகப்பையான கருப்பையில் கர்ப்பம் நிலைக்கும் என்பது தான்.
கல்லானாலும் கணவன்;புல்லானாலும் புருசன்
             இதை படிக்கும் போது, ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவதுபோல் உள்ளது. ஆனால், கள்வன் ஆனாலும் கணவன், புலையன் ( தீயவன் ) ஆனாலும் புருஷன் என்பது தான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன் தீய பழக்கங்கள் மற்றும் தீய சேர்க்கையால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும், அவனை ஒதுக்கிவிடாமல், தன் அன்பினால் அவனை திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இப்பழமொழி.
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
           உண்மையில் இது ‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல் மேடுகள். இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும். எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது. குதிர் என்பதே திரிந்து குதிரை ஆனது.
மாமியார் உடைத்தால் மண் குடம்;மருமகள் உடைத்தால் பொன் குடம்
                ஒரு தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் செய்யும் போது, மாமியார் பெரிது படுத்தி விடுவார் என்பதுதான் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்- மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி.
       விவசாயிகள் வீட்டில் ஆண், பெண் , குழந்தை என அனைத்து பேரும் தங்கள் விளை நிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்ணும் ஈடுபடும் போது வெளி மனிதர்களுக்கு கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால் மண்ணுக்கு உரம். அதாவது , அந்த வீட்டுத் தலைவனின் கரங்களை பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண்ணும் பொன்னாகும். அழகான கருத்துடைய இப்பழமுழியே நாளடைவில் மாமியாரைப் பற்றிய ஒரு தவறான கருத்தை கூறுவதைப்போல் அமைந்து விட்டது.
         இன்னும் இது போல் எத்தனை பழமொழிகளுக்கு நாம் தவறான பொருள் புரிந்து கொண்டோமோ?
        கிண்டலாக நாம் சொல்லும் ஒவ்வொரு பழமொழிக்கும் முன்னோர்கள் வேறு அர்த்தம் சொல்லி இருப்பார்கள்.நாம் தான் அதற்கு தவறான பொருள் கொண்டிருப்போம்.

Comments

  1. அன்பின் மகேஸ்வரி - பழமொழிகளை - அவற்றின் விளக்கங்களை அருமையாக ஏற்றுக்கொள்ளும் படியாக எடுத்துரைத்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்