ப்ளாக்பெரி தம்ப்!


போனவாரம் ஒருநாள். வழக்கம்போல் கணணி முன் அமர்ந்திருந்தவள், முழங்கையில் திடீரென ஒரு வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகமாயிற்று. கையை தூக்கவோ, கஷ்டப்பட்டு தூக்கினால் மறுபடி கீழே போடவோ முடியவில்லை.

‘எங்கேயாவது இடித்துக் கொண்டீர்களா?’ – ஐஸ்வர்யா கேட்டாள்.

‘இல்லையே...!’

‘ராத்திரி தூங்கும்போது ஒரே பக்கமா படுத்துக்கொண்டு விட்டீர்களா?’

‘அப்படின்னா, கை முழுக்க வலிக்கணுமே, முழங்கையில்  மட்டும் தான் வலி!’

வலியுடனேயே யோகா வகுப்புக்கும் போய்விட்டு வந்தேன். வலி மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. டாக்டர் மதுகர் ஷெட்டியிடம் தஞ்சமடைந்தேன்.

மருத்துவ மனையில் காத்திருக்கும்போது நிதானமாக யோசிக்க நேரம் கிடைத்தது. ஏன் இந்த வலி?

சட்டென்று ‘பல்ப்’ எரிந்தது!

ஒரு மாதத்திற்கு முன் என் கணணி கொஞ்ச நேரம் பயன்படுத்தினாலே சூடாக ஆரம்பித்தது. திடீரென்று ஒரு நாள் நின்றே போய் விட்டது. என் பிள்ளை பார்த்துவிட்டு, ஒரு ஃபேன் ஸ்டாண்ட் வாங்கி வந்து அதன் மேல் கணணியை வைத்துக் கொடுத்து மேலும் ஏதேதோ செய்து (நமக்கு அதெல்லாம் புரியாதுங்கோ!) அதை பழையபடி நான் பயன்படுத்தும்படி (அல்லும் பகலும் அனவரதமும்!) செய்து கொடுத்தான்.

இதன் விளைவாக கணனியின் உயரம் அதிகரித்து விட்டது. நான் இனிமேல் உயர முடியாதே!  மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிளின் மேல் கைகளை (கோணாமாணா என்று) வைத்து கொண்டு கணணியை இயக்கி இருக்கிறேன். அதுதான் இந்த வலி!

அடுத்தநாள் யோகா வகுப்பிற்குப் போகும்போது என் தோழி ஜோதி சொன்னாள்: ‘என் பிள்ளையின் கல்லூரியில் இன்று ஒரு போட்டி. ஒரு நிமிடத்திற்குள் அலைபேசியில் யார் அதிக மெசேஜ் அனுப்புகிறார்கள்’ என்று. என்பிள்ளைக்கு முதல் பரிசு!’

பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன விசித்திரமான போட்டி என்று நினைத்துக் கொண்டேன்.அன்று செய்தி தாளில் ஒரு செய்தி: இன்றைய யுவ, யுவதிகள்  அலை பேசியில் இருக்கும் சின்னஞ்சிறு கீ போர்டில் விரல்களை அழுத்தி அழுத்தி வேக வேகமாக குறுஞ்செய்தி அனுப்புவதால் விரல்களில் ஒருவித வலி உண்டாகிறதாம். அதற்கு ‘ப்ளுபெர்ரி தம்ப்’ (Blueberry thumb) என்று பெயராம்.
இதைபோல உண்டாகும் இன்னொரு வலிக்கு ஐ-ஃபோன் ஃபிங்கர் என்று பெயராம்.

ஆரம்பிக்கும்போது கட்டை விரலில் சிறிது உளைச்சல் ஏற்படும். இதை அலட்சியம் செய்தீர்களானால் விரல்களில் வீக்கம் ஏற்படும். விரல்கள் மரத்துப் போகும். மணிக்கட்டுக்களில் வலி ஏற்படும். குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்து என்று இதற்கு அர்த்தம்!

மருத்துவரை பார்ப்பதற்கு முன் அல்லது வலி ஆரம்பமாகும் அறிகுறிகள் தென்பட்டால் சில பயிற்சிகள் செய்தால் ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும்.

கட்டைவிரலை வளைத்தல்: (Outward thumb bending)
கட்டைவிரலை இறுக்கமாக வைத்துக்கொண்டு உங்கள் உள்ளங்கை நோக்கியும், வெளிப்பக்கமாகவும் வளையுங்கள்.

கட்டைவிரலை சுழற்றுதல்: (Thumb Rotation)
வலியிலிருந்து ஆறுதல் பெற கட்டைவிரலை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் வட்டமாக சுழற்றவும். இறுகிப் போன மூட்டுகள் தளரும்.

வெந்நீர் ஒத்தடம்:  (Hot Fermentation)
இந்த முறையால் தசைகள் தளர்ந்து கொடுக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சிறிய கிண்ணத்தில் வெந்நீர் எடுத்துக் கொண்டு அதில் எப்சம் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். ஒரு டவலை இந்த உப்புத் தண்ணீரில் முக்கி, நன்றாகப் பிழிந்து விட்டு வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். ஐந்து முறை இதைபோல செய்யவும்.

இரவு நேரம்: வலிக்கும் கட்டைவிரலின் மேல் அழுத்தம் ஏற்படாதபடி தூங்கும் போது கட்டைவிரலை சுற்றி பஞ்சு வைத்து கட்டவும்.

கட்டைவிரலுக்கு ஓய்வு கொடுக்கவும். சிறிது நாட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவும். சற்று ஓய்வு கொடுப்பதனால் உங்கள் கட்டைவிரல் வலியிலிருந்து ஆறுதல் அடையும். இந்த ஓய்வு கட்டாயம் தேவை.

விரல்களில் வலி ஏற்படும் போதே ஜாக்கிரதையாக இருந்து விடுவது நல்லது. வலியுடனேயே, அல்லது வலியைப் பொருட்படுத்தாமல் விரல்களை பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதனாலும் பெரிய பலன் இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் வருமுன் காப்போம்! இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.

Comments

 1. நம் சிறு அலட்சியம் கூட எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்துகிறது என்பதை படிக்கும் போதே பயமா இருக்கு.Blueberry Thumb பற்றிய உங்கள் பதிவு அருமை

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் மகேஸ்வரி,

   செய்திதாளில் ப்ளாக்பெர்ரி என்று போட்டிருந்தார்கள். இதனை ப்ளுபெர்ரி தம்ப் என்றும் சொல்லலமா? தயவு செய்து எழுதுங்கள். எல்லோருக்கும் பயன்படும்.

   நன்றி!

   Delete
 2. Replies
  1. மிகவும் உண்மை!
   ஆனால் அது வந்தபின்தான் தெரிகிறது!
   நன்றி!

   Delete
 3. அன்பின் ரஞ்சனி நாராயணன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - முன்னெச்சரிக்கையகா இருப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அன்பின் சீனா ஐயா!

   துயர் வருமுன் காப்பவன்தான் அறிவாளி!

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்