ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் (பாகம் :16)
கடந்த பதிவில் உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் இணைப்பாக வடிவமைக்கப்பட்ட ஜேகுவார்ட் தறி பற்றி பார்த்தோம் .கைத்தறிக்கும் கணிப்பொறிக்கும் என்ன சம்பந்தம்?...கடந்த பதிவை கேள்வியுடன் முடித்திருந்தது நினைவிருக்கலாம் .

ஆரம்ப கால கணினிகள் துளை இடப்பட்ட அட்டைகள் (punched cards ) பயன்படுத்தின ,அதே அட்டைகளை தான் கைத்தறிகளும் பயன்படுத்தின


இந்த பதிவில் கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின் துவக்கத்தையும் பார்க்கலாம் .

கைத்தறி கணிப்பொறி :

ஜேகுவார்ட் கைத்தறி உலகின் முதல் நிரல்படு சாதனம்(programmable device).,புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் மனிதன் தரும் கட்டளைகளை புரிந்து வேலை செய்யும் சாதனம் .

மனிதனின் கட்டளைகளை எந்திரம் எப்படி புரிந்து கொள்ளும் ?

எந்திரங்களுக்குநாம் பேசுகிற மொழி புரியாது ,மனித மொழியை புரிய வைக்கவும் முடியாது (இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு :இந்த கட்டுரையின் ஏதேனும் பத்தியை கூகுள் மொழி பெயர்பில் கொடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாருங்கள் ).மொழி இயங்கும் முறை மிகவும் சிக்கலானது,எந்திரம் மனித மொழியை புரிந்து கொள்ள காலங்கள் பல ஆகலாம் .
சரி நாம் விசயத்திற்கு வருவோம் எந்திரத்திற்கு புரிகிற மாதிரி கட்டளை இட இரண்டே வழிமுறைகள் தான் இருக்க முடியும்
1. மனித மொழியை எந்திரத்திற்கு கற்று தரும் கடினமான வழிமுறை
2.எந்திரத்தின் மொழியை நாம் கற்றுக்கொண்டு கட்டளை இடும் எளிய வழிமுறை
இதில் இரண்டாவது வழிமுறை மூலமாகவே எந்திரங்களுக்கு கட்டளைகள் இடப்படுகின்றன .

எந்திரம்... மந்திரம்... தந்திரம்... :

எந்திரங்களுக்கு எந்திர மொழி மூலமாக கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன ,அதை எந்திரங்கள் புரிந்துகொண்டு வேலையை முடித்துக்கொடுக்கின்றன ,அது சரி மனிதனுக்கு எப்படி எந்திர மொழி தெரியும் ??,(ரொம்ப யோசிக்காதீர்கள் ).அது எப்படி என்பதை அடுத்த பத்தியில் இருந்து பார்க்கலாம் .

தண்ணீர் குழாயை வல இடமாக சுற்றினால் குழாயில் இருந்து தண்ணீர் வருகிறது,அதை திசை - மாற்றி திருகினால் தண்ணீர் நின்று விடுகிறது ,தண்ணீர் குழாயின் மொழி இது .தண்ணீர் குழாய் இரண்டு கட்டளைகள் மட்டுமே தெரிந்த ஒரு குழந்தை எந்திரம் .இந்த இரு கட்டளைகளை நாம் எப்படி மாற்றி மாற்றி கொடுத்தாலும் அது செய்யும் , இது போன்று ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒவ்வொரு மொழி உண்டு .ஆனால் பாவம் தண்ணீர் குழாய்க்கு "வாசிக்க தெரியாது " ,சில எந்திரங்களுக்கு வாசிக்க தெரியும்...(எப்படி வாசிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் கமெண்ட்-ல் சொல்லுங்கள் அல்லது vijayandurairaj30@gmail.com மெயில் அனுப்புங்கள் )

எந்திர மொழிகளை பற்றிய ஞானம் மனிதனுக்கு எப்போது வந்தது ???

1880 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தனது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது , அதை நடத்தி கணக்குப்போட்டு ,எண்ணிக்கையை சொல்ல அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட கால அளவு ஏழு ஆண்டுகள் (அம்மாடியோவ்!),
1890-ல் மீண்டும் கணக்கெடுப்பை நிகழ்த்த திட்டமிட்டது ,இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்தது ,இதனால் இம்முறை சென்சஸ் கணக்கெடுப்பை செய்ய 13 வருடம் ஆகலாம் என்று தோராயமான கணிப்பு சொல்லப்பட்டது .இதற்கு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? என்று ஆராய்ச்சி செய்து சென்சஸ் கணக்கெடுப்பை விரைவாக நடத்த வேண்டும் என்று அமேரிக்கா முடிவு செய்தது .

கணக்கெடுப்பை எளிதாக்கிய துளை இடப்பட்ட அட்டைகள் :

ஹெர்மன் ஹாலரித் (Herman Hollerith) என்ற புள்ளியியலாளர் இந்த பிராஜக்ட் பற்றிய சிந்தனையுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் ,அப்போது ரயிலில் டிக்கெட் கொடுக்கும் நபர் டிக்கெட்டில் துளை இடுவதை பார்த்தார் ,அந்த துளைகள் பயணியின் வயது மற்றும் அவரது பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்கிற தகவல்களை குறிக்கும் விதமாக இருந்தன . (நம்மூர் பேருந்துகளில் கட்ரக்டர்கள் கிழித்து தரும் டிக்கெட்டில் அந்த கிழிந்த இடம் நாம் வண்டியில் ஏறின இடத்தை குறிக்கும் )

டிக்கெட்டில் துளை இடும் எந்திரம் ரயில் கண்ட்ரக்டருடன்


துளை இடப்பட்ட டிக்கெட்

அவர் மனதில் ஒரு மின்னல் ,இதே முறையை நாம் சென்சஸ் கணக்கெடுக்க பயன்படுத்தினால் என்ன ?,சென்சஸ் கணக்கெடுப்பு பிரச்சனைக்கு தீர்வுடன் ரயிலில் இருந்து இறங்கினார் ஹாலரித்.


ஹாலரித் சென்செக்ஸ் எடுக்க பயன்படுத்திய அட்டைகள் 12 வரிசை மற்றும் 24 நெடுவரிசை (12 rows ,24 columns ) உடைய அட்டைகள்

அந்த அட்டைகள் சென்செக்ஸ் கணக்கெடுப்பில் எப்படி உதவின ?,துளை இடப்பட்ட அட்டைகள் எப்படி கணினி வளர்ச்சிக்கு காரணமாயின என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம்...

மாய உலகம் தொடரின் பிற பாகங்களை படிக்க ....Comments

  1. தம்பி விஜயனின் விஜயம் ஜெயம்...

    ReplyDelete
  2. அற்புதமான எழுத்து திறமை உனக்கிறது விஜயா.. தொடரு...

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்