Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

அம்மாவைக் கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, ‘உலக அன்னையர் தினம்கொண்டாடுவது நகரவாசியின் வழக்கமாகப் போய்விட்டது. அதே மாதிரிதான் சில நாட்களுக்கு முன்பாக கடந்துப்போனது உலக சிட்டுக்குருவிகள் தினம்’.

சிட்டுக்குருவியா.. அது எப்படி இருக்கும்?” என்று அப்பாவை, அம்மாவை கேட்கக்கூடிய ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான். நம் முற்றங்களிலும், வாசல்களிலும், தெருக்களிலும்.. எங்கெங்கு காணினும் காணப்படக்கூடிய மிகச்சிறிய பறவையினமாக சிட்டுக்குருவி இருந்தது. சாம்பலும், பிரவுனும் கலந்த அழகான இறக்கைகள். சிறிய முகம். துறுதுறுக்கும் கண்கள். குட்டியான அலகு. சுறுசுறுப்புக்கு பேர் போனவை இந்த குருவிகள். பெரும்பாலும் வீடுகளில் கூடுகட்டி வசிப்பதால் வீட்டுக்குருவிகள் என்றும் சொல்வார்கள். செல்லப்பறவையாக வளர்க்கப்பட்டதில்லை என்றாலும், அதிகாலையில் இக்குருவிகளின் சத்தம் கேட்டால்தான் நாளே நிம்மதியாக பலருக்கும் விடியும்.

துரதிருஷ்டவசமாக சிலகாலமாக இப்புள்ளினம் அருகிக்கொண்டே போகும் உயிரினம் ஆகிவிட்டது. காரணம்.. ஒன்றா, ரெண்டா? குறிப்பாக இதனால்தான் சிட்டுக்குருவிகள் மறைகின்றன என்று ஒரே காரணத்தை சுட்டிக் காட்ட முடியாது. ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதையில் ஆலிஸ் அப்படியே மறைவதைப் போல, மெதுவாக நம் கண் முன்னால் மறைந்துக்கொண்டே போகின்றன இந்த சுட்டிப் பறவைகள். இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகை ஒன்று சிட்டுக்குருவிகளின் மீது அக்கறை கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றும் உருப்படியான ஐடியா ஒன்றினை தருவபவருக்கு கோடிக்கணக்கில் பணம் பரிசாக வழங்குவதாக அறிவித்தது. இன்று வரை கேட்பாரின்றி கிடக்கிறது அந்த பரிசுப்பணம்.

நம் ஊர் சூழலில் சிட்டுக்குருவிகள் குறைந்துவருவதற்கு முதன்மையான மூன்று காரணங்களை பட்டியலிடுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஒன்று, பூச்சி மருந்துகள். ரசாயன பூச்சி மருந்துகளாலும், வேதியியல் உரங்களாலும் நிலம், நீர் அனைத்துமே மாசுபட்டு வருகின்றன. சிறு பூச்சிகளும், புழுக்களும் பறவையினங்களின் உணவு. அவை பூச்சி மருந்துகளால் கொல்லப்படும் சூழலில் பறவைகளுக்கு உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது. மேலும் தானியங்களிலும் பூச்சி மருந்துகளின் பாதிப்பு இருப்பதால், அவற்றை உண்ணும் பறவைகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழக்கின்றன.

இரண்டு, ஓட்டு வீடுகள் குறைந்தது. முன்பு பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாக இருந்தன. அந்த ஓடுகளின் இடைவெளி குருவிகள் கூடுகட்டி வாழ ஏதுவாக அமைந்திருந்தது. ஓடுகள் குறைந்து, கான்க்ரீட் இல்லங்கள் அதிகமாக அதிகமாக குருவிகளுக்கான வாழ்விடம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மூன்று, செல்போன் டவர்களின் கதிர்வீச்சு. கோவை சலிம் அலி பறவையியல் இயற்கை வரலாறு மையத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை சோதனை அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பது முட்டைகளை கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்திருந்து பரிசோதித்ததில், எல்லா முட்டைகளின் கருக்களுமே சிதைக்கப்பட்டு விட்டன என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த நிலையை எல்லாம் பார்த்து, கதறிப் பதறிக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடந்துப்போன உலக சிட்டுக்குருவித் தினத்தை (மார்ச் 20) சாக்காக வைத்து, இப்பறவையினத்தை காக்கும் முயற்சிகளுக்கு மக்களிடம் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சென்னை இயற்கையியலாளர் அமைப்பு (Madras Naturalists’ Society ) சிட்டுக்குருவிகள் குறித்த ஒரு மக்கள் கணக்கீட்டை நடத்தியது. மார்ச் 20 அன்று சிட்டுக்குருவிகளை பார்க்க நேர்பவர்கள் அதுகுறித்த சில விவரங்களை தங்களுக்கு ஃபேஸ்புக், மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது. சிறப்பாக சிட்டுக்குருவிகளை படமெடுத்து அனுப்புபவர்களுக்கும் பரிசும் உண்டு என்று அறிவித்தது.

ஆச்சரியகரமான வகையில் இந்த சிறு முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக பெருமைப்படுகிறார் அவ்வமைப்பின் தலைவர் கே.வி.சுதாகர். சென்னை நகரின் மையத்திலேயே, பல பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பகுதிகளில் எல்லாம், இன்னும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டுமோ, நாம் அதை செய்ய முன்வரவேண்டும்என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட ஐநூறு பேர் அன்றைய தினம் மட்டுமே சிட்டுக்குருவிகளை கண்டதாக மகிழ்ச்சியோடு தங்களிடம் தெரிவித்ததாக சொன்னார் சென்னை இயற்கையியலாளர் அமைப்பின் உறுப்பினர் காயத்ரி கிருஷ்ணா.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுப்பதற்கான கணக்கெடுப்பு அல்ல இது. சென்னை நகரில் எந்தெந்தப் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன, இங்கே மட்டும் எப்படி அவற்றால் வாழமுடிகிறது, என்ன காரணமென்று தெரிந்துகொள்வதற்காக இதை அறிவித்தோம். பொதுவாக நடுத்தரக் குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகமாக காணப்படுகின்றன. அரிசி மண்டிகள் இருக்கும் பகுதிகளிலும் நிறைய காணமுடிகிறது.

தனிநபர்கள் நிறைய பேர் அட்டைப்பெட்டிகளால் குருவிகளுக்கு கூடு அமைத்து, தானியம் கொடுத்து வாழவைக்கிறார்கள் என்கிற நெகிழ்ச்சியான விஷயங்கள் நிறையவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்தபடியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை பெருக்குவது, துல்லியமான கணக்கீடு செய்வது, மக்களிடம் இவற்றை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாதிரியான பணிகளில் ஈடுபடுவோம்என்றார்.

தனி நபர்களும், இம்மாதிரி தனியார் அமைப்புகளும் இயற்கையை காக்க வரிந்துக்கட்டிக் கொண்டு களமிறங்குகிறார்கள். வனத்துறை மாதிரி பெரிய கட்டமைப்பை வைத்திருக்கும் அரசாங்கமும் மனசு வைத்தால் சிட்டுக் குருவிகளை மட்டுமில்லாமல், அழிந்துவரும் பல்வேறு புள்ளினங்களையும் காக்கலாமே?எக்ஸ்ட்ரா மேட்டர் :
சிட்டுக்குருவிகளுக்கு
இடம் கொடுங்கள்!


வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள். நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள். சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள். சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.நன்றி : தோழர் ந.தீபக்குமார்  & காரல் மார்க்ஸ்
படங்கள் : கூகுள் வலைதளம்

Post a Comment

2 Comments

  1. வாங்க வந்து பாருங்க எங்கள் வீட்டில் இருக்கும் பறவைகளை...

    ReplyDelete
  2. Nichayam anbare, matrum ithu perumbanyana makkalukkana pathivu endru eduthuk kollavum, thangalukkana pathivai veru oru thagavaludan thara muyarchi seikiren:-)

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்