பட்டாசுகளுக்குப் பின்னால்!!!!!

திபாவளிஎன்றதும் முதலில் ஞாபகத்திற்கு வருவது பட்டாசுகள். தீபம் ஏற்றுவது, எண்ணை குளியல், புதுதுணி அணிவது, பலகாரங்கள் பகிர்வது என எல்லாமும் பட்டாசுக்கு பின்னாடிதான். பள்ளிக் காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே விழா களை கட்டிவிடும். அம்மாச்சி, அம்மா என எல்லோரும் முறுக்கு சுற்றுவதும், அதிரசம் சுடுவதுமாக இருப்பார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடி சத்தங்கள் கேட்கும் போதே மனதுக்குள் மழையடிக்கும்.

பட்டாசுகள் வெடிப்பதற்காவே சீக்கிரம் பெரிய பையனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டதெல்லாம் ஒருகாலம். வெடிகளை கையில் பிடித்து கதிகலங்க வைப்பவர்களை காணும் போது நாமும் அது போல செய்ய வேண்டும் என்று ஏங்கியபடி வேடிக்கை பார்ப்பேன். குழந்தைகளுக்கு புதுத்துணிகள்கூட தேவையில்லை இரண்டு பட்டாசு பாக்கெட்டுகள் போதும், மகிழ்வாக தீபாவளியை கொண்டாடிவிடுவார்கள். பள்ளிகாலத்தில் ஒரு மாதமாக கொண்டாடிய தீபாவளி, கல்லூரிக்கு வந்ததும் ஒன்றிரண்டு நாட்களாக மாறியது. இப்போது அவையும் தேவையா என்ற சிந்தனை சிறகடிக்கிறது.


வருடம் முழுவதும் ஓயாமல் உழைத்தவர்கள் கொஞ்சம் மகிழ்வாக இருக்கின்ற திருவிழாக்களை புறக்கணிக்கச் சொல்லவில்லை. எல்லா குழந்தைகளும் வெடிகள் வெடிக்கும் போது, நம்முடைய குழந்தைகள் வேடிக்கை பார்த்தால் வெதும்பிப்போகும். எல்லா கொண்டாட்டங்களுக்கும் அளவு இருக்கிறது. அதை நாம் மீற நினைத்தாலும், நம் பொருளாதாரம் நம்மை மீற விடாது. அதனால் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க சொல்லவில்லை. நம் குழந்தைகளும், நாமே குழந்தைகளாகவும் கொண்டாடும் தீபாவளிக்கு பின்னால் இருக்கும் சில சோகங்களையும் பகிர்ந்து கொள்வதே நோக்கம்.
தினமலர் வாரமலரில் காசை கரியாக்கிடுவீர்என்றொரு தலைப்பில் கட்டுரை. வலைப்பதிவர்கள் வைக்கும் தலைப்பு போல மிகவும் ஈர்த்தது. அதன் சாரம்சம், “காசு கொடுத்து வாங்கும் பட்டாசு வெடித்த பிறகு கரியாகத்தான் போகிறது என்றாலும், அந்த கரிக்குப் பின்னால் இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. எனவே இந்த தீபாவளிக்கு நீங்கள், உங்கள் காசை கரியாக்குங்கள்என்பதே.

சிவகாசியில் மழை பெய்வது கடினம் என்பதால், அடிக்கின்ற வெயிலை தங்களுக்கு சாதகமாக மாற்றி பட்டாசுகளும், தீப்பெட்டிகளும் செய்து வருகின்றார்கள். அதற்காக யாரும் சிவகாசியில் இருக்கும் குடும்பங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டாசுகளை வாங்கப்போவதில்லை. இது நமது பணம் வீணாகவில்லை, சிவகாசியில் இருக்கும் ஏழைகளுக்கு போகிறது என்று மனதினை சமாதானம் செய்து கொள்வதற்கான வழி அது. புத்தகத்தில் சொல்வது போல் பட்டாசுகள் விற்கும் பணம் அங்கிருக்கும் உழைக்கும் மக்களுக்குதான் போகிறதா என்றால் இல்லை என்பது வேதனையான பதில்.
முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சிறுவர்களையும், கொத்தடிமைகளாக இருக்கும் இருக்கும் குடிசை வாசிகளையும் பற்றிய டாக்குமன்டிரியை முகநூலில் தமிழச்சி பகிர்ந்திருந்தார். 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமியை அடிமையாக விற்கும் நிலையில் இருப்பவர்களுக்கு நாம் வாங்கும் பட்டாசுகளால் பங்கு போகப்போகிறாதா என்ன?. பட்டாசு விபத்து நடந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே பணம் கொடுக்காத முதலாளிகள், பட்டாசுகள் அதிகம் விற்பதனால் போனஸ் கொடுக்கப்போகின்றார்களா?.
நமக்கு நாமே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, விடைகளை தேட வேண்டியதுதான்.

நன்றி : தோழர் ந.தீபக்குமார் 

Comments