வணக்கம்

தொழிற்களம் பதிவர்கள் சார்பாக அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.. நான் புதிய பதிவாளன் ஜெகதீஷ் கோவையிலிருந்து..

இங்கே இது என் முதல் பதிவு - என்னைப்பற்றி.. 

ஆதி பகவன் தோற்றுவித்த , ஆதி மனிதன்..
கல் தோன்றி கடல் தோன்றா காலத்தே ,
முன் தோன்றிய நம் மூத்த தலைமுறை கண்ட முதல் காதல் .
கற்காலம் தொடங்கி கலிகாலம் வரை இன்னும் அழியாத மனித இனத்தின் தொடக்கம்..
அது போன்றே அழகாய் இதோ என் முதல் காதல்..
பள்ளி பருவம் முடித்த தருணம் ,
பதின் வயதில் நுழைந்த பருவம்...
பத்தில் ஐந்து சோதிக்க,
ஐந்தில் இரண்டு இடறி விழ,
எட்டோடு ஏட்டு கல்வி அத்தோடு நின்றது...
ஏட்டு கல்வி ஏறாத ஏக்கத்தில்,
தோழர்களின் துணையையும் தூக்கி எறிந்திட  எண்ணியது நெஞ்சம்,
நடவாத காரியம் என்று ஒன்று இருந்தால் அது இதுவாகத்தான் இருக்கும்..
இருந்தும் என் செய்ய தோழமை சற்று தொலைவில் தொடர்கயில் இவள் என்னை நெருங்கி வந்தாள்.
இவள் என் முதல் காதல் , 
அது என்ன முதல் காதல் ?
ஆம் எனக்கு இன்னொருவள் மீதும் காதல் வந்தது !
இவளுக்கு முன்னரே அவளின் அறிமுகம் எனக்கு இருந்தது . .
இன்னும் சொல்ல போனால் என் மழலை பருவம் முதலே என்னோடு சேர்ந்து 
என் கைகளோடு வளர்ந்தவள் . . 
உடன் வளர்ந்ததாலோ  என்னவோ அப்போது அவள் உன்னதம் உணராமல் போனேன் ...
யார் இவர்கள் ?
சிறிது சித்தரிக்கிறேன் நீங்கள் சிந்தியுங்கள் . . 
அவள் வடிவில்லாதவள்  , இவள் வடிவில் போட்டி இல்லாதவள் 
அவள் அழகில் மயக்கம் தருவாள் , இவள் அழகில் மோகம் தருவாள்.
அவள் எனக்காக காத்திருப்பாள் , இவள் என்னை காக்க வைப்பாள் .
அவளை வர்ணிக்க வாய்புகள் இல்லை , இவளை வர்நிக்காதவர்களே  இல்லை , ,
அவளுக்காக சிலர் ஏங்குவர் , இவளை கண்டு பலர் அஞ்சுவர் .
அவளிடம் நான் சொல்லாத ரகசியங்கள் இல்லை . இவள் எனக்கு ரகசியமின்றி வேறில்லை , , 
அவளிடம் சிந்தை சாந்தம் அடையும் , இவளிடம் சிந்தை சித்ரவதைக்கு உள்ளாகும் , 
இருப்பினும் இவள் மேல் கொண்ட மோகம் குறைவதில்லை, அதற்கு அவளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை .
எனக்கு என்னையே அறிமுகம் செய்தவள் அவள் , என்னை உங்களிடம் கொண்டு சேர்ப்பவள் இவள் . 
ஆம் ஒருவள் தனிமை , இன்னொருவள் தமிழ் .
தனிமையும் நானும் தமிழோடு விளையாடும் தருணங்களில் தாய்மையை உணர்கிறேன் என் ஒவொவொரு கவிதை பிறக்கும் போதும் . .
கன்னித்தமிழ் அவள் தனிமை துணை கொண்டு என்னை  ஆட்கொள்ள ,
அமுத தமிழுக்கு அடிமை ஆனேன் நான் . . 

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்