தொல்காப்பியம் விளக்கும் திருமணப் பொருத்தம்!

மணமகன், மணமக்களிடையே அமைய வேண்டிய
தொல்காப்பியர் கூறும் பொருத்தங்கள் :-

பிறப்பேகுடிமைஆண்மைஆண்டொடு
உருவு,   நிறுத்த காம வாயில்
நிறையேஅருளே,   உணர்வொடு,   திருஎன
முறையுறக்  கிளந்த  ஒப்பினது  வகையே.(தொல்1215 )


பொருள்:-

பிறப்பு   - நற்குடியில்  பிறத்தல்
குடிமை   -  பிறந்த அக்குடியின் சிறப்புக்கேற்ற ஒழுக்கமுடைமை
ஆண்டு   - அகவை ஒப்புமை
உருவு   - உடல் தோற்றம்
நிறுத்த காம வாயில்   - உடற்கண் அமைந்த காம இன்பம் நுகர்வதற்கான கூறுகள்
நிறை   - திருமணமானபின் மனத்தை ஒருவழி நிறுத்தவல்லதற் கட்டுப்பாடு
அருள்   -  பொதுவாக அருளுடையவராகத் திகழ்தல்
உணர்வு   -  மன உணர்ச்சி நிலைகள்
திரு   -  செல்வமுடைமை, செல்வர்போலும் மனமகிழ்ச்சியுடைமை உட்பட.

மணமக்கள் இருவரிடமும் இவை அமைத்திருத்தலே மணமக்களுக்குரிய
ஒப்புமையாகும். இவை இன்றையப் பார்வையில் மணமக்களுக்கான
திருமணப் பொருத்தமாகக் கொள்ளப்படுகின்றன.


மணமகன், மணமகளிடையே அமையக் கூடாத பொருந்தாக் குணங்கள் :-

நிம்பிரி, கொடுமை, வியப்ப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர். ( தொல்.1216 )

நிம்பிரி என்பது அழுக்காறு,
கொடுமை என்பது அறனழியப் பிறறைச் சூழும் சூழ்ச்சி,
வியப்பு என்பது தம்மைப் பெரியாராக நினைத்தல்,
புறமொழி என்பது புறங்கூறுதல்,
வன்சொல் என்பது கடுஞ்சொல் கூறல்,
பொச்சாப்பு என்பது சோர்வு அல்லது மறதி அல்லது தம்மைக்கடைப்பிடியாமை,
மடிமை என்பது முயற்சியின்மை,
குடிமை இன்புறல் என்பது நம் குலத்தினாலும், தம் குடிப்பிறப்பினாலும் தம்மைப் பெரிதாக மதித்து இன்புறல்,
ஏழைமை   என்பது பேதைமை,
மறப்பு   என்பது யாதொன்றாயினும் கற்றதனையும், கேட்டதையும் மறத்தல்,
ஒப்புமை  என்பது ஆண்பாலாயினும், பெண்பாலாயினும் தான்
காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வார் என
ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகின்கட் கீழ்மக்கள் மாட்டும்
கண்ணிலோர் மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என
விலக்கப்பட்டது.


முன்னுரை, நல்ல குடும்பம், தொல்காப்பியர் விளக்கும் பத்துப் பொருத்தங்கள்,
மணமகன், மணமகளிடையே அமையக்கூடாத பொருந்தாக் குணங்கள்,
கணியம் ( சாதகம் ) பார்க்கும் பழக்கம், மனப்பொருத்தமும் கட்டுப்பாடும்,
சங்ககாலத் தமிழகம்---ஆகிய பொருளடக்கத்தோடு,
தொல்காப்பியம் விளக்கும் திருமணப் பொருத்தம் என்னும் தலைப்போடு,
தமிழறிஞர் தமிழண்ணல் எழுதிய நூலை , SRM  பல்கலைக்கழகத்தில், தமிழ்
வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டுள்ள, தமிழ்ப்பேராயம் வெளியிட்டுள்ளது.
80 பக்கங்களைக் கொண்டது. முதற்பதிப்பு 2012. விலை ரூ.45/-
தொலைபேசி: + 91 44 27417375  & 27417376
மின்னஞ்சல் tamiperayam@srmuniv.ac.in.

தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளை தோழியர் சுபா புத்தாண்டுச் சிந்தனையாகக் கொண்டதன் தொடர்பாகவே இந்தப் பதிவு. இந்நூலை முழுவதுமாக ஆயப்புகின் விரியும். எனவே, அவசியமான பாடல்களையும், அவற்றிற்குரிய இயல்பான பொருளையும் மட்டுமே இவண் குறிக்கப்பட்டுள்ளது. அறிஞர் தமிழண்ணலின் விளக்கம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும் என்று நிறைவு செய்கிறோம்.

Comments