Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மலாலா!!!


மலாலா: ஆயுதங்களும் சில பள்ளிப் புத்தகங்களும் !!
(இந்த கட்டுரையே எழுதிய நண்பர் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு முதல் என்னுடைய நன்றியே தெரிவித்து கொள்ளுகிறேன் )

மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஜியாவுத்தீன் யூசப்சாய் ஒரு கவிஞர். மலாலா என்றால் “மிகுந்த சோகமான” என்று அர்த்தம். இந்தப் பெயரை அவளது அப்பா பஷ்தூன் கவிஞர் மலாலாவின் நினைவாக தனது மகளுக்குச் சூட்டியிருந்தார். மலாலாவின் அப்பா ஜியாவுத்தீன் யூசப்சாய் தனது செல்ல மகளை எல்லா சுதந்திரங்களுடன் வளர்த்தார்.

தனது பையன்கள் நித்திரை கொண்ட பிறகும் கூட இரவில் நீண்ட நேரம் வரை தனது மகளுடன் அரசியல், சமூகசூழல் என நாட்டின் எதார்த்த நிலைகளைப் பேசிக் கொண்டேயிருப்பார், விவாதித் துக் கொண்டிருப்பார். இந்த உரையாடல்களின் வழியே ஒரு புதிய மனுஷியாக அவள் வளர்ந்து உற்சாகத்துடன் உலவி வந்தாள்.


இந்த ஸ்வாத் பகுதி முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஸ்வாதின் எல்லைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியாக உள்ளது. தலிபான்கள் ஸ்வாதில் வன்முறைகளில் ஈடுபட்டு ஆப்கானில் மறைந்து விடுவார்கள். இதனாலேயே ஸ்வாத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரும் படைகளின் இருப்பு அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை மெல்ல மெல்ல அபகரித்து வந்தது. பலருக்கு இதுபற்றிய மன வருத்தம் இருப்பினும் அதனை வெளிப்படுத்த இயலாத சூழல் அங்கு நிலவியது. வசதி படைத்த சிலர் மெல்ல இடம்பெயர்ந்து சென்றாலும், ஏழைகள் மற்றும் இந்த நிலத்தின்மீது காதல் கொண்ட-வர்களால் அங்கிருந்து அகல இயலவில்லை.

தலிபான்கள் அங்கு அடிக்கடி திடீர் கட்டுப்பாடுகள், தடைகள் விதிப்பது சகஜம். இதனை அவர்களின் பண்பலை வானொலியில்தான் அறிவிப்பார்கள். இந்த அறிவிப்புகள் அந்த மலைகளின் நிறத்தை மாற்றும் பலம் கொண்டவை. பெண்கள்மீதும் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்மீதும் அதீத கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். குறிப்பாக, பெண்கள் கல்வி பயில்வது தலிபான்களுக்கு வேப்பங்காயாக இருக்கும். உலகின் எல்லா அடிப்படைவாதக் குழுக்களும், மத தீவிரவாதக் குழுக்களும் முதலில் குறிவைப்பது அவர்களின் சமூகப் பெண்களையே.

தனது தந்தையுடன் அடிக்கடி வெளியே சென்று விடுவார் மலாலா. ஒருமுறை பெஷாவர் நகருக்கு மலாலாவை யூசப்சாய் அழைத்துச் சென்றார். அங்கு அந்த கூட்டத்தில் பார்வையாளர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் கூடியிருந்த அரங்கில் அவள் “எனது அடிப்படை உரிமையான கல்வியைத் தலிபான்களால் எப்படிப் பறிக்க முடியும்?” என்றாள். அதே நேரம் யூசப்சாயிடம் ஒரு பிபிசி நிருபர், உனது பள்ளியில் படிக்கும் யாராவது தலிபான்கள் அடக்குமுறையில் பள்ளி மாணவிகளின் வாழ்க்கைÕ பற்றி எழுத இயலுமா என்று கேட்டார். முதலில் ஆயிஷா என்கிற மாணவிதான் இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பெற்றோர் இதை அறிந்ததும் தலிபான்களின் எதிர்வினைக்குப் பயந்து வேண்டவே வேண்டாம் என்றார்கள். அந்த நேரம் வேறு யார் இதை எழுதுவார்கள் என்ற குழப்பமான சூழலில் மலாலா இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பாதுகாப்பு கருதி அவளது பெயரில் எழுத வேண்டாம் எனவும் புனை பெயரில் எழுதலாம் எனவும் முடிவு செய்தார்கள்.

ஜனவரி 3, 2009ல் தான் அவளது முதல் டைரிக் குறிப்பு பிபிசி உருது வலைத்தளத்தில் வெளியானது. இந்த டைரிக் குறிப்புகளுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உருவானார்கள். தலிபான்கள் அந்தப் பகுதியில் செய்த நடவடிக்கைகளை எல்லாம் மிக துல்லியமான தனது விமர்சனங்களுடன் பதிவு செய்யத் தொடங்கினார் மலாலா. தலிபான்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்த்தது பற்றி ஆவேசமாகப் பல பதிவுகள் செய்தார். தடையை ஏற்று மூடியிருந்த பள்ளிகளையும் தலிபான்கள் தகர்ப்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

பள்ளிகள் தகர்க்கப்பட்டபோதும் அவள் தனது பரீட்சைகளுக்காகப் படித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்று அவள் நம்பிக்கையுடன் இருந்தாள். பாகிஸ்தான் ராணுவம் சரிவர தன் கடமையைச் செய்யவில்லை என்று பல சமயம் ஆதங்கப்பட்டாள். ஒருமுறை அவள், பாகிஸ்தான் பிரதமர் சர்தாரியின் மகள் ஸ்வாத் பகுதியில் உள்ள பள்ளியில் பயில்பவளாக இருந்தால் இங்கு நிலைமை இவ்வாறாக இருக்காது என்றும் எழுதினாள்.

இந்த நேரம் குடும்பத்துடன் அவர்கள் இஸ்லாமாபாத், பெஷாவர் நகரங்கள் நோக்கிச் சென்றார்கள். பல நண்பர்களின் வீடுகளில் தங்கினார்கள். அவள் தனது ஸ்வாத் பகுதியுடன் எல்லா நகரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். மலாலாவுக்குத் தான் ஒரு அரசியல் வாதியாகத்தான் ஆகவேண்டும் என்று திடமான எண்ணம் மனதில் பட்டது. அதன் வழியேதான் இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய இயலும் என்று அவள் நம்பினாள்.

அவளது டைரிக் குறிப்புகள் பிரபலமானதைத் தொடர்ந்து அவளைப் பற்றி நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் ஒன்றை எடுத்தது. இந்தப் படம் வெளியானதும் மலாலா பாகிஸ்தானில் பலர் அறியும் ஒரு நபராக உருவாகி வந்தார். அவள் அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் பேட்டிகள் அளித்து வந்தாள். அவள் ஒரு கல்விசார் செயல்பாட்டாளராக வளர்ந்து வந்தாள். இந்த நேரம் தெஸ்மண்டு அவர்கள் மலாலாவின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டு அவளுக்கு சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்குப் பரிந்துரைத்தார். இதனை அறிந்த பாகிஸ்தான் அரசு உடனே அவளுக்குத் தேசிய குழந்தைகள் அமைதி விருது வழங்கியது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் தலிபான்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. அவர்களின் கூட்ட விவாதப் பொருளாக மலாலா மாறினாள். அவர்கள் ஏகமனதாக மலாலாவைக் கொல்ல முடிவு செய்தார்கள். அக்டோபர் 9, 2012 அன்று பெரும் தலிபான் படை தங்களின் முழு ஆயுத பலத்துடன் மலாலாவின் பள்ளி நோக்கிச் சென்றது. சர்வ வல்லமையுடனான ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதப் படை நோட்டு புத்தகங்களை முதுகில் சுமந்து பூக்களைப் பறித்து மலைச்சாரலில் தனது வீடு நோக்கிச் சென்ற சிறுமியைப் பார்த்துப் பயம் கொண்டதுதான் வேடிக்கை. மலாலாவைத் தலிபான்கள் கழுத்திலும் தலையிலும் சரமாரியாகச் சுட்டார்கள். அடுத்த சில தினங்கள் மயங்கிய நிலையில் அவள் உயிர் பிழைப்பாளா என்பதே பெரும் சந்தேகமாக இருந்தது. உலகம் முழுவதும் மலாலாவுக்கு ஆதரவாகப் போராட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவளை முதலில் ராவல்பிண்டிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தானில் உள்ள 50 மதத் தலைவர்கள் மலாலாவைத் தாக்கியவர்களுக்கு எதிராக ஃபத்வா பிறப்பித்தார்கள்.

இந்த நேரம் மலாலாவின் கதை சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க உடனே விமான ஆம்புலன்சில் அவள் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு பிரிட்டன் பிரதமர் இணையத்தில் ‘‘நானும் ஒரு மலாலா’’ என்கிற மனுவைச் சுற்றுக்கு விட்டார்.

மலாலா இதனை எந்தக் கணமும் எதிர்பார்த்துதான் காத்திருந்தார். இப்படி ஒன்று தனக்கு நிகழும் என்பதை முன்உணர்ந்தவளாகவே அவள் இருந்தாள். இதனையும் கூட அவள் தனது டைரியில் எழுதியிருந்தாள். ‘‘நான் அடிக்கடி தலிபான்கள் என்னைக் கொல்ல வரும் காட்சி பற்றி யோசித்திருக்கிறேன். நிச்சயம் அவர்கள் என்னைக் கொல்ல வரும் சந்தர்ப்பத்திலும்கூட நான் அவர்களிடத்தில் நீங்கள் செய்வது தவறு, கல்வி என்பது எனது அடிப்படை உரிமை என்று வாதிடுவேன்’’ என்கிறார்.

இந்த சம்பவங்கள் நடைபெறும் இதே சூழலில்தான் வட இந்தியாவில் உள்ள ஜாட்கள் குழந்தை திருமணம்தான் ஜாதியைப் பாதுகாக்க ஒரே வழி என்றும், தமிழகத்தில் ஜாதி மறுப்பு செய்யும் தங்கள் ஜாதிக்காரர்களைக் கொல்லுவோம் என்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் பகிரங்கமாகப் பேட்டி அளித்ததும் நினைவுக்கு வருகிறது. எல்லா மதங்களிலும் தலிபான்கள் பல நிறங்களில், பல வடிவங்களில் இருக்கவே செய்கிறார்கள்.

(
நண்பர் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்களின் மற்ற பதிப்புகளையும் நீங்கள் படிக்க கீழே குறிப்பிட்டு இருக்கும் இணையத்தை சொடுக்கவும் )
http://www.amuthukrishnan.com/

Post a Comment

2 Comments

  1. athuvum pakistan pondrathoru pengalukkana urimaigal arave parikkappattuvoru thesathil saathithathal than avarukku ivvalavu mariyathaigalum engalathu vanakkangalum anbu sagothari!!!

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்