இயற்கைக்கு மாறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த பொருட்களில் எவ்வித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட மாட்டாது. இயற்கையாக நாம் கொடுப்பது மண்ணுக்கும், பயிர் வளர்வதற்கான சத்துக்களும் மட்டுமே. விளைச்சலில் சில இயற்கை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மட்டுப்படுத்தப்படும் அவ்வளவே. 

ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நண்பர்கள் அந்த பொருட்களில் சுத்தமாக பூச்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். எனில் நாம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பூச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம். அவைகளை புடைத்து பூச்சியை வெளியேற்றலாம். அல்லது அரிசி, பருப்பு போன்றவற்றை தண்ணீரில் போட்டால், தானாகவே பூச்சிகள், வண்டுகள் மேலே வந்துவிடும். அவற்றை எடுத்தப் போட்டுவிட்டு பொருட்களை அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. நாம் சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பூசிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எனில் இயற்கை வழி விளைந்த பொருட்கள் என்பதற்கு என்ன பொருள்?

தவிர, வண்டுகளும், பூச்சிகளும் இருக்கும் உணவுப் பொருட்களே நாம் உண்ண தகுந்த பொருள். அவைகள்தான் அது உண்ணத்தகுந்த பொருள் என்று நமது முன்னோருக்கு உணர்த்தி இருக்கும். வண்டுகள் துளைக்காத மாம்பழத்தை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு கேடு. அதே வண்டு துளைத்த மாம்பழம், சுவையாகவும் இருக்கும். தவிர உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கும். எந்த உயிரும் வாழவே விரும்பாத ஒரு பொருளைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன வகை? நாம் இயற்கையோடு மாற வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொள்வதோடு, அப்படி மாறுவதால் ஏற்படும் சில கூடுதலான வேலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்தது போன்று, எல்லாப் பொருட்களையும், புடைத்து அல்லது வண்டுகளை பொருக்கி எடுத்துப் போட்டுவிட்டு பயன்படுத்தினால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம்.
இந்த ஐந்து நிமிட வேலைக்கு பயந்து, பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி நாம் ஏன் நம்மையும், நமது சந்ததிகளையும் அழிக்கும் வேலையை செய்யவேண்டும். நாம் வாழப் பிறந்தவர்கள்... அது இயற்கையோடு என்றால் பெருமிதம் கொள்வோம்.


முக நூலில் பகிரப்பட்ட தகவல் 

Comments