கிறிஸ்துவ மிஷ்னரிகள் : மதமாற்றமும் சமூக மாற்றமும் !!!

"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்'' - புத்தர்

ஆன்மீக குருவாக இருக்கும் பார்ப்பனரின் தொழிலும், தோட்டி ஒருவரின் தொழிலும் சமமானவையே; தத்தமக்குரிய கடமைகளை, பார்ப்பனரும் தோட்டியும் சரிவரச் செய்வது, கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்புடையதாகவே காட்சியளித்தது.

ஒரு காலத்தில் மனிதனிடம் இருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்றுவந்ததாக தெரிய வருகிறது. பார்ப்பனர் ஆனாலும் சரி, தோட்டியானாலும் சரி, வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவே - அவர்கள் அத்தொழில்களை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் அல்ல என அரிஜனில் (ஆகஸ்டு 15, 1936) காந்தி குறிப்பிடுகிறார். காந்தியின் சில சூழலியல், நுகர்வு, எளிய வாழ்க்கைசார் கோட்பாடுகள் நமக்கு ஏற்புடையதாக இருக்கும்போதும், மேலே உள்ள வரிகளைப் போல அவரது கொள்கைகளைப் பல தளங்களில் ஒற்றை வாசிப்பில் ஒரு சாமானிய வாசகரால் கேள்விக்கு உட்படுத்திவிட முடியும்.

காந்தியின் வரிகளின் படி தோட்டியும் பார்ப்பனரும் கடவுளின் கண்களுக்கு சமம் தான் என்றால் தொடர்ந்து தோட்டியாக இருப்பவருக்கும், ஆன்மீக குருவாக இருப்பவருக்கும் தங்களின் பணி சார்ந்து சோர்வு ஏற்படும் பட்சத்தில் Role reversal செய்துகொள்வது குறித்து அவர் ஏன் யோசிக்கவில்லை. இன்றைய எல்லா நவீன அலுவலகங்களில் கூட அவர்களின் பொறுப்புகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொறுப்பு மாற்றம், இடமாற்றம் செய்வது போல, இந்து மதம் தன்னகத்தை இது போன்ற இடமாற்றங்களுக்கு ஏன் இடமளிக்கவில்லை என்ற கேள்வியை காந்தி எழுப்பியிருக்க வேண்டாமா. இந்து மதம் ஏன் தன் கட்டுமானத்திற்கு உட்பட்டவர்களின் மத்தியில் இத்தனை பிரிவுகளை ஏற்படுத்தியது. அன்று ஏற்படுத்தியதாக இருப்பினும் இன்றைய காலச்சூழலிலும் அவை பொறுத்தமானதானவைதானா, அவை தடைகற்களாக கருதப்பட்டு இந்நேரம் தகர்க்கபட்டிருக்க வேண்டாமா? இத்தனை சமூக மாற்றம் சார்ந்த உரையாடல்களில் எப்படி சாதி ஒழிப்பை எல்லோரும் செளகர்யமாக மறந்து விடுகிறோம்.

அன்று முதல் இன்று வரை இந்தியாவின் எந்த ஒரு கிராமத்திலும் வெற்றிலை பாக்கு கூட வாங்க உதவாத ஒரு அதிகார மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்மம் மற்றும் அதன் பார்ப்பனிய வேத கருத்துக்களை கைபர் கனவாய் வழியாக வந்தவர்களான ஆரியர்கள் இந்த நிலத்தில் பூர்வகுடிகள் மீது திணித்தார்கள். அதன் படி சமுதாயத்தை பல அடுக்குகளாக பிரித்தார்கள். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் எப்படி வாழ வேண்டும் என உத்தரவிட்டது மனுதர்மம். இந்த மனுதர்மத்தின் கருத்துக்கள் அன்று முதல் இன்று வரை நம் எல்லோர் வாழ்வின்மீதும் கருநிழலாய்ப் படிந்துள்ளது.

இந்த புவியில் உள்ள உயிர்கள் எல்லாவற்றையும் படைத்த பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான், தோள்களிலிருந்து சத்திரியன் பிறந்தான் (ஆட்சி, அதிகாரம்), தொடையிலிருந்து வைசியன் பிறந்தான் (வியாபாரம்), கால்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். (அடிமைகள், இழி பிறவிகள்) என தெளிவாக கூறும் யஜூர் வேதம் தான் இன்றுவரை அதிகாரத்தை தன் சொத்தாகக் கருதும் பார்ப்பனர்களின் அடிப்படை சட்டம். தமிழகத்தின் பல கிராமங்களில் பிராமணன் என்கிற வார்த்தை அறவே இல்லை. மாறாக பார்ப்பனர், பார்ப்பான் என்றுதான் சாமானிய ஜனங்களால் அழைக்கபடுகிறார்கள். பார்ப்பனர் என்பதன் பொருள், இவர்கள் இந்த நிலப்பகுதி கடைசியாய் வந்தவர்கள், இளையவர்கள் என்பதே. வெள்ளைக்காரர்கள் இங்கு வந்த போது கூட அவர்கள் தங்களை ஐரோப்பிய பிராமணர்கள் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டனர் என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு சான்றளிக்கின்றன.

சூத்திரர்களுக்கு மனு தர்மம் தரும் விளக்கத்தை பாருங்கள் - பார்ப்பானரின் வைப்பாட்டி மகன், அடிமை; வேதத்தையோ கல்வியையோ கற்க உரிமை இல்லாதவன் என்று விரிவாக கூறுகிறது. “வேதத்தை சூத்திரன் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும். காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” என்று இந்த நிலத்தின் உழைக்கும் பூர்வகுடி மக்களை அவமதிக்கிறது. சுயமரியாதை வாலிபர் மாநாட்டில் தீர்மானம் போட்டு அதன் பின் இந்த நூலை பெரியார் 1927ல் ஒரு மாத காலம் தமிழகம் எங்கும் தீயிட்டு கொளுத்தினார், அதே காலத்தில் அம்பேத்கார் மஹத்தில் மனு தர்மத்தை கொளுத்தியதன் பின்னுள்ள நியாயத்தை இந்த வரிகளை ஒவ்வொரு முறையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.

இந்த மனுதர்மம் தான், வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை நம்மை பின் தொடரும் நிழலாக துரத்தி வருகிறது. இந்த மனுதர்மம் 1772 ஆம் ஆண்டிலிருந்து நமது நாட்டின் சட்டமாகவே இருந்தது வருகிறது . கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’(Privy Council) வரை இந்தியர்களின் வழக்கில் இது பின்பற்றப்பட்டது. ‘பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும். அதுவே ‘சூத்திரன்’ கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும். வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனு தர்மத்திலிருந்து இதை எல்லாம் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிறகு, இந்த மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக தெரிந்து கொள்ள ஏதுவாக 1801ம் ஆண்டில் ஹென்றி தாமஸ் கோல் புரூசை நியமித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.

1860
ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், மதம், சாதி, குடும்பம், சொத்துப் பிரச்சினை போன்ற வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது. மனுதர்மத்தின் இடத்தில் ஒரு புதிய சடத்தை இயற்றி நம்மை கம்பீரத்துடன் உலாவச் செய்தவர் என்ற அடிப்படையில் தான் அம்பேத்கார் இன்று வானுயர நம் சமூக விடுதலையை உறுதிபடுத்தியவராக நிற்கிறார். ஆனாலும் இன்று வரை பல வழக்குகளில் இந்து மதச் சட்டங்களை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்குவது நடைமுறையாக உள்ளது. 1971ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என கருணாநிதி சட்டம் இயற்றினார். இதன் மீது 1972ல் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் ரிக் வேதத்தை மேற்கோள் காட்டியது தீர்ப்பு - உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது, மந்திரம் பார்ப்பனருக்கு கட்டுப்பட்டது என்ற வாசகங்கள் இடம்பெற்று அதன் பின்னர், அந்த அந்த கோயில் அறநிலையத்துறை அர்ச்சகர்களை நியமிக்கலாம் ஆனால் ஆகம் விதிகள் மீறப்படக் கூடாது என்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது ஆனால் நோயாளி இறந்துவிட்டான் என பெரியார் 1972ல் இந்த தீர்ப்பை பற்றி தனக்கே உரித்தான பாணியில் பகடி செய்தார்.

மனுதர்மத்தின் காலம் முதல் நம் வாழிடங்கள் “ஊர் - சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களாக பிரிக்கப்பட்டு அந்த நடைமுறை இன்று வரை நம் நிலம் எங்கும் வியாபித்துள்ளது. இந்த ஊர்-சேரி என்பது மிக துல்லியமாக ஜாதியின் அடிப்படையில், தீண்டாமையின் அடிப்படையில் தான் வகுக்கப்பட்டுள்ளது. உத்தபுரத்தில் நம் கண்களுக்கு தெரியும் பெளதிக சுவர் இருக்கிறது, ஆனால் எல்லா கிராமங்களிலும், அரசாங்கம் கட்டித்தரும் காலனி வீடுகளிலும் நம் கண்களுக்கு புலப்படாத சுவர் ஊரையும் சேரியையும் பிரித்து விண்ணைத் துளைத்து நிற்கிறது. விலக்கப்பட்ட பிரதேசங்களில் பழங்குடிகள் வாழ்ந்தார்கள் அதனால்தான் அவர்கள் வளர்ச்சி பெறவில்லை என்று கூறிக்கொண்டே தலித்துகளுக்கு பிரத்யேகமான விலக்கபட்ட பிரதேசங்களை தொடர்ந்து அரசாங்கங்கள் உருவாக்கி வருகின்றன.

போர்த்துகீசியர்கள், டச்சுகள், ப்ரான்ஸ் நாட்டவர், பிரித்தானியர்கள் என இவர்கள் தொடர்ந்து நம் நாட்டில் வணிகமும் அதன் பின் பல நிலப்பகுதிகளை ஆட்சியும் செய்தனர். பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் நிர்வாகம்-ஆட்சி அதிகாரத்திற்கு இங்குள்ள சாதிய முறை மிகவும் ஏற்புடையதாக இருந்ததால் அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை மாறாக அதனை சட்டமாகவே பாவித்தார்கள். வழக்கம் போலவே பேரரசர்கள் முதல் கும்பினி ஆட்சிவரை அதிகாரத்தின் மொத்த உருவமாகவும் நிழலாகவும் பார்ப்பனர்களே இருந்து வந்தனர். அவர்கள் இந்து மதமும் அதன் பழக்க வழக்கங்களும் அதன் புனித தன்மையையும் அதனை தொட்டால் நாம் ஆட்சி செய்ய இயலாது என்ற அளவில் பிரித்தானியர்களை அடக்கி வைத்திருந்தனர். அவர்களும் நாம் ஆட்சி செய்ய, வியாபாரம் செய்ய வந்த இடத்தில் நமக்கு ஏன் வீண் வம்பு என இருந்துவிட்டனர். ஆனால் மனு தர்மம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அதன் பிரதிகள் இங்கிலாந்தில் நிலவிய காலத்தில், பிரிவி கவுன்சிலின் பல தீர்ப்புகள் பற்றி ஆங்கில நாளேடுகள் வெளியிட்ட சில கட்டுரைகளும் பிரித்தானிய சமூகத்தில் பல வித உரையாடல்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் மனிதர்கள் இத்தனை கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றிய பல செய்திகள் அங்கு வலுப்பெற தொடங்கியது. இந்த பின்புலத்தில் தான் 1833 ஆம் ஆண்டில் முதல் முதலாக மதச்சார்பான பரப்புரைக்கு அனுமதி அளித்தது பிரித்தானிய அரசு. ஆனால் இவர்களுக்கு முன்னரே 1660 முதலே போர்த்துகீசியர்கள் மற்றும் பல குழுக்கள் இந்தியாவின் கடற்கரை கிராமங்களில் தங்களின் ஊழியத்தை தொடங்கினார்கள்.

ஆற்காடு, மையிலாப்பூர், குன்னூர், வேலூர், மதுரை, பசுமலை, நாகர்கோவில், தக்கலை, தரங்கம்பாடி, வேளாங்கன்னி, துத்துக்குடி என பல பகுதிகளில் மிஷனரிகளின் கேந்திரங்களாக மாறின. மிஷனரிகள் இந்த பகுதிகளில் பலவித நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கின. இவர்கள் தங்களின் கிறித்து ஊழியத்தை தொடங்கிய காலத்தில் இங்கு அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் படியாக மதமாற்றங்கள் நிகழ்வில்லை. இந்த அனுபவங்கள் பற்றி அபே துபாய்ஸ் தனது Letters on the State of Christianity in India நூலில் விரிவாக குறிப்பிடுகிறார். மெல்ல கிறித்துவத்தை இந்திய சமூகத்தின் ஒரு சாரார் தழுவத் தொடங்குகிறார்கள். அந்த நேரம் கிறித்துவ மத்த்தை தழுவியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பன்னெடுங்காலமாக நசுக்கப்பட்டு வந்த தலித்துக்கள், அதுவரை நிலவுடமையாளர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அடிமை தொழில் செய்து வந்தவர்கள் தங்களின் இழிநிலையில் இருந்து விடுபட மதம் மாறியது இந்து சமூகத்தினருக்கு பெரும் எரிச்சலை கோபத்தை மூட்டியது, அவர்கள் ஒன்றுதிரண்டு இதனை கடுமையாக எதிர்த்தனர், பல தொல்லைகள், நெருக்கடிகளை கொடுத்தனர்.

இதுவரை கிராமத்தில் அடிமைத்தொழில் செய்ததற்கான பரம்பரை சலுகைகள், உரிமைகள் மறுக்கப்பட்டன. பல இடங்களில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கபட்டது, அப்படி தலித்துகள் தங்களின் வாழிடங்களில் வெட்டிய கிணறுகளில் ஜாதிய இந்துக்கள் நாயை அடித்து போட்டார்கள். அவர்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தர மறுத்தார்கள். விவசாய தொழிலில் ஈடுபட தடை விதித்தார்கள். அவர்களுக்கான எல்லா இனாம்களும் மறுக்கப்பட்டது. கிரமங்களின் தரிசு நிலங்களில் ஆடு மாடு மேய்க்க தடை விதித்தார்கள்.

ஆற்காடு சாத்தாம்பாடியில் வட்டிக்கு பணம் தந்து கொண்டிருந்த வட்டி வியாபாரி நாராயண ரெட்டி என்பவர் இக்கிராம கிறித்துவர்களுக்கு ரு.71 (அன்று 35 டாலர்) கடன் கொடுத்திருந்தார். இந்த பணத்தை உடனே திரும்பித்தரும்படி இவர்களை உயர் சாதி நிலவுடமை இந்துக்களுடன் சேர்ந்து சித்தரவதை செய்தார். 1863 ஆம் ஆண்டு இந்த கிராமத்தினர் ஆர்காட் மிஷனின் ஆண்டு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் சென்று முறையிட்டனர். உடன் மிஷனை சேர்ந்தவர்கள் வந்து இந்த ரு.71 கடனை செலுத்தியது. இந்த பணத்தை பெற்றுக் கொண்டதற்கான ரசீதை நாராயணரெட்டியிடம் இருந்து ரெவ். டாக்டர் ஹென்றி மார்ட்டின் ஸ்கடர் தமிழில் எழுதி அவரது சகோதரர் ரெவ்.வில்லியம் வாட்டபரி ஸ்கடர் சாட்சி கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டார்கள். இந்த ரசீது இன்றைய மிஷனரி ஆவணக்காப்பகத்தில் உள்ளது. இது போல் பல பல கதைகள், சம்பவங்கள், துயரங்கள் தமிழகத்தின் வெவ்வேறு திணைகளில் வெவ்வேறு ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தபட்டுள்ளது.

மிஷனரிகள் பல இடங்களில் இந்த தீண்டாமையின் கரங்களில் இருந்து இவர்களை காக்க இவர்களுக்கு பல உதவி திட்டங்களை தொடங்கினர். தலித்துகளுக்கு தரிசு நிலங்களை பிரித்து கொடுத்தல், கிணறு வெட்ட, வண்டி மாடு, உழவு மாடு, விவசாய கருவிகள், விதை பொருட்கள் வாங்க உதவிகள் பல வகையாக தொடங்கியது. இவர்களுக்கான பள்ளிகள், இரவு பாடசாலைகள் தொடங்கப்பட்டன. பல இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாயின. குழந்தை திருமணம், விதவை திருமணங்கள், தேவதாசி முறை என இங்கிருந்த பலவித அறியாமை, மூடப்பழக்க வழக்க கற்பிதங்கள் இல்லாத ஒரு சமூகமாக இந்த நவீன கிறித்துவர்கள் விளங்கினார்கள்.

பிரித்தானியர்கள் தங்களின் தேவைக்கு ஆட்களை இங்கிலாந்திலிருந்து கொணர இயலவில்லை என்றவுடன் மெகாலேயின் தலைமையில் புதிய பாடதிட்டத்தை அமைத்து இங்கு ஏராளமான பள்ளிகளை தொடங்கினர். நம்மவர்கள் முதல்முறையாக கல்வி பெற்று எழுத்தர்களாக, ஆய்வாளர்களாக மாறினர். ஈயத்தை காய்ச்சி ஊத்த வாய்ப்பிருந்த காதுகளில் நவீன கல்வி பாய்ந்தோடி புதிய மாயாஜாலங்களை நிகழ்த்தியது. தொழில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. சில இடங்களில் தொழிற்கல்வி நிலையங்களின் சமூகத்திற்கு தேவையான மண்பாண்டங்களை செய்தார்கள். ஆனால் இந்த மண்பாண்டங்கள் சந்தைகளுக்கு சென்று திரும்பி வந்தது. தலித்துகள் செய்த மண்பாண்டங்களில் நாங்கள் எப்படி சோறு பொங்க முடியும் என்று இந்து சமூகம் அதனை மறுதலித்தது. ரக்ஸ் நெசவு, பாய் முடைதல், தையல், தச்சுவேலை என பல தொழிற்பிரிவுகள் பல பகுதிகளில் தொடங்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் இதே தொழிற்பள்ளிகள் பாய்மரம்- கப்பல் கட்டும் பயிற்சிகளை அளித்தது. சில காலம் இங்கு தயாரிக்கபட்ட பொருட்களை இங்கிலாந்திற்கே எடுத்துச் சென்று விற்பனை செய்தார்கள்.

மிஷனரிகள் தங்களின் பகுதிகளில் பலவித மருத்துவ பணிகளில் ஈடுபட்டன. 1899 முதல் 1902 வரை கொள்ளை நோய் தமிழகத்தை ஆட்டிப்படைத்த போது இந்த மருத்துவமணைகள் நிரம்பி வழிந்தன. அந்த நேரம் தான் இந்த மிஷனரிகள் Lying in the Hospital என்ற அகநோயாளிகள் பிரிவை பல இடங்களில் நிறுவினார்கள். குறிப்பாக மதுரை மிஷனின் மருத்துவ பணிகள் முக்கியமானவை. இந்த நேரத்தில் தான் 1900ல் வேலூரில் இடா எஸ் ஸ்கட்டரால் சி.எம்.சி மருத்துவமணை தொடங்கப்பட்டது. இதுதான் அன்றில் இருந்து இன்றுவரை இந்தியாவின் முதன்மையான மருத்துவ சேவை மையமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த Lying in the Hospital முறையை பார்த்து இங்கிருந்த பெரும்பான்மை இந்து சமூகம் உடன் அதற்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இதற்கு எதிராக பல பிரச்சாரங்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். கிறித்துவ மதத்தை திணிக்கவே இம்மருத்துவமனை தொடங்கப்படுகிறது. மருத்துவம் என்ற பெயரில் தீட்டுப்பட்ட தண்ணீரைக் கலந்து இந்துக்களின் உடல் தூய்மையைக் கெடுக்கிறார்கள். பிணியாளர்களைக் கவனிக்க தாழ்ந்த சாதி தலித்துகளை நியமித்து உயர்சாதியினரை மாசுபடுத்துவது தான் இந்த மருத்துவமனைகளின் நோக்கம். ஜாதீயக் கட்டுப்பாடுகளை தகர்ப்பது இவர்களின் நோக்கம், மிஷனரி என்பவர் ஊடுருவல்காரர். அமெரிக்க மிஷனரிகளிடம் மருத்துவ உதவிகோரிச் செல்பவர்கள் மீது கம்பெனி அரசாங்கம் கடுங்கோபம் கொள்ளும் என இவைகளை எல்லாம் சி.எம்.சி மருத்துவமனை வாசலில் பறையடித்து பிரச்சாரம் மேற்கொண்டார்கள் சாதி இந்துக்கள். இருப்பினும் இந்த பிரச்சாரங்களை எல்லாம் வெகுவாக தாண்டி பல தரப்பட்ட மக்கள் இந்த மருத்துவமனைகளின் உதவி நாடி வந்தனர். இந்த புதிய மதங்கள் புதிய அதிகார மையங்களாகவும் உருவாகி வருவதை பார்ததும் பல சாதியினரும் அடுத்து அடுத்து கிறித்துவ மதத்தில் நுழைந்தனர், இவர்களின் நுழைவு இங்கிருந்தவர்களுக்கு புதிய ஜாதிரீதியான நெருக்கடிகளையும் கொடுக்க தொடங்கியது

ஆற்காட் நவாபின் நெருங்கிய உறவினரான நவாப் குடும்பப் பெண் ஒருவருக்கு இராணிப்பேட்டையில் அரச குடும்ப மாளிகையில் அவரது தனியறையில் சிகிச்சை அளித்தார்கள். இந்த உதவிகளுக்கு கைமாறாக லங்கர் கானா அறக்கட்டளையிலிருந்து வரக்கூடிய வருவாயான ரு.172 அய் மருத்துவமனைக்கு அளித்தார்கள். 1875-1877, 1890-1892, 1898 - 1900 என அடுத்து அடுத்து தமிழகத்தை தாக்கிய பஞ்சங்களின் போது மிஷனரிகள் பங்களிப்பு முக்கியமானது.

இப்படியாக மிஷனரிகளின் பங்களிப்பு மற்றும் இன்றும் நம் நகரங்களில் அவர்களின் மருத்துவம் மற்றும் கல்வி சார் பங்களிப்புகள் பற்றி விரிவாக ஒரு புத்தகமே எழுதலாம்தான். இன்றும் நிதர்சனமாக விளங்கும் இந்த உண்மைகளை அல்லது அவர்களின் பங்களிப்புகளை அவதூறுகளால் மட்டும் மதிப்பிடுவது நியாயம் தானா? இங்கு இன்றும் தாண்டவமாடும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராடுபவர்களை கிராமங்கள், நிறுவனங்கள் எப்படி நடத்துகிறது என்பதில் மாற்றங்கள் ஏதுமில்லை. தீண்டாமையை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. அது ஒரு முதல் படி மட்டுமே. இன்றும் தலித்துகள் சமைத்தால் அந்த சத்துணவு சோறே வேண்டாம் என கிராமங்களில் சாதிய இந்துக்கள் வாதிடுகிறார்கள். இன்றும் தலித் சிறுவர்கள் பள்ளிகளின் கக்கூஸ் கழுவி விட்டு வீட்டுக்கு திரும்புவது மற்றும் தலித் குழந்தைகள் பள்ளிகளில் படும் துயரங்களை பாரதி கிருஷ்ணக்குமாரின் எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் விளக்குகிறது. சமச்சீர் கல்வி பாடதிட்டம் மட்டும் போதாது இன்றைய பள்ளிகளுக்கு சமச்சீர் மனம் வேண்டும் என்று அந்த படம் விரிவாக ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. இவரது ராமையாவின் குடிசையும் இதே ஜாதிய கட்டுமானத்தின் மீது காறி உமிழ்கிற ஒரு ஆவணம், அதனை பார்த்து நம் கண்கள் பனித்தால் போதாது. நிச்சயம் ஆப்பிரிக்க நிறவெறியை விட கொடூரமானது இந்து மத தீண்டாமை என்பதை நமக்கு பல பதிவுகள் சதா உணர்த்திய வண்ணம் உள்ளது.

தலித்துகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மட்டும் தேசிய ஊடகங்களின் உக்கிரமான குரல் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்றும் AIIMS மருத்துவமனை அங்கு பயில வரும் தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பது நாடறிந்ததே. சமூகத்தின் எல்லா தளங்களிலும் மனுதர்மத்தின் நிழல் படிந்து கிடப்பது இந்த இந்திய சமூகத்தை பீடித்துள்ள தீராநோய், இந்த தேசத்தை இந்த நோயிலிருந்து மீட்டெடுக்காவிட்டால் நம்முடைய எல்லா சமூகமாற்று வேலைகளும் வீணாய் தான் போகும். நாம் இந்த பழமையை ஆதரித்தால் அது ஒரு வெட்கங்கெட்ட செயல்தானே. இன்று நமக்கு தேவை ஒரு அடையாள அழிப்பு இயக்கம் தான், அடையாளத்தை வளர்க்கும், உருவாக்கும் இயக்கமோ அல்ல.

இன்றும் இத்தனை கல்வி கற்றலுக்கு பின்னும் நம் மனங்களில் பல ஜாதிகள் சார்ந்த முன்முடிவுகள், முன் தீர்மானங்கள் நிரம்பிக் கிடக்கிறது. இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் தீண்டாமை, ஜாதிய உணர்வு, ஜாதியை இன்னும் கெட்டிபடுத்தும் சடங்குகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கொடுத்து அதனை ரோமாண்டிசைஸ் செய்வது என நாம் தொடர்ந்த அடையாளம் காண மறுக்கும் விஷயங்கல் அனேகமாக நம்மை சூழந்துள்ளது. இதனைவிட ஜாதி வழங்கும் சுயநல மனப்பான்மை தான் பகுத்தறிவுக்கும், ஒரு சமதையான சமூகத்திற்கும் பெரும் தடைக்கல்லாக விளங்குகிறது.

தலித்துக்கள் இந்து மத்தின் சித்தரவதைகளில் இருந்து மீள பல மதங்களுக்கு மாறினர், கிறித்துவம், பெளத்தம், சீக்கிய, இஸ்லாம் என அந்த அந்த பகுதியில் அவர்களில் எல்லைக்கு உட்பட், அவர்களின் மனம் விரும்பிய மதத்திற்கு மாறினார்கள். இப்படி இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்களில் சிக்கியம், பெளதத்திற்கு சென்றவர்களுக்கு இன்றும் நம் இடஒதுக்கீடு சட்டங்கள் பயனைப் பெறுகிறார்கள். ஆனால் கிறித்துவம், இஸ்லாமுக்கு சென்றவர்களுக்கு மட்டும் எந்த சலுகையும் காட்ட இயலாது என்று ஆவேசத்துடன் தன் அகம்பாவத்தை காட்டுகிறது இந்து இந்தியா. இன்று அரசியல் ரீதியாக அமெரிக்க - ஐரோப்ப ஏகாதிபத்தியத்தின் காலை நக்கி கிடக்கும் இந்துத்துவா அரசியலை முன்வைப்பவர்களும், இந்து இந்தியாவும் இங்கே உள்ள ஏழை கிறித்துவர்களிடம் தங்களின் முழு வீராப்பையும் காட்டுகிறார்கள். அதைவிட இந்த தடைகளை எல்லாம் மீறி பெரும் பொறுப்புகள் நோக்கி சென்ற தலித்துகளை எப்படி எல்லா நம் அரசுகள் பலி வாங்குகிறது என்பதை கிறிஸ்துதாஸ் காந்தி எழுதிய அந்த 8 பதவிகள் பற்றிய பதிவு வெளிப்படுத்துகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த 40 ஆண்டுகள் நடந்தும் எப்படி தமிழகத்தின் எல்லா முடிவுகளையும் தீர்மானிக்கும் 8 பதவிகளில் பிராமணர்கள் தவிர வேறு யாரும் அமர்ந்ததில்லை என்பதை அவர் ஆதாரங்களுடன் அடுக்கிச் செல்கிறார். அது இந்து இந்தியாவின் செவிட்டு காதுகளில் ஒலிக்கவேயில்லை. தொடர்ந்து நம் அரசுகள், சமூகம், நாம் செய்யும் தவறுகளை உணர்த்தி வருகிறது இருப்பினும் நம் அறிவியல் மயப்பட்ட மூளையின் கட்டளைகளை, ஜாதிய மூளை மறுதலிக்கிறது.

இன்று ஐரோப்பாவில் இந்து மதம் யோகசனம் என்னும் நுழைவு சீட்டை வைத்துக் கொண்டு பெரும் மதமாற்றங்களையும், வியாபாரத்தையும் நிகழ்த்தி வருகிறது. அங்கிருந்து ஏராளமான பணத்தை பல ஹவாலா வழிகளில் இந்தியாவில் குவித்தும் வருகிறது. அவர்கள் எப்படியெல்லாம் முறைகேடான வழிகளில் பணத்தை இந்தியாவுக்குள் எடுத்து வந்தனர் என்பதை நமக்கு ஆனந்த பட்வர்தன் அவர்களின் Father- Son- Holy War, In the Name of God படங்கள் விளக்குகிறது. இந்தியாவில் வந்தேறிகளக குடியேறியவர்கள், அவர்களுக்கு அடுத்து இங்கு எவரும் நுழைய கூடாது என்று போடும் கூப்பாடு விசித்திரமானதாக இருக்கிறது. ஐரோப்பாவில், அமெரிக்காவில் இந்து மத நிறுவனங்கள் பெறும் பெருக்கத்தில் உள்ளன. யோகாசனம், பரதநாட்டியம், இந்திய கலாச்சாரம் என பல வார்த்தைகளை வைத்து பெரும் இந்துத்துவ அரசியல் வேலைகளை அங்கு செய்து வருகிறார்கள். இவர்கள் அங்கு சுந்தந்திரமாக மத பணிகளை செய்யலாம் ஆனால் இங்கு இந்திய எல்லையில் வேறு யார் வேலை செய்தாலும் அவர்களை அரசு, ஊடகங்கள், பொது புத்தி என இந்த தளங்களில் வசை பாடுவார்கள், இல்லை அடுத்து கட்டத்திற்கு சென்று தங்களின் ஆயுதம் தாங்கிய படைகளை வைத்து கொலை செய்வார்கள். ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் எறிக்கபட்டதும், கந்தமால் கொலைகளும் இதற்கான சமீபத்திய சாட்சிகள். நந்தனை இவர்கள் கோவிலுக்குள் வைத்து கொழுத்தியது முதலே இவர்களின் ஆவணப்படுத்தபட்ட இந்து தீவிரவாதம் தொடங்குகிறது. சுனாமியின் போது தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அவர்களின் தொண்டு நிறுவனங்களும் எவ்வாறு வீடுகள் வழங்குவது முதல் பிண்ங்களை அப்புறப்படுத்துவது வரை பாகுபாடுகள் காட்டினார்கள் என்பதை நாம் மிக அன்மையாகவே கண்டோம். இவர்களின் இந்த மனப்பான்மையுடன் நாம் கொள்ளை நோய் இதே தமிழகத்தை பீடித்திருந்த தினங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

எல்லா மதங்களுமே அபினிகள் தான் என்பதை தேர்தல் ஜனநாயகத்துள் நுழைந்தவர்கள் உச்சரிக்கவே தயங்குகிறார்கள். ஆனால் நம் சமகாலத்தில் தான தின்னியம், உத்தப்புரம், கயர்லாஞ்சி, பரமக்குடி என தலித்துகள் மீதும், குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதும், ஒரிசாவின் கிறித்துவர்கள்-பழங்குடிகள் மீதும் தொடர்ந்து இந்து மதத்தின் வேட்டை நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் இது சார்ந்து இன்னும் ஒரு விரிவான உரையாடலை மேற்கொள்வது ஒரு ஆரோக்கியமான சமூக அசைவியக்கத்திற்கு வழிவகை செய்யும்.

ஒருவேளை ‘கிறித்துவ மிஷினரி'கள் பழங்குடியினருக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை, இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவனால் அதைச் செய்ய முடியுமா? முடியாது என்றே பணிவுடன் கூறுகிறேன். தொல்குடியினரை நாகரீக மக்களாக ஆக்குவது என்றால், அவர்களை உங்கள் உறவினராக நடத்த வேண்டும். அவர்களில் ஒருவராக அவர்கள் மத்தியில் வாழ வேண்டும். தோழமை உணர்வை வளர்க்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அவர்களை நேசிக்க வேண்டும். இப்படிச் செய்வது இந்து ஒருவனுக்கு எப்படி சாத்தியம் ஆகும்? என்று கூறும் அம்பேதகரின் வார்த்தைகளில் உள்ள சத்தியாவேசம் இன்றும் சுடுகிறது. இதற்கு இந்துக்களால், இந்து உணர்வாளர்களால் என்ன பதில் கூறிவிட இயலும்.

இந்த சாதி அமைப்பு என்பது சரியானதா என்ற கேள்வியை நாம் வெவ்வேறு தருணங்களில் நம்மிடமே கேட்டு விடை காணவேண்டும். நம் வாழ்வில் அப்படி நாம் கேள்விகேட்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏராளமாகவே உள்ளன. ஒரு சாதிய வன்முறை நடக்கும் போது அதை கேட்கலாம், நம் கண்களில் படும் இரட்டை டம்ளரை பார்க்கும் தருணத்தில் கேட்கலாம், மனித மலத்தை நம் கண்களுக்கு எதிரே ஒரு மனிதர் அள்ளும் போது கேட்கலாம், நம் நகரங்களில் ஜாதிய சுவர்கள் முளைத்து நிற்பதை பார்க்கும் போது கேட்கலாம், ஒருவர் தன் தோளில் உள்ள துண்டை எடுத்து வேகமாக கக்கத்தில் இடுக்கும் தருணத்தில் கேட்கலாம், சைக்கிளில் வரும் தலித் ஊருக்குள் சைக்கிளை உருட்டி செல்லும் தருணத்தில் கூட கேட்கலாம், ஊடக புகைப்பட காட்சிகளுக்காக நடக்கும் சமபந்திபோஜனங்கள் நடக்கும் போது கேட்கலாம், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் தரையில் அமரும் காட்சியை நாளிதழ்களில் பார்க்கும் தருணத்தில் கேட்கலாம், தலித்களை தனி சுடுகாட்டில் இந்த சமூகம் புதைக்கும் நாள் முடியும் வரை கேட்கலாம், நால்வர்ண அமைப்பை அடிப்படையாக கொண்ட ராம ராஜ்யம் பற்றி இன்று பேசும் அரசியல் சமூக விடலைகள் பார்க்கும் தருணங்களில் கூட கேட்கலாம், கேட்பதற்கு ஒராயிரம் சந்தர்ப்பங்கள் நம் வாழ்வில் கடந்தவண்ணம் உள்ளது, கேட்கத்தான் ஒரு மனம் வேண்டும்.

(
நண்பர் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்களின் மற்ற பதிப்புகளையும் நீங்கள் படிக்க கீழே குறிப்பிட்டு இருக்கும் இணையத்தை சொடுக்கவும் )

http://www.amuthukrishnan.com/

நன்றி : இன்று ஒரு தகவல்
படங்கள் : கூகுள் இணையதளம்.

Comments