அறியப்படாத தீவின் கதை!!!!

ஜோஸே ஸரமாகோ, (José Saramago) நோபல்பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளர், இவரது அறியப்படாத தீவின் கதை மிகச்சிறிய நாவல், 55 பக்கங்களே உள்ளது, கவிஞர் ஆனந்த் மொழியாக்கத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது
ஸரமாகோவின் எழுத்துலகம் தனித்துவமானது, முற்றுப்புள்ளியில்லாத நீண்டவாக்கியங்கள், உரையாடல்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ,
வெறுமனே கதையை வாசித்துவிட்டு சிலாகித்துப் போகின்றவர்களால் அவரை வாசிக்க முடியாது, மார்க்வெஸைப் போல கதை சொல்லும் முறையில் ஸரமாகோவின் பாணி முற்றிலும் புதியது,
இந்த நாவலில் அறியப்படாத தீவு ஒன்றிக்கு புறப்பட விரும்பும் ஒருவன் மன்னரைச் சந்தித்து தனக்காக படகு ஒன்றைக் கேட்கிறான், அறியப்படாத தீவு என எதுவுமில்லை, யாவும் அடையாளம் காணப்பட்டுவிட்டன என்று மன்னர் மறுக்கிறார், அவனோ இதுவரை அறியப்பட்ட தீவுகள் யாவுமே ஒருகாலத்தில் அறியப்படாத தீவுகள் தானே என்பதால் தானும் ஒரு அறியப்படாத தீவைக் கண்டறியப் போவதாகச் சொல்லிப் படகைக் கேட்கிறான், அவனது வேண்டுகோளிற்கு மக்களின் ஆதரவும் இருக்கவே மன்னர் ஒரு படகை அவனுக்கு அளிக்கும்படி கட்டளையிடுகிறார்.
படகு கிடைப்பதற்கு உதவி செய்த அரண்மனைப் பணிப்பெண் தானும் அங்கிருந்து  வெளியேறி அறியப்படாத தீவை நோக்கிப் பயணம் செய்ய விரும்புகிறாள், அவர்கள் ஒரு படகுத் துறையை அடைகிறார்கள், அங்கே ஒரு படகைத் தேர்வு செய்கிறார்கள், அது ஒரு பாய்மரப்படகு, அது நீண்டகாலமாக சுத்தம் செய்யப்படாமல் பறவைகள் அடையும் கூடாக உள்ளது, அதைப் பயன்படுத்தி பயணம் போவது என்று முடிவு செய்கிறார்கள்,
பயணத்திற்கு மாலுமிகள் வேண்டுமே என்று அவன் பலரையும் அழைக்கிறான், எவரும் அவனோடு பயணம் செய்ய விரும்பவில்லை, இதற்கிடையில் அந்தப் பெண்ணும் ஆணும் தங்களுக்கான படகில் தங்கியபடியே ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத் துவங்குகிறார்கள், அந்த பெண் தானே ஒரு அறியப்படாத தீவு என்பதை அவனுக்கு உணர்த்துகிறாள், அவனும் அறியப்படாத தீவாக தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறான், அவர்களின் கனவில் வழியே அறியப்படாத உலகொன்று அவர்கள் முன்பாக விரிகிறது, கடைசியில் தங்களின் பாய்மரக்கப்பலுக்கு அறியப்படாத தீவு என்று பெயர் சூட்டி அவர்கள் பயணம் கிளம்புவதோடு நாவல் நிறைவு பெறுகிறது
ஸரமாகோவை தமிழில் மொழியாக்கம் செய்வது மிகவும் சிரம்மானது, காரணம் அதன் இடைவெட்டிச் செல்லும் நடை, மற்றும் முடிவில்லாத நீண்ட வாக்கியங்கள், அதன் சங்கேதக் குறீயீடுகள், மற்றும் உருவகத்தன்மை, இத்தோடு உள்ளார்ந்த பகடியும் இருப்பதால் தமிழில் மொழியாக்கம் செய்யும் போது நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியது வரும்,
இந்த நாவலை கவிஞர் ஆனந்த் மிகுந்த முயற்சி செய்து செம்மையாக மொழியாக்கம் செய்திருக்கிறார், அது ஸரமாகோவின் நடையை ஒத்தேயிருக்கிறது, ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் போது உணர முடிந்த கேலி தமிழில் சாத்தியப்படவில்லை.  door for petitions என்பதை விண்ணப்பங்களுக்கான கதவு என்று மொழியாக்கம் செய்திருப்பது சற்று நெருடலாக உள்ளது.
இந்த நாவலின் துவக்கத்தில் ஸரமாகோ குறித்து சிறப்பான அறிமுகக் கட்டுரை ஒன்றினை எழுத்தாளர் பா.வெங்கடேசன் எழுதியிருக்கிறார், அது ஸரமாகோ பற்றிய மிகத் துல்லியமான மதிப்பீடாகும்.
ஸரமாகோவின் கதைசொல்லும் முறையில் நடப்பதை சொல்வதைப் போலவே நடக்காத்தையும் சொல்வதும் இயல்பாக உள்ளது, கதை ஒரு தளத்திலும், அதைச் சொல்லும் எழுத்தாளரின் குரல் இன்னொரு தளத்திலும் தனித்து இயங்குகிறது, கதையின் போக்கினை எழுத்தாளர் ஒரு மௌனசாட்சியைப் போலவே அவதானிக்கிறார், சில வேளைகளில் கதையின் போக்கு குறித்த தனது விமர்சனங்களை, மாற்றுசிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்,
அறியப்படாத தீவு என்ற ஒரு படிமத்தை மையமாகக் கொண்டு நாவலைக் கட்டியிருக்கிறார் ஸரமாகோ. அவரது நாவல்கள் யாவுமே இது போல ஒரு மையப்படிமத்தையே கொண்டிருக்கின்றன, பார்வையின்மை நாவலில்  எல்லோருக்கும் பார்வை போய்விடுவது, கல்தெப்பம் நாவலில் நகரின் நடுவே ஒரு கோடு போல விரிவு தென்படத்துவங்கி நகரம் இரண்டாக பிளந்து மிதக்கத் துவங்குவது என்று அவரது மையப்படிமங்கள் வலிமையானவை,
அறியப்படாத தீவின் கதை அரேபியக்கதை செர்ல்லும் முறையின் தொடர்ச்சி போலவே இருக்கிறது, சிந்துபாத்தையும் கதை சொல்லும் ஷெகரஷாத்தையும் இதன் ஆண் பெண்ணாக கொள்ளலாம், அவர்கள் இருவரும் இணைந்து கதையை முன்னெடுத்துப் போகிறார்கள் என்று வாசிக்கையில் புதிய அனுபவம் கிடைக்கிறது,
இன்னொரு பக்கம் வேதாகம மரபுப்படி ஆணும் பெண்ணும் அறியப்படாத தீவுகளே, அவர்கள் அறிவுக்கனியைப் புசித்த பிறகே ஒருவரையொருவர் அறியத் துவங்குகிறார்கள், அவ்வகையில் இது பைபிள் மரபிலிருந்து ஒரு கண்ணியை எடுத்துக் கொண்டு புத்துருவாக்கம் செய்துள்ள நாவல் போலவுமிருக்கிறது
மன்னர், படகு, படகுத்துறை, தீவுகளை நோக்கிய பயணம் என்பது போர்த்துகீசிய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளோடு சம்பந்தட்டது, லிஸ்பனில் இருந்து தான் வாஸ்கோட காமா உள்ளிட்ட பல கடலோடிகள் உலகை வென்று வர கப்பலில் பயணம் துவங்கினார்கள், ஆகவே போர்த்துகீசியர்களின் கடலோடி வாழ்வின் கதை போலவும் இதை நாம் வாசிக்க முடியும்,
இதே நாவலுக்கு ஒரு தத்துவார்த்த தளமும் இருக்கிறது, அது வாழ்க்கை தான் அவன் விரும்பும் படகு, அதை எங்கே செலுத்தப்போகிறான் என்று அவனுக்குத் தெரியாது, ஆனால் அவன் ஒரு பெண்ணோடு இணைந்து வாழத் துவங்கி தனது வாழ்வின் அறியப்படாத உண்மைகளை அறிந்து கொள்கிறான், கனவுகள் தான் வாழ்வின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன,
ஸரமாகோவின் நாவலில் உரையாடல்கள் விவரணைக்குள்ளாகவே ஊடுகலந்திருக்கின்றன, ஆகவே சொல்லும் குரலை வாசகனே கண்டறிய வேண்டியிருக்கிறது, ஒரு வகையில் வாசகன் தானே ஒரு கதை சொல்லியாக உருமாறியே கதையைக் கண்டடைய வேண்டியுள்ளது
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்.
என நகுலன் கவிதையொன்றிருக்கிறது, இக்கவிதை சுட்டிக்காட்டும் யாரும் இல்லாத பிரதேசம் என்பது சொல்லில் உருவான வெளி, சொல் வழியாகவே ஒரு அனுபவம் நமக்கு கிட்டிவிடுகிறது, அதைத்தான் ஸரமாகோவின் நாவலும் உணர்த்துகிறது,
நாவலில் வரும் ஆண் ஒரு படகை பெற்று அதன் வழியாக மனிதர்கள் காலடி படாத ஒரு தீவைக் காண கிளம்புகிறான், அவனை வழிநடத்துவது அவனது ஆசை, ஆனால் பணிப்பெண்ணிற்கோ அவள் ஒரு விடுதலையை, நெருக்கடியில் இருந்து மீளும் மனநிலையை அடைவதற்கே அவனோடு பயணம் செய்ய விரும்புகிறாள், அவளுக்கு தீவு குறித்து அதிகக் கற்பனைகள் இல்லை, ஆனால் படகை எப்படி வைத்துக் கொள்வது, பராமரிப்பது என்பது தான் அவளது கவலை, இந்தப் படகு தான் இதுவரையான நமது குடும்ப அமைப்பு என்பதை வாசகரால் நன்றாகவே உணர முடிகிறது,
ஒன்றை விரும்புவது தான் அதைச் சொந்தம் கொண்டாடுவதற்கான சிறந்த முறை என்று அவனும். சொந்தம் கொண்டாடுவது தான் விரும்புவதன்  மிக மோசமான வழி என அந்தப் பெண்ணும் நாவலின் ஒரு இடத்தில் கூறுகிறார்கள், அது தான் நாவலின் முக்கியப்புள்ளி
அது போல அவர்களின் கனவில் கப்பல் நோவாவின் படகைப் போல மிருகங்களைக் கொண்டதாக உருமாறிவிடுகிறது, அந்தப் படிமம் மீட்சியின் அடையாளம் போலவே இருக்கிறது
இப்படி ஸரமாகோ பைபிள் கதைகளில் ஒன்றைப் போன்ற சாயல் கொண்ட ஒரு கதையை முற்றிலும் புதியதொரு அனுபவப் பகிர்விற்கு உருமாற்றியிருப்பதே இந்த நாவலின் மிகப்பெரிய சாதனை
••
அறியப்படாத தீவின் கதை
ஜோஸே ஸரமாகோ
தமிழில் ஆனந்த்
காலச்சுவடு வெளியீடு
விலை ரூ 35


நன்றி : எஸ்  இராமகிருஷ்ணன் (எழுத்தாளர் )

Comments