Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சாதி ஒழிப்பு!!!

நமது சமுதாயத்தைக் கூறுகளாக்கிக் குழிக்குள் போட்டுப் புதைக்கும் சாதிப் பிரிவுகளைப் பற்றிப் பாரதியார் கவலைப்பட்டார். சாதிகளை ஒழித்துச் சாதிகள் இல்லாத புதிய சமுதாயத்தை அமைக்க அவர் விரும்பினார். சாதிக் குழப்பம்என்ற தமது கட்டுரையில்
"சாதியத் தன்னலக் கொள்கையின் உள்மன நிலைமை ஜனத்திற்கு ஏற்பட்ட மூளைவியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறிகள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ்சொற்களும், கொடுஞ் செயல்களுமாம்."
எனச் சாதிக் கொடுமையால் ஏற்படும் வன்முறைக் கலவரங்களைக் குறிப்பிடுகின்றார். மேலும் சாதி என்பது ஒரு மூளைவியாதி என்று அவர் கூறுவதும் காணத்தக்கது.
இந்தியச் சமுதாய அமைப்புச் சாதியின் அடிப்படையிலானது. அதனால் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள், சுரண்டல்கள் (Exploitation), தீண்டாமை போன்றவை ஏற்பட்டன. இவற்றைக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதியார்.
தீண்டாமை                                                                                                                                
சாதி அடிப்படையில் அமைந்த தீண்டாமை என்பது மிகக்கொடிய ஒன்றாகும். தன் வீட்டில் நாய், பூனை போன்றவற்றிற்கு இடங்கொடுத்து அன்பு செலுத்துகின்ற மனிதன், மனித இனத்தில் உடன் பிறந்தோரைத் தீண்டத்தகாதவர் என விலக்கி வைப்பதும் விலகி வாழ்வதும் பண்பாடற்ற செயல் என்பது பாரதியாரின் கருத்து. தீண்டாமை என்பது உடலோடு மட்டும் தொடர்பு உடையது அன்று. அது உள்ளத்துள்ளே உறைந்து கிடப்பது. உதட்டளவில் மட்டும் சாதியை ஒழிப்பதாகக் கூறிவிட்டு உள்ளுக்குள்ளே சாதிவெறியை வளர்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் சாதி என்ற நச்சுணர்வை விதைத்து விடுகின்றனர். அவர்கள் வளர வளர அந்தத் தீய உணர்வும் வளர்கிறது. அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் சாதிகள் இல்லை என்ற உணர்வை விதைக்க வேண்டும் என்று கருதிய பாரதியார்,

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்

எனக் கூறுகிறார். ஒரு பெண் இந்த உணர்வைப் பெற்றால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த உணர்வை ஊட்டுவாள். படிப்படியாகச் சமுதாயம் முழுமைக்கும் அது பரவும் எனக் கருதிய பாரதியார் பெண் குழந்தையை நோக்கிப் பாடுகிறார். ஒரு சாரார் மற்ற பகுதியினரைத் தீண்டத்தகாதவர்கள் எனப் புறக்கணிப்பதற்கு என்ன காரணம் எனப் பாரதியார் சிந்திக்கிறார். இந்தத் தீண்டாமை நோயின் அடிப்படை அறிந்து அதனை நீக்கிவிட்டால் அந்நோயும் நீங்கும் அல்லவா?
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகை சாதிப் பிரிவில், கடைசியாகக் குறிப்பிடப்படுவோரின் உழைப்பின் பலனே ஏனைய மூன்று இனத்தவருக்கும் உணவாக அமைகிறது. உழைக்கும் பிரிவினராகிய ஏழைகள் புறக்கணிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை சமுதாய ஏற்றத்தாழ்வு, உணவுப் பழக்கவழக்கங்கள், தூய்மைக் குறைவான பகுதியில் வசித்தல் முதலியனவாகும். ஊருக்குப் புறத்தே அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி எனப்பட்டது. (எந்தக் குலத்தவராயினும் பலர் சேர்ந்து வாழுமிடம் பண்டைக் காலத்தில் சேரிஎனப்பட்டது. பார்ப்பனச்சேரி, உமண்சேரி, பாணச்சேரி என்ற வழக்குகள் உண்டு. இந்த நிலை காலப்போக்கில் மாறி வருண அடிப்படையில் தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்டோர் வாழும் இடத்தைச் சேரி எனக் குறிக்கும் வழக்கம் தோன்றியது.) அவர்கள் ஊருக்குள் சென்று வாழத் தடை இருப்பதை உணர்ந்த பாரதியார் அதை நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.

இரபீந்திரநாத் தாகூர் 1917-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் மாடர்ன் ரெவியூஎன்ற பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையைப் பாரதியார்அடங்கிநடஎன்று தமிழாக்கம் செய்துள்ளார்.
அதில் "சாதிக் கட்டுகளை அறுத்தெறியச் சாமியார்களோ குருமார்களோ மக்களுக்கு எடுத்துரைக்காத காரணத்தாலும், இதற்கு மாறாகத் துணை நின்றதாலும் நாடு அடிமைப்பட நேர்ந்தது என்பது வரலாற்றுண்மை எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதியார் தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இரபீந்திரநாத் தாகூரின் கட்டுரையைத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளதை அறிய முடிகிறது.

நன்றி : தோழர் ந.தீபக்குமார் 

Post a Comment

0 Comments