கலை சேர்க்கும் காலை உணவு



                         
           ‘உணவே மருந்து’ என்ற காலம் போய்,மருந்து தான் உணவாகி விட்ட காலம் வந்து விட்டது.உடலுக்கு நலம் சேர்க்கும் உணவுகளை தவிர்த்து,கிடைத்த உணவுகளை வயிற்றுக்குள் சேர்த்தால் போதும் என்று அரங்கேற துவங்கி விட்டது.இதன் விளைவு தான்,மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்,தினம்,தினம் அலைமோதிக் கொண்டிருக்கின்றது.’சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்று தெரிந்தவர்கள் தான்,சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர்.
    அவசர யுகத்தில்,எல்லாம் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற ஆவல்,உள்ளுக்குள் தோன்றுவது ஆச்சரியமில்லை. ஆனால் வேகத்தில் விவேகம் இருந்தால் தான், எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக முடிக்க முடியும். அவசரம்… அவசரம்… என்ற போக்கில்,உணவு உண்ணவே நேரம் கிடைப்பதில்லை பலருக்கு.காலையில் எழுந்தது முதல் விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, உணவு உண்பதில் அக்கறை செலுத்துவதில்லை.இதனால் காலை உணவு இவர்களுக்கு உண்ணாவிரதம் தான்.இது நாளடைவில், பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
     காலை உணவை தவிர்த்து வந்தால்,மூளையின் செயல்படும் திறன் குறைகிறது.மேலும் காலைக்கும்,மதியத்துக்குமான இடைவேளையில்,எண்ணெய் பதார்த்தங்களை வயிற்றுக்குள் தள்ளத் தோன்றும்.இந்த பதார்த்தங்கள் மதிய உணவை உண்ண தோன்றாது. ஆனால், உடல் எடை அதிகம் உள்ளவர்கள்,காலை உணவை தவிர்த்தால்,எடை குறையும் என்று உண்ண மறுக்கின்றனர் .இது, வேறு பல மாற்றங்களை உடலில் தோற்றுவிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
     முறையான உணவு பழக்கத்துடன், இடைவெளி விட்டு போதியளவு நீர் அருந்தும் பழக்கம் ,காய்கறிகள்,முளைகட்டிய பயிறுகள்,பழங்கள், போன்றவற்றை உண்ணும் பழக்கத்தையும் குழந்தைகளுக்கு கற்றுதர வேண்டும். அப்போது தான் அவர்களது வளர்ச்சி முறையாக இருக்கும். இன்று, 100 வயதை கடந்தவர்களிடம், உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்னவென்று கேட்டால்,அவர்கள் எடுத்துக் கொண்ட உணவுகளும், முறைகளும்,உடற்பயிற்சியும் தான் என்று கூறுவர்.





Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்