அருவிகளின் லீலை!!!


நடந்தாய் வாழி காவேரி என்று தி.ஜானகிராமன் காவேரி ஆற்றின் பாதையெங்கும் நதியின் புகழ்பாடியபடியே பயணித்த அனுபவ நூல் ஒன்றை வாசித்திருக்கிறேன்
அது  தந்த உத்வேகத்தில் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் வழியெங்கும் பயணம் செய்து பார்த்திருக்கிறேன்.  ஏரி, குளம், கண்மாய், அணைகள் என்று தமிழக நீர்நிலைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகள் அலைந்து திரிந்திருக்கிறேன், இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு வறுமையானது என்ற எண்ணம் அடியோடு போய்விட்டது
ஆற்றின் கரைகளில் வாழ்வது, அல்லது ஆற்றைத் தேடிச்சென்று காண்பது என்பது மனித மனதின் ஆதார வேட்கைளில் ஒன்று, அதனால் தான் இன்றும் பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு போன பலரும் கூட நினைவில் ஒடும் தாமிரபரணியை, காவேரியை, அமராவதியைப் பற்றி பேசிக் கொண்டேயிருக்கிறார்கள், அவர்களுக்குத் தாமிரபரணி என்பது நதியில்லை, வாழ்வின் பிரிக்கமுடியாதப் பகுதி, அதன் நீரோட்டத்திற்குள் தான் பால்யமும் பதின்வயதும் இளமைக்காலமும் கலந்து ஒடுகின்றது, ஆறு எப்போதும் வாழ்வின் இனிமையான பொழுதுகளின் ஞாபகவடிவம் போலிருக்கிறது,
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருமுறையாவது இந்தியாவின் பிரதான நதிகளை நேரில் பார்த்து வரவேண்டும், அப்போது தான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். இந்தியா நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவின் ஆன்மாவைத் தேடும் ஒரு பயணி நதி வழி செல்பவனாகவே இருப்பான்.
இதைத் தான் தீர்த்த யாத்திரை என்று சொல்வார்கள், அது வெறும் மதவழிபாடு மட்டுமில்லை, வேறுவேறு ஆறுகளை, குளங்களை, நீர்நிலைகளைத் தேடிப்போய் தரிசனம் செய்வது என்பது அகச்சந்தோஷத்தை உருவாக்க கூடியது, நதியைப் பார்த்த மாத்திரம் ஒருவனது சொந்தக் கவலைகள், துயரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன, ஆற்றின் பிரவாகத்தை ரசிப்பதற்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை,
நதியில் நீராடும் மனிதன் பலவேளைகளில் அதனோடு பேசுகிறான், அதை வணங்குகிறான்,  நதியைத் தனது தாயாக, தோழியாக, நண்பனாக, குழந்தையாக, ஞானகுருவாக கொள்வது இந்திய மரபில் எப்போதுமிருக்கிறது, நதியில் நீராட முடியாத நேரங்களில் அதைக் கண்ணில் ஒரு துளி ஒற்றிக் கொண்டால் போதும் நதியின் அத்தனை உயர்தன்மைகளும் நமக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது,
காந்தியவாதியான காகா காலேல்கர் இந்தியாவில் ஒடும் அத்தனை முக்கியமான ஆறுகளையும் பயணம்  செய்து நேரடியாகப் பார்த்து குஜராத்தி மொழியில் விரிவான புத்தகம்  ஒன்றை எழுதியிருக்கிறார், ஜீவன் லீலா என்ற அந்தப் புத்தகம் தமிழில் பி.எம். கிருஷ்ணசாமி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, 1971ல் சாகித்ய அகாதெமி இதை வெளியிட்டிருக்கிறது.
நதியும், அதுசார்ந்த மக்களின் வாழ்க்கைமுறையும், கலாசார அடையாளங்களும் குறித்து காகா காலேல்கர்  ஆவணப்படம் எடுப்பதை போல துல்லியமாக  விவரித்துக் கொண்டே போகிறார்.
நதிகள் குறித்தும் இது போல சுவாரஸ்யமாக எழுதப்பட்ட புத்தகம் எதையும் நான் வாசித்ததேயில்லை,. ஜீவன் லீலாவைப் படிப்பவர்கள் காகா கலேல்கர் மீது பொறாமை கொள்வது தவிர்க்கமுடியாதது, அந்த அளவு அவர் இந்திய தேசத்தின் ஒவ்வொரு நதியையும் தேடிப்போய் பார்த்திருக்கிறார், ரசித்து உருகியிருக்கிறார்
நதியை அறிவது ஒரு கொண்டாட்டம், பிரிந்த குடும்பத்தை மறுபடி காணும் ஒருவனின் மனநிலையே ஆற்றினைக் காணும் போது அவருக்குள் ஏற்படுகிறது, நதியை வியந்து வியந்து போற்றுகிறார், அதன் பூர்வ வரலாற்றை. அதை புராணீக குறிப்புகளை, கவிஞர்கள் ஆற்றினைப் பாடிய பாடல்களை நினைவுபடுத்துகிறார், அவ்வகையில் இது ஒரு நதியாஞ்சலி
காகா காலேல்கர் காந்தியின் நெருங்கிய சீடர், இவர் கையில் வைத்திருந்த கோலை தான் காந்தி உப்புசத்தியாகிரகத்தின் போது வாங்கி பயன்படுத்திக் கொண்டார், அந்த வகையில் தானொரு காந்தியின் கைத்தடி என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொள்கிறவர், காந்திய இயக்கத்தை மேம்படுத்த காலேல்கர்  இந்தியா முழுவதும் தொடர்ந்து பயணம் செய்திருக்கிறார்,
நதிகளைப்பற்றி அவர் சுட்டிக்காட்டும் விஷயங்கள் வியப்பானவைபசு, காளை குதிரை போன்ற விலங்குகளின் குலத்தை வகைப்படுத்த நதிகளையே அடையாளம் சுட்டுகிறார்கள்,  நல்ல ஜாதிக் குதிரைகள் சிந்துநதிக்கரையில் அதிகம் வளர்க்கப்பட்டன, அதனால் அந்த குதிரைகளுக்கு பெயரே சைந்தவம் என்றானதுபீமா நதிக்கரையில் வளரும் மட்ட குதிரை ரகத்தின் பெயரே பீமாகுதிரை, இப்படி விலங்குகள் நதியின் இயல்பை வைத்தே அழைக்கப்பட்டன
இதுபோலவே விலங்குகளின் பெயரை நதிக்குச் சூட்டி அழைப்பதும் வழக்கம்கோதா, கோமதி  சர்மண்வதி போன்றவை அப்படி பட்டவைகளே
இந்தியாவில் கடலுக்கு இன்னொரு பெயரிருக்கிறது அது நதியின் கணவன், ஆறுகள் நதியைத் தேடி சேர்வதால் அந்த பெயர் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் காலேல்கர்
ஆற்றைப் பார்த்தவுடனே எல்லோரது மனதில் அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்ற கேள்வி தானாகவே எழுகிறது, இந்தக் கேள்வி  மிகப்பழமையானது, நதிமூலம் அறிந்து கொள்ள எப்போதுமே மனிதன்  ஆசைப்படுகிறான், ஆனால் மனிதனால் ஒருபோதும் நதியின் ரகசியத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது ஒருவேளை அறிந்து கொண்ட ரகசியத்தை கூட வெளியே சொல்வது அர்த்தமற்றது  என்றே மனிதன் நினைக்கிறான், ஆறு அவனது நிரந்தரமான தோழன்,
வாழ்க்கையை எப்போதுமே நதியோடு தான் ஒப்பிடுகிறோம், பிரவாகம் தான் வாழ்வின் கதி, இந்த ஒப்புமையைப் பாடாத இந்தியக் கவிகளேயில்லை, உபநிஷதம் துவங்கி இன்றைய கவிஞர்கள் வரை நதிகளைப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள், நதியின் முன்னால் நிற்கும் ஒருவன் என்ற படிமமே மனதை கற்பனையில் கொண்டுவிடுகிறது இல்லையா,
நதி ஒருவனின் புறத்தைத் தூய்மை படுத்துவதை போலவே அகத்தையும் தூய்மை செய்யக்கூடியது, அதை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலில் வரும் கோவிந்தன் இறுதிக்காட்சியில் சொல்கிறான், நதியில் ஒரு படகோட்டியாக வாழ்வதே உன்னதமான வேலை, அதுவே உயர்ந்த ஞான நிலை என்கிறான், காரணம் நதி அவனுக்கு வாழ்வின் உயர்வு தாழ்வுகளை. சுகதுக்கங்களைக் கற்றுத்தந்திருக்கிறது, அதைத்தான் இந்த நூல் முழுவதும் காலேல்கரும் வலியுறுத்துகிறார்
ஜீவன் லீலா முழுவதும் கவித்துவத் தெறிப்புகள் மிளிருகின்றன, உலகின் முதல் பயணி நதியே என்று நதியைப் பற்றி சொல்லத்துவங்கிய காலேல்கர் நதி ஒரு கண்ணாடி அதில் இரவின் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன, கறுப்பு வெண்ணெய் போல சேறு படிந்த ஆறு, ஆற்றில் உள்ள கூழாங்கற்களில் இறந்தவர்களின் அஸ்தி கரைந்து அவை அழிக்கமுடியாத நினைவின் வடிவம் போலயிருக்கின்றன.
இரண்டு நதிகள் ஒன்றாகும் போது ஒரு நதி தன் பெயரை விட்டுக்கொடுத்து மற்றொரு நதியாகிவிடுகிறது, ஆறு கடலோடு கலக்கும் போது தன்னை ஒடுக்கி கொண்டுவிடுகிறது, அதற்கு காரணம் அது கணவனை தேடிச்சேர்கிறது என்பது தானா என்று ஒளிரும் வரிகளை கவித்துவ உச்சங்கள் என்றே சொல்லவேண்டும்
ஆறு ஒரு தர்மத்தைக் கடைபிடிக்கிறது, அதனால் தான் அது கரைகளுக்குள் ஒடுங்கி ஒடுகிறது,  தனது பெயரை, பெருக்கெடுக்கும் பிரகாவத்தைத் தானே கைவிட்டு முடிவில் கடலோடு ஒன்று கலந்துவிடுகிறது, அந்த வகையில் மனிதவாழ்க்கை மேற்கொள்ள வேண்டிய அத்தனை செயல்களையும் நதி வழிகாட்டிச் செல்கிறது, அதனால் தான் நதியை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் காலேல்கர்
காந்திஜி தன் பால்யத்தில் விளையாடிய ஆஜீ நதி துவங்கி கங்கை பிரம்மபுத்ர,கிருஷ்ணா, காவேரி வைகை, யமுனை, கோமதி, பத்மா, சரயூ, ஐராவதி, கோதாவரி, சிந்து என்று எண்ணிக்கையற்ற நதிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார், இதில் வியப்பு என்னவென்றால் நாம் மறந்து போன சென்னையின் அடையாற்றை பற்றிக் கூட ஆதங்கத்துடன் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்
கடலைத் தேடி வரும் அடையாறு கடலோடு கலந்துவிடாமல் ஒரு மணல்தட்டால் தடுக்கபடுகிறது, இந்த மண் அணையைத் தாண்டிப்போக முடியாமல் ஆறு நின்றுவிடுகிறது, ஆகவே அடையாறு  கடலுடன் கோவித்துக் கொண்ட ஆறு என்று சுட்டிக்காட்டுகிறார்
ஆற்றினை பற்றி மட்டுமில்லை, சில்கா ஏரி துவங்கி  கேளரத்து உப்பங்கழி வரை முக்கிய நீர்நிலைகள் பற்றியும் காலேல்கர் எழுதியிருக்கிறார், இந்திய மக்கள் ஒருவரையொருவர் எளிதாகப்புரிந்து கொள்வதற்கு முக்கிய காரணம் நதிகளே, அதோடு இணைந்து வாழ்வதால் வாழ்க்கை விழுமியங்கள் ஒன்று போலவே இருக்கின்றன என்று  அடையாளம் காட்டுகிறார் காலேல்கர்
நதியோடு நமது பண்பாட்டுச் சூழல் எப்படி இணைந்து வளர்ந்தது என்பதற்கு நிறைய உதாரணங்களையும் வரலாற்று உண்மைகளையும் முன்வைத்து எழுதுகிறார்
புத்தகம் முழுவதும் நீரோட்டச் சப்தம் கேட்டபடியே இருக்கிறது, இப்புத்தகத்தை வாசிப்பது ஒரு அரிய அனுபவம், நூலை முடிக்கும் போது வாசகன் பெருகியோடும் நதியில் குளித்து எழுந்து நிற்பது போன்ற புத்துணர்ச்சியை பெறுவது நிச்சயம்,
நதி அவனுக்கு முன்பும் பின்பும் தன்னியல்பில் ஒடிக்கொண்டிருப்பது போல உலகம் இயங்கிக் கொண்டேயிருப்பதை அப்போது அவன் மனம் நுட்பமாக உள்வாங்கி கொள்ளும், அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றி
••
ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள்/ காகா காலேல்கர்; தமிழாக்கம் பி.எம்.கிருஷ்ணசாமி. Publication, புது தில்லி: சாகித்திய அக்காதெமி, 1971


நன்றி : எஸ்  இராமகிருஷ்ணன் (எழுத்தாளர் )

Comments