பெங்களூருக்கு மாடி ரயில்!


இன்றைக்கு செய்தித்தாளைப் பிரித்தவுடனே ‘ஆஹா..! என்று சந்தோஷத்துடன் கூவினேன்.

‘நம்மூரிலிருந்து இங்கு வர  புது ரயில்...!’
‘அதான் நிறைய இருக்கே... இன்னும் என்ன புது ரயில்....?’
‘இது ஆ(ர்)டினரி ரயில் இல்ல. மாடி ரயில்...!’
‘மாடி ரயிலா...!’
‘ஆமா, டபுள் டக்கர் ரயில்....!’

செய்தியை அவசர அவசரமாக படிக்க ஆரம்பித்தேன்.

இது தென்னிந்தியாவின் முதல் டபுள் டக்கர், ஏ.ஸி. சேர் கார் எனப்படும் உட்காரும் வசதி கொண்ட ரயில். சென்ற ஞாயிறு அன்று (24.02.2013) சோதனை ஓட்டம் செய்து பார்த்திருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் தினமும் பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையில் ஓட ஆரம்பித்துவிடும்

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் ஏழு விரைவு வண்டிகள் இருக்கின்றன. ஆனாலும் பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையினால் இன்னொரு ரயில் இந்த நகரங்களுக்கு இடையே விட ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. இந்த ரயிலில் மற்ற ரயில்களை விட 40% அதிக இடவசதி இருக்கும்.  ஷதாப்தியில் 78 இருக்கைகள், பிருந்தாவனம் ரயிலில் 72 இருக்கைகள். இவற்றைவிட கூடுதலாக ஒரு சேர் காரில் 12௦ இருக்கைகள் இந்தப் புது ரயிலில் இருக்கும். மொத்தம் 11 சேர் கார்கள். 132௦ பயணிகளை சுமந்து செல்லும். பயண சீட்டின் விலை மற்ற ரயில்களை விட சற்றுக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் இருவருமே சீனியர் சிடிசன்ஸ்!

டபுள் டக்கர் என்ற பெயர் இருந்தாலும் 3 தளங்கள் இதில் இருக்கும். ரயில் பிளாட்பாரத்தில் இருந்து உள்ளே நுழையும் தளம், அடுத்ததாக ஒரு தளம், அதற்கு மேல் ஒரு தளம். இவற்றில் இருக்கைகள் முறையே 22, 48, 50 என்று அமைந்திருக்கும்.

இந்த டபுள் டக்கர் ரயில் ( No. 22625) சென்னையிலிருந்து காலை 7.25க்குப் புறப்பட்டு, மதியம் 1.20க்கு பெங்களூரை அடையும். பெங்களூரிலிருந்து (No. 22626) மதியம் 2.40க்குக் கிளம்பி இரவு 8.40க்கு சென்னையை அடையும்.

சென்னை சென்ட்ரல், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் பெங்களூர் கேன்ட், பெங்களூர் சிடி என்று 9 நிறுத்தங்களுடன், மணிக்கு 11௦ கி.மி. வேகத்தில் சுமார் 6 மணி நேரத்தில் பெங்களூரை வந்து அடையும் இந்த மாடி ரயில் சிவப்பும், மஞ்சளுமான வண்ணத்தில் மின்னுகிறது. புகைப்படங்களைப் பாருங்கள். என்ன அழகு!

என் வருத்தம் என்னவென்றால், எங்களைப்போல ஒரே நாள் சென்னை பயணம் செய்து திரும்புகிறவர்களுக்கு இந்த ரயில் சரிப்படாது. பாதி நாள் வீணாகிவிடுமே! நமக்கு சென்னை மெயில் தான் சரி. இரவு ஏறிப் படுத்தோமா, அடுத்த நாள் வந்த வேலையைப் பார்த்தோமா, அன்றிரவு அதே ரயிலை  பிடித்து மறுநாள் ஊர் வந்து சேர்ந்தோமா என்கிற நிலைதான் எப்போதுமே.

யாரங்கே! சென்னை மெயிலை மாடி ரயிலாக மாற்றச் சொல்லுங்கள்!


Comments

 1. நானும் ரொம்பநாளா இந்த ரயிலை எதிர்பார்கிறேன்.தினமும் நான் பிருந்தாவன் விரைவு வண்டியில் செல்வது வழக்கம் .நிறையபேர் இதைபற்றித்தான் பேச்சு

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்களா? அட! தெரியாமல் போய்விட்டதே!
   வண்டியின் நேரம் கொஞ்சம் சரிப்படவில்லை என்றாலும் ஒருமுறையாவது பயணம் செய்து பார்க்கவேண்டும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 2. நானும் இதைதான் நினைத்தேன்.. ஒரேநாளில் சென்று திரும்பும் ஆட்களுக்கு இது சரிவராது என!

  ReplyDelete
  Replies
  1. நீ நினைத்தது சரிதான் சமீரா. ஆனால் ஒருமுறையாவது பிரயாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன், துணைவரிடம்.

   நன்றி வருகைக்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும்..

   Delete
 3. வருத்தம் நியாயமானதுதான் ! இருந்தாலும் புதுமையை வரவேற்போம்.... நாளடைவில் பழகிப்போய்டும் :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் புதுமையை வரவேற்போம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 4. அட அழகாயிருக்கே .டபுள் டக்கர் ட்ரெயின். பார்க்கணும்.

  ReplyDelete
 5. ஏறி எங்களூருக்கு வாங்கோ!

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்