மிதக்கும் தீவுகள்


மிதக்கும் தீவுகள்

      தென் அமெரிக்கா கண்டத்தின், பெரு நாட்டில் உள்ள பழங்குடியினர், எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்க, ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அந்த நடைமுறை, ஆச்சரியமானது மட்டுமல்ல; அதிசயமானதும் கூட. பெரு மற்றும் பொலிவியா நாடுகளின் எல்லையில், டீட்டிகாகா என்ற, அழகான, பிரமாண்டமான ஏரி உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள, மிகப் பெரிய ஏரிகளில், இதற்கு முக்கிய இடம்  உண்டு. இந்த ஏரியில், 27 ஆறுகள் கலக்கின்றன.
         கடல் மட்டத் திலிருந்து, 3,812 மீட்டர்  உயரத்தில், இந்த ஏரி அமைந்துள்ளதால், மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள, மலை மற்றும் வனப் பிரதேசங்களில், ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றனர். ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரை பார்த்தாலே, பகை நெருப்பு பற்றிக் கொள்ளும். பயங்கர ஆயுதங்களுடன், இரு தரப்பினரும், மோதிக் கொள்வர். இங்கே, உயிரிழப்புகள், சர்வ சாதாரணம்.
சட்டம்-ஒழுங்கு வரம்பிற்கு  உட்படாதவர்கள் என்பதால், இவர்களுக்கு இடையேயான ரத்தக் களறிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவர்களில், உரோஸ் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், டீட்டி காகா ஏரிக்கு, மிக அருகில் வசிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கையே, 400லிருந்து, 500 வரை தான். எதிர் தரப்பிடமிருந்து, தங்களை பாதுகாப்பதற்காக, இவர்கள் பின்பற்றும் நடைமுறை அலாதியானது. ஏரியைச் சுற்றியுள்ள இடங்களில், அடர்ந்து வளரும், நாணல் செடிகள் தான், இவர்களின் தற்காப்பு கவசமாக விளங்குகிறது.
             இந்த நாணல்களை வெட்டி எடுத்து, உலர வைத்து, பக்குவப்படுத்தி, அழகான குடில்களை செய்கின்றனர். ஒவ்வொரு பத்து குடில்களுக்கும் கீழும், நாணல்களாலேயே, கட்டுமரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, ஏரிகளில் மிதக்க விடுகின்றனர். தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஏரிக்குள், அழகான, பல குட்டித் தீவுகள் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கும். எதிரிகள் வந்து விட்டால், கட்டுமரங்கள், படகுகளை எப்படி துடுப்பு போட்டு, இயக்குகிறோமோ, அதேபோல், இந்த குடில்களையும் இயக்கி, அங்கிருந்து தப்பித்து விடுவர்.
         மிக ஆழமான பகுதிகளுக்கு சென்று விட்டால், எதிரிகளால், அவர்களை பின் தொடர முடியாது என்பதால், இந்த நடைமுறையைத் தான், பல ஆண்டுகளாக, உரோஸ் பிரிவினர் பின்பற்றுகின்றனர். துவக்க காலத்தில், வெறும் நாணல்களை மட்டுமே, இந்த மிதக்கும் தீவுகளுக்கு பயன்படுத்தி வந்த, பழங்குடியினர், தற்போது, தெர்மாக்கோல் போன்ற பொருட்களையும், பயன்படுத்துகின்றனர். எதிரிகளிடமிருந்து  உயிரை காப்பாற்றுவதற்காக பயன்படும் நாணல்கள், உரோஸ் பிரிவினரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன.
          நாணல் புதரிலிருந்து, அயோடின் தயாரித்து, அதை விற்பனை செய்கின்றனர். இதில், உள்ள பூக்களை பக்குவப்படுத்தி, பானங்கள் தயாரிக்கின்றனர். மேலும், மருந்து பொருட்களாகவும், இவற்றை பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக, இந்த மிதக்கும் தீவுகளில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தும், தகடுகளும் தென்படுகின்றன. இவற்றின் மூலமாக, விளக்குகள், ரேடியோ, "டிவி' போன்ற, நவீன வசதிகளையும், உரோஸ் பிரிவினர் பயன்படுத்துகின்றனர். 

நன்றி
தினமலர்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்