தங்கக்கார்


தங்கத்தால் உருவாக்கப்பட்ட அதிசயக்கார்


 தங்கத்தின் மீது ஒருவருக்கு ஆசை இருக்கலாம்; ஆனால், அந்த ஆசை வெறியாக மாறினால், என்ன நடக்கும்? இதோ, சுவிட்சர்லாந்தை சேர்ந்த உயெலி அன்லைக்கர் என்ற தொழில் அதிபர், என்ன செய்திருக்கிறார் என பாருங்கள்.

இவருக்கு தங்கத்தின் மீது மட்டுமல்ல, அழகழகான சொகுசு கார்களின் மீதும் ஆர்வம் அதிகம். கார் சந்தையில், புதிதாக என்ன கார் அறிமுகமானாலும், உடனடியாக அதை விலைக்கு வாங்கி, ஓட்டிப் பார்த்து விடுவார்.

இப்படித் தான், சமீபத்தில் ஆசை ஆசையாக, மெர்சிடிஸ் காரை வாங்கினார். திடீரென அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இந்த காரை, தங்க காராக மாற்றினால் எப்படி இருக்கும் என யோசித்தார். உடனடியாக செயலில் இறங்கி விட்டார்.
தொழில் அதிபர் என்பதால், இவரிடம் பணத்துக்கு பஞ்சம் இல்லை. 35க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல்ஸ் தொழிலாளர்களை வரவழைத்து, தன் எண்ணத்தை அவர்களுக்கு தெரிவித்தார். அவர்களின் உதவியுடன், சாதாரண மெர்சிடிஸ் காரை, தங்க மெர்சிடிஸ் காராக மாற்றும் பணிகள் துவங்கின.

காரின் வெளிப் பகுதி முழுவதும், சிவப்பு நிற பெயின்ட் அடிக்கப்பட்டது. இந்த பெயின்டுடன், ஐந்து கிலோ தங்கத் துகள்கள் கலக்கப்பட்டன. இதனால், கார், தக தகவென, தங்கச் சுரங்கம் போல் மின்னியது.
காரின் ஒவ்வொரு சக்கரங்களும், 24 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டன. முகப்பு விளக்கு, படிக்கட்டுகள் ஆகியவையும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்தில், அதிகபட்சமாக, 210 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய அளவில், இன்ஜினும் மாற்றி அமைக்கப்பட்டது.

காரின் வேகத்தை கணக்கிடும் மீட்டர் கருவிகள், உட்புறம், ஸ்டியரிங் வீல் ஆகியவையும் மாணிக்க கற்கள், தங்க நகைகள் கலந்து, வடிவமைக்கப்பட்டன. காரின் உட்புறத்தில் மட்டும், அறுநூறு மாணிக்க கற்கள் பொருத்தப்பட்டன. காருக்கு உள்ளே நுழைந்தாலே, சொர்க்க லோகத்துக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், அந்த கார், முற்றிலும் மாற்றி வடிவமைக்கப்பட்டது.

மெர்சிடிஸ் காரை, தங்க காராக மாற்றுவதற்கு, 27 கோடி ரூபாயை செலவழித்திருப்பதாக கூறுகிறார், உயெலி அன்லைக்கர். "இந்த காரை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என கேட்ட போது, "அடிப்படையில் நான் ஒரு தொழில் அதிபர். இந்த காரையும் லாப நோக்கத்தில் தான் உருவாக்கியுள்ளேன். இந்த காரை, 56 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளேன் என பதில் அளித்தார்.
நன்றி
தினமலர்

Comments