ஓவியங்களால் ஒரு அரண்மனைஓவியங்களால் ஒரு அரண்மனை - பங்காரு திருமலை கட்டிய அரண்மனை      பழங்கால ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள்தான் வரலாற்றை உணர்த்தும் அடையாளச் சின்னங்கள். அதற்கடுத்தபடியாக வரலாற்றுச் சின்னங்களாக நிற்பவை பழமை வாய்ந்த கோயில்களும், அரண்மனை கட்டடங்களும்தான்.


அத்தகைய வரலாற்றுச் சிறப்போடு, மூலிகைகளால் வரையப் பெற்ற ஓவியங்களை உள்ளடக்கிய பழங்கால அரண்மனைதான் போடி நாயக்கனூர் அரண்மனை. இன்றைக்கும் அரண்மனை வாரிசுகள் அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், அந்த அரண்மனை முழுதும் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள்தான். ஆமாம் இன்றைக்கும் நேற்று வரையப்பட்ட அழகோடு அவை அரண்மனையை அழகாக்கிக் கொண்டு இருக்கின்றன.

உள்ளூரக் காரர்களுக்கே தெரியாத உன்னத ஓவியம் நிறைந்த மூன்றுமாடி அமைப்பு கொண்ட அரண்மனை அது. 72 பாளையப்பட்டுகளில் ஒன்று போடிநாயக்கனூர் ஜமீன். பெரிய சுற்றுச்சுவருக்குள் அமைந்த மூன்று மாடி கொண்டுள்ளது. அரண்மனை உள்ளேயே “கோதா’ எனும் விளையாட்டரங்கம், “உக்கிராணம்’ எனும் பொருள் வைப்பறை, நெற்களஞ்சியம், பார்வையாளர் மண்டபம், குதிரை, யானை கொட்டம், மூலிகை ஓவியம் நிறைந்த “லட்சுமி விலாசம்’ என தேக்குமரத்தூண்கள் எழில்மிகு மரச்சிற்பங்களோடு “ஆசாரவாசல்’ என திரும்பும் திசை எங்கும் பழமை மாறா சின்னங்கள்.

ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனை மாடலில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாளிகை என்கிறார்கள் இந்த அரண்மனையை.அரண்மனையின் கீழ்த்தளத்தில் மராட்டிய பாணி வளைவுகள், தூண்கள் தாங்கிய மூலிகை ஓவியங்கள் நிறைந்த கூடம் தான் “லட்சுமி விலாசம்’ பொன்னும் பொருளும் குவிந்து கிடந்த பொக்கிஷ அறையும் அந்தக் காலத்தில் இதுதானாம். அரண்மனைக்குப் பெருமை சேர்ப்பதே இங்குள்ள சுவர் ஓவியங்கள்தான். இராமாயணக் காப்பியம் இங்கு கவின்மிகு கண்கொள்ளாக் காட்சியாக, பேசும் சித்திரங்களாக உள்ளன.
காப்பியக் காட்சிகளை ஓவியங்களாக சுவர்களில் வரையும் மரபு பல்லவர் காலத்தில் தொடங்கியது என்கிறார்கள்.

அரண்மனை மேற்சுவர்களில் பக்கவாட்டில் தொடர் ஓவியங்களாக இராமகாதை, பள்ளிகொண்ட பெருமாளிடம் தேவர்கள் முறையிடுதல், இராமருக்கு முடிசூட்டு விழா.பெண்களின் திருவிழாக்கால கொண்டாட்டங்கள், சீர்வரிசை, போர்முறைகள், அரச சபைகள், நீராடி மகிழும் பெண்கள் என கண்கொள்ளாக் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
மூலிகைச் சாறு, வண்ணக்கற்களின் பொடி, வஜ்ஜிரம் போன்றவற்றால் உருவாக்கிய வண்ணக் கலவையால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை என்கிறார்கள்.

போடி அரண்மனை பாளையக்காரர்கள் கலைக்கோட்டு முனிவரின் வழிவந்தவர்கள். ஓவியங்களில் அவர்களது திருமண முறைகள் ராமன்-சீதை காதல் காட்சிகள் என வரையப்பட்டுள்ளன.(1849-1862-ல்) போடியை ஆண்ட பங்காரு திருமலை போடைய நாயக்கர்தான் அரண்மனையைக் கட்டியவர்.

பழமை வாய்ந்த இந்த அரண்மனையை, மூலிகை ஓவியங்கள் நிறைந்த அரிய பொக்கிஷ தளத்தை இன்றைக்கும் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள், அரண்மனை வாரிசுகள். இந்த “லட்சுமி விலாசம்’ அவர்கள் வணங்கும் பூஜை அறையாகவும் புனிதமாகவும் உள்ளது.
இன்றைய தலைமுறைக்கு காணக் கிடைக்காத அரிய, அதிசய பொக்கிஷம் என்றால் அது போடி அரண்மனைதான்.


Comments

  1. Another information is regarding the art is the same technique(Mooligai Oviyangal) has been followed by ISHA foundation in its THEERTHA KUNDAM!!!!!

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்