சிங்கம் 2 திரை விமர்சனம்

       உலகத்தோட எந்த மூளையில நீ இருந்தாலும் உன் கண்ணு முன்னாடி வந்து நிப்பேன் -  இந்தியன் போலிஸ்ன்னு சிளிர்த்தெழுகின்ற வசனத்தை நிஜமாக்க, இரண்டரை மணி நேரத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
சிங்கம் 2 நிச்சயமாக வெற்றிப் படமாகிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. வழக்கம் போல தமிழ் சினிமாவில் தனது தனி அடையளத்துடன் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.சிங்கம் 2

        பில்லா 2 ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் முன்பு வந்த கதையின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாகமும் வெளிவருவது என்பது ஒரு புதிய மைல்கல் தான். நிழல் உலக தாதா மயில்வாகனத்தை கொன்றதோடு இல்லாமல் தூத்துக்குடி வழியாக ஆயுதம் கடத்துவதாக வந்த தகவலை கண்காணிக்க ரகசிய ஆபிசராக நியமிக்கப்பட்டிருந்த துரைசிங்கத்தின் அடுத்த மிசன் டேனி தான் சிங்கம் 2.

      தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு உயிரை கொடுத்திருக்கிறார் சூர்யா.. துரைசிங்கமாக இவர் கர்ஜிக்கும் போதெல்லாம் சினிமா ரசிகனுக்கு கையில் நரம்பு புடைத்தெழும் என்பதென்னவோ உண்மைதான். அழகான அனுஸ்காவின் காதலை சொல்லும் கண்கள் இன்னும் அழகாகவே இருக்கிறது. படத்திற்கு இளமையை சேர்ப்பதில் குறியாக இருந்திருக்கிறார் இயக்குனர். ஹரியை பொருத்த வரையில் வியாபாரமும் + புத்திசாலித்தனமும் என்கின்ற கொள்கையை கடைபிடிப்பவர் போலும் ரசிகர்களுக்கு ஹன்சிகா மூலம் விருந்தளித்திருக்கிறார். ஆனால் 12 வது படிக்கும் பொண்ணாக ஹன்சிகா(?) கொஞ்சம் கஸ்டப்பட்டே ஃபிட் ஆகிறார். 

       பள்ளி என்.சி.சி. ஆசிரியராக பணியாற்றியவாறே ரகசியமாய் ஆயுதக்கடத்தல் கும்பலை கண்காணிக்கிறார் துரைசிங்கம். ஊரின் முக்கிய புள்ளிகளான வில்லன் பாய்யும் ஹன்சிகாவின் சித்தப்பாவும் எதிரெதிரே முறைத்துக்கொள்ளும் முரட்டு கதாபாத்திரங்கள்.  அவர்கள் இருவருமே தான் தூத்துக்குடியில் நடக்கும் முக்கிய சமூக விரோத செயலுக்கு காரணகர்த்தாக்கள் என்கின்ற உண்மையை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்கு முன்பே, அவசர அவசரமாக துரைசிங்கம் தனது பதவியை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. சும்மாவே உறுமுகிற சிங்கம் யூனிபார்ம் மாட்டுனதுக்கப்பறம் சும்மாவா இருக்கும்..? பட படன்னு சும்மா பட்டாசு போல அடுத்தடுத்த குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துகிறார். இதனால்  கடுப்பான வில்லன்கள் சிங்கத்தை சுட்டுக்கொள்ள ஏற்பாடும் செய்யும் நேரத்தில் அவர்களுக்கும் மேலே இன்டர்னேசனல் டான் "டேனி" என்பனை நேரடியாக முட்டிக்கொள்கிறார். 

டேனிக்கும் பெருந்தலைகள் இருவருக்கும் என்ன தொடர்பு அவர்களின் சுயரூபம் என்ன என்பதை நிரூபிக்க சிங்கம் நடத்தும் மீதி வேட்டை தான் சிங்கம் 2.

       எரிமலை இந்த முறை ஏனோ வெடிக்காமல் கொஞ்சம் ஓரம் கட்டப்பட்டிருக்கிறது போலும், விவேக் சந்தடி சாக்கில் பிரமோசன் வாங்கி சூரியாவுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார். சரவெடியான சந்தானத்திற்கு தனி டிராக் கொடுத்திருந்தாலும் காட்சியின் வேகத்தை தடுத்து நிறுத்துவது போன்ற சராசரிக்கும் குறைவான காமெடிகளையே தந்து சந்தானம் நம நமத்து போகிறார் சூசையாக.

நாசர், ராதாரவி, விஜயகுமார் அனைவரும் முந்தைய பாகத்தில் ஏற்ற கதாபாத்திரங்களில் அப்படியே பொருந்தி விடுகிறார்கள்.       பின்னனி இசையை பொறுத்தவரையில் வெளுத்து வாங்குகிறார் தேவி ஶ்ரீ பிரசாத். ஆனாலும் வசனம் பற்றி தனிப்பட்ட முறையில் பாராட்டியே ஆகனும், சூரியாவின் அனைத்து வசனத்திற்கும் தியேட்டரில்  ரசிகர்களின் விசில் காதை பிளக்கிறது. 

டேனியாக வரும் ஆப்பிரிக்க நடிகர்(?) மிரட்டுகிறார். ஒளிப்பதிவாளர் பிரியனின் கேமராவில் சூரியா ஒவ்வொரு முறை பாயும் பொழுதும் திரையை கிழித்து கொண்டு  நம் மீது  விழுவாரோ என்றே தோரணையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார். அதிலும் உப்பளத்திற்கு வரிசையாக கார் வரும்  அறிமுக ஷாட் எல்லாம் சூப்பர்.

கிளைமேக்சில் தென்னாப்பிரிகாவில் டர்பன் நகரின் சாலைகளில் இவர் காமெரா நன்றாகவே ஓடி உழைத்திருக்கிறது, பாராட்டுகள் பிரியன் ! 

நெஞ்சில் சுடப்பட்ட விவேக் எந்த காயம்(!) கட்டுமே இல்லாமல் எப்படி அடுத்த  சீனிலே காமெடி பன்னுகிறார்.? இன்டர்நேசன் கிரிமினல்  பற்றி பிங்கர் டிப்பில் தகவல் சேகரிக்க இவ்வளவு ஈஸியா எப்படி முடியுது,,? ஹன்சிகாவின் காதலை முளையிலே கிள்ளாமல் இழுத்தடிப்பது..? ஹன்சிகாவை கொன்ன தலைவாசல் விஜயின்  கதி(?)  என்றெல்லாம் லாஜிக்கா யோசிக்காமல் சினிமாவை சினிமாவா பாக்கனும்னு போனீங்கன்னா சிங்கம் 2 உங்களை ஏமாற்றாது.

மொத்தத்தில் சிங்கம் 2  = பாய்ச்சல்