பணம் செய விரும்பு ! (பாகம்:1)

(இணையம் வழி தொழில் வாய்ப்புகள்,சம்பாதிக்கும் வழிமுறைகளை விளக்கும் புதிய தொடர்)

(தொடர்: 1 -  அறிமுகம்)

செய்க பொருளை செறுநர் செறுநர் செறுக்கருக்கும் 
எஃகதனிற் கூரியது இல்
                                                                                -திருக்குறள் -759
மைதியாக அறக்கருத்துக்களை சொல்லிய வள்ளுவனையே "செய்க பொருளை" என கட்டளை கலந்த வேகத் தொனியில் சீற்றமாக வார்த்தையை வெளிப்படுத்த செய்திருக்கிறது இந்த "பொருள்" (பணம்!!)

அதே வள்ளுவன் இன்னொரு குறளில் "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை" என்கிறான்., பொருளதிகாரம் என தனியொரு அதிகாரமே பிரிக்குமளவுக்கு பொருள் சார்ந்து கருத்துக்களை அள்ளிக் கொட்டியிருக்கிறான்.

காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா என்கிறார் கவியரசர் கண்ணதாசன்!

கவிஞர்களை மன்னர் புகழ்பாடி மடியேந்த வைத்ததும், மன்னர்களை நாடுபிடிக்க அலைய விட்டதும் இந்த நாசமாய்ப்போன காசு தானே !! 

பணம் பத்தும் செய்யும் என்கிறார்கள், இது செய்யும் வேலையைப் பார்த்தால் பத்துக்கு மேலேயும் செய்து கொண்டிருக்கிறது போல தெரிகிறது !!.

அறம் செய விரும்பு என்றார் அவ்வைப் பாட்டி அறம் செய்ய ஆசைப்பட்டால் கூட பணம் வேண்டி இருக்கிறது,  ஆக " பணம் செய விரும்பு " என்ற கருத்தையும் புது ஆத்திச்சூடியில்  சேர்க்க வேண்டியதாக இருக்கிறது ! :

சரி,

பணம் செய்யும் வேலைகளும்,லீலைகளும் யாவரும் அறிந்தது தானே !! நாம் தொடரை தொடருவோம்,

அறிமுகம் :
காசு...பணம்...துட்டு...மனி..மனி...


ல்லாவற்றிற்கும் இன்டர்நெட்-ன் துணையை நாடக்கூடிய ஒரு சமூகமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை !, படிப்பறிவில்லாத  பாமரரும் கூட கூகுளையும்,பேஸ்புக்கையும் அறிந்து வைத்திருக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறோம், ஈ.பி பில் , டெலிபோன் பில், செல்போன் ரீச்சார்ஜ், பொருட்களை வாங்குதல் என  நிறைய தேவைகளுக்கு நிறைய பேர் இணையத்தின் துணையை நாடுகிறோம் !.

ஓர் இடத்தில் நிறைய பேர் குழுமும் போது , அதைப் பயன்படுத்தி பணம் செய்ய ஒரு கூட்டம் உருவாகும் , இதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு திருவிழாச் சந்தைகள் !.

இன்டர்நெட் எனப்படும் இணையத்திலும் நிறைய பேர் குழுமும் நிலை ஏற்பட்டிருப்பதைப் பயன்படுத்தி பல பேர் நியாயமான முறையில் சம்பாதிக்கிறார்கள், அதே சமயம் பல பேர் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்

இன்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்க வழிகள் !!, ஈஸி மனி, எளிய முறையில் பணம், வேலையே செய்யாமல் காசு  என ஏராளமான இடத்தில்  விளம்பரங்களைப் போட்டு ஆசையைப் பயன்படுத்தி காசைப் பறிக்கிறார்கள்.

சமீபத்தில் "சதுரங்க வேட்டை " என ஒரு திரைப்படம் வெளிவந்தது, ஏமாற்றுவேலைகள் மூலம் பணம் பறிக்கும் ஆசாமியைப்பற்றிய கதை, நல்லதொரு விழிப்புணர்வுப் படமும் கூட அதை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும்.

கதாநாயகன் ஒரு இடத்தில் " ஒருதவங்கள்ள நாம ஏமாத்தனும்னா அவங்ககிட்ட இரக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது, அவங்களோட ஆசையை தூண்டனும்" என சொல்வார் . 100 சதவீதம் சரியான வார்த்தை, 

எதைத் தின்றால் பித்தம் தெளியும் , எப்படி காசை சேர்க்கலாம் என திரியும் கூட்டம் அந்த ஆசை வலைக்குள் குதித்து ஏமாறுகிறது !!

இந்த தொடர் பதிவு இணையம் வழியாக பணம் பறிக்கும் மோசடிகளையும், இணையும் மூலம் பணம் சம்பாதிக்கும் நேர்மையான, நம்பகமான வழிமுறைகளையும் சொல்லிக் கொடுக்க முயல்கிறது !

இந்த தொடரை வாசிப்பது மூலம் , கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் , எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் ! என கூறிவிட முடியாது இணையம் மூலம் நேர்மையான முறையில் போதுமான அளவு (அப்படி ஒரு அளவு இருக்கா? :) ) பணம் சம்பாதிக்க இந்த தொடர் நிச்சயம் உங்களுக்கு உதவும், தொடர்ந்து வாசியுங்கள்.

தொடர் வெளியாகும் நாட்கள்:

(புதன் , வியாழன் )


நாளைய தொடரில் இணைய வழி பணம் பறிப்பு மோசடிகள் பற்றிப் பார்க்கலாம்.


Comments