பணம் செய விரும்பு (பாகம்:2)

இ- பிஸினஸ் மோசடிகள் ஒரு பார்வை !இன்டெர்நெட் பலர் புழங்கும் இடமாகவும்,பணம் புழங்கும் இடமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது, அதே சமயம் இன்டர்நெட்-ல் ஏமாற்றுத்தனங்களும் அதிகமாகி இருக்கிறது.

சில பிரபல ஏமாற்று வழிமுறைகளையும், அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்க செய்யவேண்டிய வழிமுறைகளையும் இந்த பதிவில்  காணலாம்.

1.பரிசு மெயில்கள்:
உங்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று கூறி சில ஈமெயில்கள் உங்கள் மெயில் அக்கவுன்டிற்கு அல்லது எஸ்.எம்,எஸ்-ல் வருவதை கவனித்திருப்பீர்கள், இத்தகைய ஈமெயில்கள் அல்லது எஸ்.எம்.எஸ் கள் உங்களது வங்கி கணக்கு விவரங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொண்டு ஏமாற்றும் வகையைச் சார்ந்தவை, இவைகளை புறக்கணிப்பது உத்தமம்.

2.ஒரே மாதத்தில் பணக்காரராகும் வாக்குறுதிகள்:

பணம் சம்பாதிப்பது என்பது ஒரு கலை, எல்லாவற்றிற்கும் மேல் அது உழைப்பு சார்ந்தது, எளிய முறையில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள், சீக்கிரம் பணக்காரராகும் வழி போன்றவையெல்லாம் உதார் வகை !! அதை சொல்பவர் வேண்டுமானால் பணக்காரர் ஆகலாம் நம்பி பணம் கொடுப்பவர் ஏமாளி தான் ஆக வேண்டி இருக்கும்.

3.குறைந்த வட்டி கடன் கள்:

குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் எனக் கூறி உங்களிடம் வட்டிப் பணத்தை முன்கூட்டியே கேட்பார்கள், நீங்களும் நம்பி கொடுத்தீர்கள் என்றால் பணத்தை வாங்கியதும் பறந்து விடுவார்கள்.

4.ஆள் சேர்த்தால் காசு:

எங்கள் வெப்சைட்டில் உங்கள் நன்பர்களை சேர்த்துவிட்டால் பணம் கொடுக்கிறோம் என்று சில வெப்சைட்கள் வாக்குறுதிகள் கொடுக்கின்றன, அதில் பல வெப்சைட்கள் மோசடி ரகம், இந்த ரக வெப்சைட் ஒன்றில் எனது கணக்கில் 1000 க்கும் மேல் பணம் காட்டுகிறது ஆனால் அதை பேங்க் அக்கவுன்டிற்கோ, வீட்டிற்கு செக் காகவோ மாற்ற முடியவில்லை. இந்த வகையில் நம்பகமான சில வெப்சைட்களும் உள்ளன, அடுத்தடுத்த பதிவுகளில் இவைகளைப்பற்றிப் பார்க்கலாம்.

5.விளம்பரங்களைப் பார்வையிட்டால் காசு:

இந்த வகையில் நம்பகமான சில தளங்கள் உள்ளன, அதே சமயம்  மோசடி செய்யும் தளங்களும் இணையத்தில் உலவுகின்றன. ஒரு இணையத்தளத்தை நம்பி வேலையில் இறங்கும் முன் அது நம்பகமானதா என கூகிள் தேடலில் ஒரு குட்டி ஆராய்ச்சி செய்துவிட்டு துவங்குவது உத்தமம்.

6. சி.டி மூலம் கற்றுக்கொடுப்பது:

இவர்கள் சி.டி. போட்டு சொல்லிக்கொடுக்கும் விசயங்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன, இவர்களிடம் ஐநூறு, ஆயிரம் என பணம் கட்டி ஒரு வீடியோவையும் , சில பல வெப்சைட் லிங்க் களையும் வாங்கி ஏமாற வேண்டாம் என தொழிற்களம் வாசகர்களை எச்சரிக்கை செய்கிறேன்.


7.சோஷியல் ஹேக்கிங்க்: 

உங்களின் கிரெடிட் கார்ட் ,டெபிட் கார்ட், பாஸ்வேர்ட் போன்றவைகளை ஒரு வெப்சைட் கேட்கிறது என்றால் அது நம்பகமானதா என ஒன்றுக்கு பல முறை சோதித்துக்கொள்ளுங்கள், அந்த வெப்சைட் பாதுகாப்பானதா, மோசடியானதா என கண்டறிந்துவிட்டுப் பின்பு தகவல்களைக் கொடுப்பது நலம்.

8.பிஷிங்க் (phishing)

இணைய முகவரியை கவனிக்கவும்


உங்களிடமிருந்து பாஸ்வேர்ட்களையும், பின் நம்பர்களையும் வலை விரித்து காத்திருந்து கறக்கும் குறுக்கு வழிமுறையே பிஷிங்க், உதாரணமாக உங்கள் பேங்க் வெப்சைட் மாதிரியே ஒரு போலியான வெப்சைட் ஒன்றை நிறுவி, அதன் மூலம் உங்களின் பாஸ்வேர்ட், வங்கி விவரங்கள் போன்றவற்றை திருடுவது.

 உங்களுக்கு வரும் ஈமெயில்களில், பிற இணையத்தளங்களில் இருக்கும் வங்கி சம்பந்தமான (இணைப்புகளை ) லிங்க் களை க்ளிக் செய்யும் போது URL எனப்படும் இணைய முகவரி சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.


அடுத்தப் பதிவில் ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கான முன் தயாரிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம் .

Comments