பங்குச்சந்தையூம் பணவேட்டையூம் -1 இதை ஒரு தொடராக எழுத விரும்புகிறேன்.இந்த தொடரில் பங்குச்சந்தையில் நடக்கும் வினோதமான பழக்க வழங்களும் குறுக்கு வழியில் எப்படி சில பேர் மட்டும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றும் ஏதாவது புதுப்புது வழிகள் பணவேட்டையாடுவதற்கு இருக்கிறதா என்றும் கவனித்துப் பார்த்து அதனை உங்களுக்கு தர விரும்புகிறேன்.இடையிடையே பங்குச்சந்தை மனிதர்கள் பற்றியூம் எழுதுவேன்.
 இப்போது எழுதப்போவது ஒரு சடுகுடு மனிதரைப் பற்றி.
 இவருக்கு வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும்.பெயர் வேண்டாம்.சும்மா பேருக்கு இவரது பெயரை ஷேர்ஹாசன் என்று வைத்துக் கொள்வோம்.வெளுத்த நீண்ட தலை முடி பாகவதர் இளமை ஊஞ்சலாடுகிறது காலத்து ஹேர்ஸ்டைல்.நன்றாக பிரில்கிரிம் போட்டு பராமரித்திருப்பார்.எப்போதும் ஓவியர் ஜெயராஜ் பெண்களுக்குப் போட்டு விடும் வாசகங்கள் அடங்கிய ரவூன்டு காலர் டி ஷர்ட்தான் அணிந்திருப்பார்.சொல்லவே வேண்டாம்.;சாயம் வெளுத்துப் போன ஐசி ப்ளு டிஷர்ட்தான் போடுவார்.காலில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட லீகூப்பர் ஷூக்கள் அணிந்து பந்தாவாக வருவார்.
 இது பல வருடங்களுக்கு முன்னார் நடந்தது.
 க்வான்டின் டாரன்டினோவின் படங்களில் வரும் துறுதுறு கேரக்டர் போல வரும்போதே "விஜய் சார் இன்னிக்கி செம வேட்டை ஆடனும்.என்ன சொல்றான் .....என்று ஒரு பங்கின் பெயரைச் சொல்லிக் கேட்டுக் கொண்டே வருவார்.
 அவர் வருவதற்கும் சந்தை துவங்குவதற்கும் சரியாக இருக்கும்.ஷேர் ஹாசன்  ஆர்டரைப் போடச் சொல்லி டீலரிடம் அருகே போய் நிற்பார்.அவர் வந்து விட்டாலே அன்றைக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற ஆவலில் மற்ற முதலீட்டாளர்கள் பேசாமல் வாயடைத்துப் போய் அமர்ந்திருப்பார்கள்.ஏசியின் சன்னமான ர்ர்ர் சப்தம் கூட சரியாகக் கேட்கும்.
"அடிங்க சார் அவனை" என்பார்.
க்வன்டின் டாரன்டினோ ஆட்டம் ஆரம்பமாகி விடும்.
 ஒரு குறிப்பிட்ட பங்கில் ஆவேசமாக ஷார்ட் அடிக்கச் சொல்வார்.சும்மா இல்லை.பத்தாயிரம் எண்ணிக்கைக்கு.ஆனால் அவர் எடுத்துக் கொள்ளும் பங்கின் விலை ரூ 10 என்ற அளவில்தான் இருக்கும்.ஷார்ட் அடித்த உடனே கவர் செய்யச் சொல்லி ஒரு பையிங் ஆர்டரும் போட்டு அதை கவர் செய்து விடுவார் கொளுத்த லாபத்துடன்.
 ஷேர்ஹாசன் செய்வது இதைத்தான்.
 வரும்போதே என்னிடம் "விஜய் சார்..." என்று மூன்று விரல்களை உயர்த்துவார்.எனக்குப் புரிந்து விடும்.அவர் சொல்லும் பங்கின் மூன்று நாட்களுக்கான டே-ஹை விலையை அவருக்குச் சொல்ல வேண்டும்.அவர் உடனே அந்த மூன்று நாட்களின் டே-ஹை விலையை விட (அந்த விலைக்கு மேல் இன்று ஓப்பன் ஆகியிருக்க வேண்டும்.அவர் ராசிக்கு ஆகி விடும்) சற்று கூடுதலாக ஒரு விலையைப் போட்டு உடனே அந்த விலைக்கு சற்று கீழாக ஒரு விலைப் போட்டு கவர் செய்து விடுவார்.
 சந்தை துவங்கிய சில நிமிடங்களில் லாபம் பார்த்தவர் இவர் ஒருத்தர்தான்.அதன்பின் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் யாரும் ஆர்டரைப் போட்டாலும் அது போல பெரிய வெற்றியையோ லாபத்தையோ தராது.
 ஆரம்பத்திலயே அடிக்க வேண்டும்சார்.அவனைப் போட்டு என் கால்ல மிதிக்கனும் என்பார் வருத்தப்படாத வாலிபர் சங்கத்து காதல் தண்டபாணி போல.
 தினம்தினம் இதையேதான் கடைபிடிப்பார்.
 மூன்று நாட்களுக்கான டே-ஹையை விட சிறிது மேலாக ஒரு விலையைப் போட்டு ஷார்ட் அடித்து விட்டு உடனே அதற்கு சிறிது கீழான விலையில் வாங்கி கணக்கை நேர் செய்து விடுவது.
 அதன்பின் டிரேடிங் செய்ய மாட்டார்.
 உட்கார்ந்து பேக் ஆபீஸ் பெண்களுடன் அரட்டை அடித்து விட்டு வெளியே கிளம்பி விடுவார்.ஒருநாள் அவரிடம் வெளியே நின்ற டீ சாப்பிட்டுக்கொண்டே சமோசாவை கடித்தபடி கேட்டேன்.
"ஏன் சார் இப்படி"
"இந்த வயசுல எதுக்கு டிரேடு பண்றேன்.அதுவூம் தினமும் எதுக்கு ஷார்ட்செல்லிங்னுதானே கேட்கறிங்க விஜய்.உங்ககிட்ட பழகிட்டதுக்காக சொல்றேன்.நான் சென்ட்ரல் கவர்கமன்ட்ல ஆபீசர் ரேங்க்ல வேலை பார்த்து ரிட்டயர்டானவன்.மனைவி இருக்கா.ரெண்டு பசங்க.ஒரு பொண்ணு.எல்லாருமே நல்ல நிலைமையில இருக்காங்க.இவன் ரிட்டயர்டானவன்தானே.கிழவன்தானே.பூட்டகேசுன்னு இளக்காரம்.எக்சர்சைஸ் யோகான்னு பண்ணி திடமா இருக்கேன்.என்னை ஒரு சுமையா என்பிள்ளைங்களே நினைக்கக் கூடிய காலம் வந்தாச்சுன்னு அவங்க பேச்சிலயே தெரியூது.நான் ஒண்ணும் உபயோகமில்லாதவன்னுதான் தினமும் வர்றேன்.டிரேடு பண்றேன்.ஆனா லாங் போக மாட்டேன்.தினம் ஷார்ட் செல்லிங்தான்.காட்டு அடிதான்.ஜாங்கோ மாதிரி சுடுவேன்தான்.காரணம் என் கோபத்தையூம் நானும் மனசுள்ள உபயோகமுள்ள ஆள்தான்னு எதிர்வினையை காட்டறதுக்காகத்தான் ஷார்ட் அடிச்சு தள்றேன்.என் வயசு ஆட்களோட கட்டைச் சுவத்துலயோ கவர்மன்ட் லைப்ரரியிலயே உட்கார்ந்து வெட்டி அரசியல் பேச என்னால முடியாது.ஏன்னா ஐம் யூஸ்ஃபுல்" என்று விடைபெற்று நடந்து போனார்.அவர் போவதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்.
 அவர் கையில் துப்பாக்கி மட்டும்தான் இல்லை.மற்றபடி அவர் க்வன்டைன் டாரன்டினோ படத்து ஹீரோதான்.
Dear readers, kindly visit to: http://bullsstreetdotcom.blogspot.in

Comments